Published:Updated:

`வெள்ளை மாளிகை டு டெல்லி; ட்ரம்ப்பை சீண்டும் சி.என்.என் பத்திரிகையாளர்!' - யார் இந்த ஜிம் அகோஸ்டா?

ட்ரம்ப் - அகோஸ்டா
ட்ரம்ப் - அகோஸ்டா

டெல்லியில் ட்ரம்ப் கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் சி.என்.என் பத்திரிகையாளருக்கும் அதிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவரது குடும்பத்தினருடன் முதல் முறையாக இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். கடந்த 24-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்துக்கு வந்து இறங்கிய அவர் சபர்மதி ஆசிரமம், உலகின் மிகப் பெரிய கிரிகெட் மைதானம், தாஜ்மகால் போன்ற பல இடங்களுக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து மறுநாள் 25-ம் தேதி காலை குடியரசுத் தலைவர் மாளிகை, மகாத்மா காந்தி நினைவிடம் ஆகிய இடங்களுக்குச் சென்றார். பின்னர் இரு நாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்ப்
குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்ப்
AP

இது முடிந்த பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் இந்தியப் பிரதமர் மோடியும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். பின்னர் ட்ரம்ப் மட்டும் தனியாகச் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார். அப்போது, காஷ்மீர் பிரச்னை, தீவிரவாதம், பாகிஸ்தானிலிருந்து வரும் பயங்கரவாதம், குடியுரிமை சட்டத்திருத்தம் போன்ற பல விஷயங்கள் பற்றிப் பேசினார். இந்த நிகழ்வின் போது சி.என்.என் தொலைக்காட்சி செய்தியாளருக்கும் அதிபர் ட்ரம்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

`அமெரிக்க அதிபர் தேர்தலில் வெளிநாட்டுத் தலையீட்டை நிராகரிப்பதாக உறுதியளிக்க முடியுமா? உளவுத்துறை அனுபவம் இல்லாதவரைத் தேசிய உளவுத்துறை இயக்குநராக நியமித்துள்ளீர்களே அது சரியா? என்று சி.என்.என் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஜிம் அகோஸ்டா கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டவுடனேயே கோபமடைந்த ட்ரம்ப், `எனக்கு எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை. எந்த நாடும் எனக்கு உதவி செய்யவில்லை’ என்று பதில் அளித்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

அப்போது, தவறாகத் தகவல் தெரிவித்ததற்காக முன்னதாக சி.என்.என் மன்னிப்பு கேட்டதை ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். தொடர்ந்த அகோஸ்டா, ``சில சமயங்களின் அமெரிக்க அதிபர் கூறும் உண்மைகளை விட மிகவும் சிறப்பான உண்மைத் தகவல்களை நாங்கள் வழங்கி வருகிறோம்” என அதிரடியாகப் பேசினார். இதனால் கடுப்பான ட்ரம்ப், ``உங்கள் பதிவுகளைப் பற்றி நான் சொல்கிறேன். அது மிகவும் மோசமாக உள்ளது இதற்கு நீங்கள் வெட்கப்படவேண்டும்” என்று கூறினார்.

இதற்குப் பதில் அளித்த அகோஸ்டா, ``நான் எதற்காகவும் வெட்கப்படவில்லை எங்கள் நிறுவனமும் வெட்கப்படவில்லை” என்று தெரிவித்தார். சி.என்.என் தொலைக்காட்சி மிகவும் மோசமானது என்ற பெயரை எடுத்துள்ளதாகவும் அதன் நேர்மை பற்றியும் ட்ரம்ப் கேள்வி எழுப்பினார். இவர்களின் தொடர் வாக்குவாதத்தால் செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு நிலவியது.

ஜிம் அகோஸ்டா
ஜிம் அகோஸ்டா
Twitter

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அகோஸ்டாவும் மோதிக்கொள்வது இது முதல் முறையல்ல. முன்னதாக நடந்த ஒரு வாக்குவாதத்தின் போது அகோஸ்டாவை வெள்ளை மாளிகைக்குள் நுழையக் கூடாது என ட்ரம்ப் அறிவித்தார். பின்னர் நீதிமன்றத்தை நாடிய அகோஸ்டா மீண்டும் வெள்ளை மாளிகையில் நுழைய அனுமதி பெற்றார்.

யார் இந்த ஜிம் அகோஸ்டா?

கரீபியன் தீவுகளில் ஒன்றான கியூபாவில் பிறந்தவர். அங்கு நடந்த ஏவுகணைத் தாக்குதல் காரணமாக தன் 11-வது வயதில் கியூபாவிலிருந்து தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். பிறகு பள்ளி மற்றும் கல்லூரி என அனைத்தையும் அமெரிக்காவிலேயே முடித்தார். தொடர்ந்து ஒரு ரேடியோ சேனலில் தன் முதல் பணியைத் தொடங்கினார். 1994-ம் ஆண்டு வாஷிங்டன் டி.சி பத்திரிகையில் இணைந்து பணியாற்றினார். அடுத்த ஆண்டே அந்தப் பத்திரிகை தொலைக்காட்சி ஒளிபரப்பில் கால் பதித்ததால் அங்கும் நிருபராக வேலை செய்தார். தொடர்ந்து தொலைக்காட்சி முன் தோன்றி தான் சேகரித்த செய்திகளைக் கூறினார். சிறிது காலம் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ட்ரம்ப் வருகையால் இந்தியாவிற்கு லாபமா? நஷ்டமா? | The Imperfect Show 24/2/2020

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல செய்தி நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு தற்போது சி.என்.என் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் சி.என்.என் பத்திரிகை சார்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை நிருபராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் வெள்ளை மாளிகை நிருபரானபோது ஒபாமா அதிபராக இருந்தார். 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையின் போதே ட்ரம்புக்கும் அகோஸ்டாவுக்கும் இடையே மோதல் தொடங்க ஆரம்பித்துவிட்டது. பின்னர் 2017-ம் ஆண்டு ட்ரம்ப் அதிபரான பிறகு, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் தேர்தல் தொடர்பாகச் சர்ச்சையான கேள்வி எழுப்பினார். ஆனால், ட்ரம்ப் இவரது கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்து சி.என்.என் பொய்யான செய்தி வெளியிடுவதாகக் குற்றம் சாட்டினார்.

ஜிம் அகோஸ்டா
ஜிம் அகோஸ்டா
twitter

இதே போன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பல செய்தியாளர்கள் சந்திப்பின் போது அகோஸ்டா - ட்ரம்ப் மோதல் தொடர்ந்துள்ளது. குறிப்பாக 2018-ம் ஆண்டு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், லத்தீன் அமெரிக்காவிலிருந்து வரும் அகதிகள் குறித்தும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்தும் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த ட்ரம்ப் அகோஸ்டாவிடம் இருக்கும் மைக்கைப் பறிக்க உத்தரவிட்டார்.

அதை வாங்க வந்த பெண் ஊழியரிடம் நிருபர் அகோஸ்டா அத்துமீறி நடந்துகொண்டதாக அவர் மீது குற்றம்சாட்டி மறு அறிவிப்பு வரும் வரை அகோஸ்டா வெள்ளை மாளிகைக்குள் நுழையக் கூடாது என்று ட்ரம்ப் அரசு உத்தரவிட்டது. ட்ரம்பின் இந்தச் செயலுக்குச் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. அகோஸ்டா வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.என்.என் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் மூலமாகவே மீண்டும் வெள்ளை மாளிகையில் நுழையும் உரிமை பெற்றார் அகோஸ்டா .

அடுத்த கட்டுரைக்கு