Published:Updated:

பீர் வாங்க காசு கேட்ட மாணவரைத் திக்குமுக்காடச் செய்த மக்கள்!

Carson King
Carson King ( @CarsonKing2 twitter )

ஜாலியாக ஒருவர் செய்த விஷயம், பலரும் கைகொடுக்க சேவையாக மாறியிருக்கிறது!

அமெரிக்காவில் விநோதங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை. அப்படி கார்சன் கிங் என்ற 24 வயது அமெரிக்க இளைஞர் நகைச்சுவையாக ஆரம்பித்த செயல் ஒன்று, பலருக்கு நன்மையைச் செய்திருப்பது சமீபத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

அமெரிக்காவில் ரக்பி விளையாட்டு மிகப்பிரபலம். அங்கு, `புட்பால்' என்று அழைக்கப்படும் இந்த விளையாட்டுக்குச் சிறுவர்கள்முதல் பெரியவர்கள்வரை ஏராளமான ரசிகர்கள் உண்டு. சுருங்கச் சொல்வதானால், இந்தியாவில் கிரிக்கெட் போல, அமெரிக்காவில் இந்த விளையாட்டுக்குத் தீவிர ரசிகர் படை உண்டு. அப்படி பிரபல விளையாட்டு சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும், `காலேஜ் கேம் டே' என்ற `புட்பால்' விளையாட்டு நிகழ்ச்சி, அயோவாவில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற, நண்பர்களுடன் அதைக் காணச் சென்றிருக்கிறார் கார்சன் கிங். ஒருவேளை, தாம் தொலைக்காட்சியில் தெரிந்தால் பயன்படும் என்று விளையாட்டாக ஒரு பதாகையையும் கையில் எடுத்துச் சென்றிருக்கிறார்.

Carson King
Carson King
nypost.com

தொலைக்காட்சியில் அவரைக் காட்டவும் உடனடியாக அந்தப் பதாகையை உயர்த்திப் பிடித்திருக்கிறார். அவர் கையில் பிடித்திருந்த பதாகையில், ``புஷ் லைட் பீர் வாங்க வேண்டும்" என்று எழுதி, அதோடு இணையப் பணப் பரிவர்த்தனை செய்யும் `வெண்மொ' எனும் செயலியின் ஐடியையும் எழுதியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில நிமிடங்களிலேயே, இவரது அக்கவுன்டுக்குப் பணம் வரத் தொடங்கியிருக்கிறது. இவரது விளையாட்டை ரசித்த சிலர் இவருக்குப் பணம் அனுப்ப, அடுத்த அரைமணி நேரத்தில் அவரது கணக்குக்கு 400 டாலர் வரை நன்கொடை வந்திருக்கிறது. நன்கொடைகள் 1,000 டாலரைத் தாண்டவும் நடப்பதை நம்ப முடியாத அவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தச் செய்தியைப் பதிவிட்டார். அதில், அனைவரும் அனுப்பிய பணத்தில், ஒரு கேஸ் பீர் வாங்க தனக்குத் தேவையான 15 டாலர் பணத்தைத் தவிர மற்ற பணத்தையெல்லாம் அப்பகுதியின் சிறுவர் மருத்துவமனைக்கு நன்கொடையாக அளிப்பதாக அறிவித்தார்.

Donation
Donation

அவ்வளவுதான், அனைவருக்கும் கார்சன் கிங்கின் செயல் பிடித்துப்போக, இந்தச் செய்தி அதிகம் பகிரப்பட்டு தற்போது வரை 67,000 டாலருக்கு மேல் கிங்கிற்கு நன்கொடைகள் வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து மாத இறுதிவரை அவரது வங்கிக் கணக்கில் நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி டிரெண்ட் ஆக, இதை அறிந்த புஷ் லைட் பீர் நிறுவனம், கார்சன் நன்கொடை அளிக்கும் அதே தொகையை தாங்களும் அந்தச் சிறுவர் மருத்துவமனைக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. வெண்மொ பணப் பரிவர்த்தனை நிறுவனமும், `நாங்கள் நிறைய நல்ல கதைகளைக் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவே எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானது' என்ற ட்வீட்டுடன், கார்சன் கிங் அந்த மருத்துவமனைக்கு எவ்வளவு தொகை அளிக்கிறாரோ அதே அளவு நன்கொடையைத் தர அவர்களும் தருவதாக ட்வீட் செய்திருக்கிறார்கள். ஆக, தற்போதுவரை அந்த மருத்துவமனைக்கு இதன்மூலம் இரண்டு லட்சம் டாலருக்கு மேல் நன்கொடை கிடைக்கப்பெற்றிருக்கிறது.

Carson King
Carson King
@CarsonKing2 twitter

இதுகுறித்து தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்திருக்கும் கார்சன் கிங், தாம் இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை எனவும், தன்னால் பல குழந்தைகளுக்கு உதவ முடிவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். அயோவா மாகாண மக்களின் இந்த உதவும் குணத்தைப் பலர் பாராட்டிவருகிறார்கள். சமூக வலைதளங்கள் பலவாறு விமர்சிக்கப்பட்டாலும், பலரின் அன்பையும், உதவும் கரங்களையும் ஒன்றிணைக்கும் வேலையை இணையமும், ஊடகமும் வெற்றிகரமாகச் செய்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு