ஜூல்ஸ் வெர்ன் எழுத்தாளரின் 'Around the world in 80 Days' நாவலின் கதாநாயகனைப் போல நான் உலகை 80 நாட்களில் சுற்றப் போகிறேன் எனச் சவால் மட்டும் தான் விடவில்லை, ஆனால் அதை சாதித்துக் காட்டியிருக்கிறார் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த சாரா ரூதர்போர்ட். இவருக்கு வயது 19. இவரின் பெற்றோர் இருவரும் பைலட்கள் என்பதால் விமானத்தோடான தொடர்பு, பைலட் ஆகும் ஆசையை உருவாக்கியிருக்கிறது. பிரிட்டிஷ்-பெல்ஜியம் என இரட்டை குடியுரிமை கொண்ட சாரா 14 வயது முதல் விமானியாக பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். 2020-ல் விமானியாகும் லைசன்ஸ் கையில் வரவே, முதுகில் பையைத் தூக்கி கொண்டு உலகைச் சுற்றப் புறப்பட்டுவிட்டார். தனி விமானத்தில் ஆகஸ்ட் 18,2021 அன்று தொடங்கிய இவர் பயணம் ஜனவரி 20,2022 இல் முடிவு பெற்றிருக்கிறது.

32000 மைல்கள், 60க்கும் மேற்பட்ட நிறுத்தங்கள், 52 நாடுகள், 5 கண்டங்கள் எனச் சுற்றியவர் தமிழ்நாட்டின் கோவைக்கும் வந்திருக்கிறார். தனக்கு ஸ்பான்சர் செய்த கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தாருக்கு நன்றி சொல்லி விட்டு விமானத்தில் பறந்து சென்றார். ஆண்களைக் காட்டிலும் விமான ஓட்டிகளில் பெண்கள் சதவிகிதம் மிகக்குறைவாக உள்ளது என வருத்தம் தெரிவித்திருக்கிறார் சாரா. தன்னுடைய இந்தப் பயணம் பெண்கள் அதிகளவில் விமானத்தைக் கையாளும் இடத்திற்கு வர வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். தன்னுடைய அனுபவங்களைத் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சைபீரியாவின் கடும் பனிப்பொழிவு, மெக்ஸிகோவில் நிலநடுக்கம் எனத் தன் பயணத்தில் எதிர்பாராதவற்றைத் தாண்டி வெற்றிகரமாக பெல்ஜியம் திரும்பிய போது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் ஆச்சரியமடைந்து விட்டார். பெல்ஜியம் ரெட் டெவில்ஸ் விமானக் குழுவிலிருந்து நான்கு விமானங்கள் அவரை வரவேற்கும் விதமாக வானில் இணைந்து பறந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதான Shaesta Wais என்பவர் உலகைச் சுற்றி பறந்த முதல் பெண்ணாக அறியப்பட்டார். ஆண்களில் 18 வயதில் உலகைச் சுற்றிப் பறந்தவர் Mason Andrews . ஆண்களுக்கு சமமாக இந்தச் சாதனையைக் குறைந்த வயதில் செய்துக் காட்டியவர் உள்ளிட்ட பல்வேறு ரிகார்ட் பிரேக் சாதனைகளை நிழ்த்தியிருக்கிற சாரா, விண்வெளி வீரராவதே தன் லட்சியம் என்கிறார். "எனக்கு சகாசம் பிடித்தமானது. விண்வெளி அதற்கான களம் என நினைக்கிறேன்" என்று சிரிக்கிறார். லடாக், கோவா எனச் சின்னதாகவே யோசிக்காதீங்க மக்களே. உலகைச் சுற்ற புறப்படுங்க.