Published:Updated:

மாலினுவா

அபுபக்கர் அல் பாக்தாதி
பிரீமியம் ஸ்டோரி
அபுபக்கர் அல் பாக்தாதி

THE MOST POPULAR DOG

மாலினுவா

THE MOST POPULAR DOG

Published:Updated:
அபுபக்கர் அல் பாக்தாதி
பிரீமியம் ஸ்டோரி
அபுபக்கர் அல் பாக்தாதி

சிரியாவில் தன் சட்டத்தை மீறுபவர்களுக்கு உடனடியாக மரணதண்டனை, பிணைக்கைதி களைக் கழுத்தறுத்துக் கொல்லுதல், பெண்களை பாலியல் சித்ரவதை செய்து அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவவிடுவது என, உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருந்தவர் ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி. இவர், அமெரிக்க ராணுவத்தால் சமீபத்தில் கொல்லப்பட்டார். அதில் மிக முக்கிய பங்காற்றி யிருக்கிறது ஒரு ராணுவ நாய்!

மாலினுவா
மாலினுவா

உலகின் மிக முக்கியமான பயங்கரவாதிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பாக்தாதியை, அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக வலைவீசித் தேடியது. ஆனாலும், பிடிக்க முடியவில்லை. சாட்டிலைட்டுகளாலேயே கண்டுபிடிக்க முடியாத பாக்தாதியின் இருப்பிடத்தை, `கே-9 காப்ஸ்’ என்ற படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு மோப்ப நாய்தான் துல்லியமாகக் கண்டறிந்து, பாக்தாதியைத் துரத்தியது. அப்போது, வழியே இல்லாத ஓரிடத்தில் அவர் சிக்கிக்கொண்டார். இனி தப்பிக்கவே முடியாது என்ற சூழ்நிலையில், அவர் அணிந்­தி­ருந்த குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த நாயின் புகைப்படத்தை தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுப் புகழ்ந்துள்ளார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அதன் பெயரை வெளியிடவில்லை. பெல்ஜிய மாலினுவா வகையைச் சேர்ந்த நாய் என்பது மட்டும் முதலில் தெரியவந்தது. அடுத்த சில மணி நேரங்களில், அந்த நாயின் பெயர் `கோனன்’ என்பதில் தொடங்கி நாயின் மொத்த ஜாதகத்தையும் அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டன. பிரபலமான காமெடியனும் ஹாலிவுட் நடிகருமான கோனன் ஓ பிரியானுக்குப் பெருமை சேர்க்கும்வகையில் அந்தப் பெயர் சூட்டப்பட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் பேசின. ஒரே இரவில் அமெரிக்காவின் மோஸ்ட் பாப்புலர் நாயாக `கோனன்’ மாறியது.

சேட்டிலைட்டில் தெரியும் நாய் துரத்தும் காட்சி
சேட்டிலைட்டில் தெரியும் நாய் துரத்தும் காட்சி

இந்த மாலினுவா வகை `கோனன்’, பார்ப்பதற்கு ஜெர்மன் ஷெப்பர்டு நாய் வகையைப்போலவே இருக்கக்கூடியது. புத்திசாதுர்யமும் உத்தரவுக்குக் கீழ்படிந்து நடக்கும் குணமும்கொண்டது. அதேசமயம் மிகுந்த ஆவேசத்தோடு எதிரிகளைத் தாக்கி, கடித்துக் குதறக்கூடியது. இந்த வகை நாய்கள் குள்ளமானதாகவும், அதிக முடிகள் இல்லாததாகவும், மின்னல் வேகத்தில் பாயக்கூடியதாகவும் இருக்கும். இதன் உடல்நிலை, வெப்பம் மிகுந்த சூழலில்கூட தாக்குப்பிடிக்கக் கூடியது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்ற இந்த நாய்கள் ஏற்றவை. வளைகுடாவில் கோனன் போலவே மாலினுவா வகையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நாய்கள் அமெரிக்கப் படைகளில் பணியாற்றுகின்றன.

ஜெர்மன் ஷெப்பர்டு மற்றும் மாலினுவா வகை நாய்களை, `டூயல் பர்ப்பஸ் நாய்கள்’ என்றே அழைக்கின்றனர். அபார மோப்ப சக்தி, கண்காணிப்பிலும் கில்லி, தாக்குதலிலும் அதிரடி காட்டக்கூடியவை என்பதால், அமெரிக்க ராணுவத்தில் மாலினுவா நாய்களுக்கு எப்போதுமே தனி மரியாதை.

கோனன் போலவே அமெரிக்காவின் பல்வேறு நடவடிக்கைகளில் வெவ்வேறுவிதமான நாய்கள் உதவியுள்ளன. இப்போது கொல்லப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதி பாக்தாதியைப்போலவே ஒசாமா பின்லேடனைப் பிடிக்கவும் அமெரிக்க ராணுவம் மோப்ப நாய் ஒன்றைப் பயன்படுத்தியது. அதன் பெயர், கெய்ரோ. `சீல் டீம் 6’ என்ற குழு, பின்லேடனைப் பிடிக்க பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றது. அந்தக் குழுவில் சென்ற நாய்தான், கெய்ரோ. இந்த நாயும் கோனனைப்போலவே மாலினுவா வகையைச் சேர்ந்ததுதான்.

பாக்தாதி, வெடிகுண்டை வெடிக்கச் செய்தபோது...
பாக்தாதி, வெடிகுண்டை வெடிக்கச் செய்தபோது...

பயிற்சிபெற்ற ஐந்து நாய்கள், 1908-ம் ஆண்டில்தான் நியூயார்க் காவல்துறையில் முதன்முதலில் சேர்க்கப்பட்டன. பிறகு படிப்படியாக, ராணுவத்திலும் நாய்கள் இணைத்துக்கொள்ளப்பட்டன. முதல் உலகப்போரின்போது தகவல்தொடர்புக்காக மட்டுமே சுமார் பத்து லட்சம் நாய்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் பலவும் அமெரிக்காவைச் சேர்ந்தவை. போர் முடிந்தபோது அவற்றில் பெரும்பான்மை கைவிடப்பட்டன. இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது போருக்காக நாய்களின் தேவை அதிகரித்தது. அந்தச் சமயத்தில் அமெரிக்க `கென்னல் அசோசியேஷன்’ என்ற அமைப்பு, மக்களிடமிருந்து நாய்களைப் பெற்று ராணுவத்தில் இணைத்துக் கொண்டது. இப்படி இணைக்கப்பட்ட நாய்களின் படை `கே-9 காப்ஸ்’ என்ற படைப்பிரிவாக உருவானது. இன்றுவரை அமெரிக்க ராணுவத்தின் முக்கியமான பிரிவாக இந்த கே-9 காப்ஸ் உள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நாய்கள் எல்லாமே ஒரே வேலையைச் செய்வதில்லை. வேலையின் அடிப்படையில் பல பிரிவுகள் உண்டு. சென்ட்ரி வகை, வெறும் பாதுகாவலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மெசஞ்சர்கள், போர்ச்சூழலில் தகவல்களை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்ல பயன்படுத்தப்படுபவை. ஆள் நுழைய முடியாத குகைகளுக்குள் செல்லக்கூடியவை, டனல் நாய்கள். போரில் காயமடைந்த தன் நாட்டு வீரர்களையும் இறந்தவர்களையும் தேடிக் கண்டறிந்து தகவல் தரக்கூடியவை கேஷுவாலிட்டி நாய்கள். டிடெக்டர் நாய்களில் வெடிகுண்டுகளைக் கண்டறிவது, போதைமருந்துகளைக் கண்டுபிடிப்பது, மனிதர்களைத் தேடிப்பிடிப்பது எனப் பலவகை உண்டு.

அபுபக்கர் அல் பாக்தாதி
அபுபக்கர் அல் பாக்தாதி

போலீஸ் நாய்களைவிட ராணுவத்தில் சேர்க்கப்படும் நாய்களுக்கு, கடுமையாகப் பயிற்சியளிக்கப்படுகின்றன. ஒரே பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்வது, பொறுமையாக இருப்பது, பல்வேறு சூழ்நிலைகளில் பணிபுரிவது, முக்கியமான ஐந்து ரகசியக் கட்டளைகளைப் புரிந்துகொள்வது, சொல்பேச்சு கேட்பது எனப் பலகட்ட பயிற்சிகளை நாய்கள் பெற வேண்டும். இதற்காக நாள் ஒன்றுக்கு ஐந்து மணி நேரம் வரை செலவிடப்படுகிறது. இப்படி பலகட்ட சோதனைகளைக் கடந்த பிறகே ராணுவத்தில் நாய்கள் சேர்க்கப்படுகின்றன.

மேற்கூறிய எல்லா பயிற்சிகளும் ஆரம்பகட்டப் பயிற்சிகள்தான். தவிர, பாராசூட் உதவியுடன் விமானத்திலிருந்து கடலில் குதிப்பது போன்ற கடுமையான பயிற்சிகளும் இந்த நாய்களுக்கு வழங்கப்படுகின்றன. விமானத்திலிருந்து குதிக்கும் பயிற்சிபெற்ற நாய்கள்தான், முக்கியமான ஆபரேஷன்களில் பயன்படுத்தப்படும்.

பல்வேறு வகை நாய்கள் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டாலும், மாலினுவா வகை நாய்களே விமானத்திலிருந்து குதிப்பதற்கான பயிற்சிகளைப் பெறுகின்றன. இந்த வகை நாய்கள், ஜெர்மன் ஷெப்பர்டு நாய்களைவிட எடையில் மிகவும் குறைவு. விமானத்திலிருந்து குதிக்கும் வீரருடன் நாயையும் இணைத்துவிடுவார்கள். வீரருடன் சேர்ந்தே நாய்கள் குதிக்கும். அதற்காக பிரத்யேகமான உபகரணங்களும் உடைகளும் நாய்களுக்கு அணிவிக்கப்படும்.

1991-ல் வளைகுடா போரில் அமெரிக்கா இணைந்தபோதுதான் நாய்களுக்காக சி.ஐ.ஏ-வின் ஒரு பிரிவாக கே-9 காப்ஸின் பிரத்யேகப் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த நாய்களுக்கு ரெகுலர் வேலைகளோடு பிரத்யேகமான வெடிகுண்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பல்வேறு வகையான வெடிமருந்துகளை மோப்பம்பிடித்துக் கண்டுபிடிக்க, இவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இவை ராணுவத்தில் மட்டுமல்லாது முக்கியமான விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு, பல்வேறு குண்டுவெடிப்புகளைத் தடுக்கவும் குற்றவாளிகளைப் பிடிக்கவும் உதவியுள்ளன. இந்தப் பிரிவைச் சேர்ந்ததுதான் இப்போது பாக்தாதியைச் சுற்றிவளைக்க உதவியம், கோனன்.

‘மனிதனைக் காக்க உயிரையே பணயம்வைத்துப் போராடும் இந்த நாய்களுக்கும் ஓய்வுகாலம் வேண்டும். அவை நாம் தரும் உணவுக்காக மட்டுமே நமக்காகப் போராடுகின்றன. அவற்றின் எதிர்காலத்தை நாம் காப்பாற்ற வேண்டும்’ என்ற குரல்கள் உலகெங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இப்போது `கோனன்’ பிரபலமடைந் துள்ளதையடுத்து, இந்தக் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது.