Published:Updated:

2 மாதம் தனி அறை, பறிபோன உயிர்! - 5 வயதுச் சிறுமியின் டைரியால் சிக்கிய தாய், வளர்ப்புத் தந்தை

ஜப்பானில் பெற்ற மகளைக் கொடுமைப்படுத்தியதோடு, உயிரிழப்பதற்குக் காரணமாக இருந்த தாய் மற்றும் வளர்ப்புத் தந்தைக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Yua Funato
Yua Funato ( Twitter )

ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்தவர் யுரி ஃபனாடோ (Yuri Funato). இவருக்கும் இவரின் முதல் கணவருக்கும் பிறந்த பெண் குழந்தை யுவா (Yua Funato). சில வருடங்களுக்கு முன்னதாக இந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் இவர்கள் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டனர். 5 வயது குழந்தை யுவா, தாய் யுரியுடன் வளர்ந்து வந்துள்ளார்.

Yua Funato
Yua Funato
Twitter

இதைத்தொடர்ந்து, யுடாய் ஃபனாடோ (Yudai Funato) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார் யுரி. கடந்த 2016-ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். மகன் பிறந்த பிறகு யுவாவை சரிவரக் கவனிக்காமல் அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர் இருவரும். இதற்கிடையே, அவரின் முதல் கணவர், யுரிக்கு அதிக தொந்தரவு கொடுத்துவந்துள்ளார். அந்த கோபத்தையும் தன் மகள் மீதே காட்டி வந்துள்ளார் யுரி.

இந்த நிலையில், கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் யுரி மற்றும் யுடாய் ஆகியோரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் யுவா. இருவரும் குழந்தையை ஒரு தனி ரூமில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். ஒரு நாளுக்கு இரண்டு வேளை சூப் மட்டுமே உணவாகக் கொடுத்து வந்துள்ளனர். 2 மாதங்களுக்கு மேலாகக் குழந்தை யுவா தனி அறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார். 12 கிலோ எடை இருந்த யுவா சரியாக உணவு உண்ணாததால் நான்கு கிலோ எடை குறைந்து, எலும்பும் தோலுமாகக் காணப்பட்டுள்ளார்.

Mother Yuri Funato
Mother Yuri Funato
FaceBook/@Tin Tuc Nhat Ban

சரியான உணவு இல்லாதது, மன அழுத்தம், தனிமை ஆகிய அனைத்தும் சேர்ந்து ஒரு கட்டத்தில் யுவாவை அதிகமாகப் பாதித்துள்ளது. பிப்ரவரி மாதம் இறுதியில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் சிறுமி. இது அறிந்தும் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமலிருந்துள்ளார் குழந்தையின் தாய் யுரி. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அடுத்த ஓரிரு நாள்களிலேயே சிறுமி யுவா உயிரிழந்துள்ளார்.

`6 பேரால் 2 நாள்களாக பாலியல் வன்கொடுமை!' - பாதிக்கப்பட்ட சிறுமிக்கே தண்டனை கொடுத்த கிராம பஞ்சாயத்து

சிறுமி உயிரிழந்து சில மாதங்கள் கழித்து யுவா எழுதிய டைரி குறிப்பு ஒன்று அந்நாட்டு சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதன் பின்னரே சிறுமி தன் தாயால் அனுபவித்த கொடுமையும் உடல்நிலை மோசமாகி இறந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன் டைரி குறிப்பில், ``இனிமேல் நீங்கள் சொல்லாமலே என் வேலையை நானே செய்துகொள்கிறேன். நான் செய்த தவறுகளுக்கு அம்மாவும், அப்பாவும் என்னை மன்னிக்க வேண்டும்’ என உருக்கமாக எழுதியுள்ளார்.

Stepfather Yudai Funato
Stepfather Yudai Funato
FaceBook/@Tin Tuc Nhat Ban

சிறுமியின் டைரி குறிப்பு அந்நாட்டு குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு அமைப்பினரிடம் கிடைக்க, அவர்கள் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போதுதான் சிறுமி அனுபவித்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, தன் மகளைக் கொடுமைப்படுத்திய தாய் மீது டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில், ‘ தன் இரண்டாவது கணவர் அடிக்கடி பைத்தியம்போல் நடந்துகொண்டதாகவும் அதனால் தான் அதிகம் பாதிக்கப்பட்டதால் குழந்தையைத் தனிமையில் அடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்’ என யுரி தன் வாதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தன் மகளைவிட கணவரே முக்கியமானவர் எனத் தோன்றியதாலும், அவரின் தாக்குதலை எதிர்க்க தனக்குச் சக்தியில்லை. தற்போது அவரை விவாகரத்து செய்துவிட்டேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Abuse
Abuse

சிறுமி யுவா வழக்கில் நேற்று இறுதித் தீர்ப்பை வழங்கியது டோக்கியோ நீதிமன்றம். ஒரு வருடத்துக்கு 1,50,000 குழந்தைகள் வன்கொடுமை வழக்குகள் அந்நாட்டு நீதிமன்றங்களில் பதிவாகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், `ஒரு தாயாக தன் குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பைக்கூட யுரி முறையாகச் செய்யவில்லை’ எனக் கூறி அவருக்கு எட்டு ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதித்துள்ளனர்.

இந்த வழக்கு வரும் அக்டோபர் 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது யுரியின் இரண்டாவது கணவர் யுடாய்க்கு ஆயுள் தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிறுமி யுவா விவகாரம் கடந்த ஆண்டு முதல் ஜப்பானை உலுக்கி வருகிறது. தன் தாயாலே ஒரு குழந்தை பாதிக்கப்பட்ட பிறகு குழந்தைகள் வன்கொடுமையைத் தடுக்க பல புதிய தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

2 மாதம் தனி அறை, பறிபோன உயிர்! - 5 வயதுச் சிறுமியின் டைரியால் சிக்கிய தாய், வளர்ப்புத் தந்தை
Twitter

உயிரிழந்த சிறுமி யுவாவுக்கு ஜப்பான் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மக்களும் சாலையில் ஆங்காங்கே அஞ்சலி செலுத்தினர். தற்போது சிறுமியின் தாய்க்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அந்நாட்டு மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.