Published:Updated:

‘கழன்றுவிழுந்த மாஸ்க்; பாதுகாப்பு குறைபாடு பயம்’ - காரில் உயிரிழந்த நிலையில் கிடந்த செவிலியர்

செவிலியர் வில்லியம்
செவிலியர் வில்லியம் ( Facebook )

கொரோனா வார்டில் வேலை செய்துவந்த செவிலியர், தன் காரில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர், அச்சத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பரவலின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. சர்வதேச அளவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துசென்றுகொண்டிருக்கிறது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்தைக் கடந்துவிட்டது. கொரோனா தொற்று, நாட்டின் பொருளாதாரம் என அனைத்திலிருந்தும் மீண்டுவருவதற்கு உலக நாடுகளே பெரும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றன.

கொரோனா
கொரோனா

இந்த கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்ற அனைவரும் சூப்பர் ஹீரோ மற்றும் கடவுளுக்கு இணையாக புகழப்பட்டுவருகிறார்கள். ஆனால், மருத்துவப் பணியாளர்களோ... தங்களுக்கு இருக்கும் வேலைச்சுமை மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இப்படியான ஒரு, சம்பவம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலும் நடந்துள்ளது.

ஃபுளோரிடா மாகாணத்தின் வெஸ்ட் பாம் பீச் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவந்துள்ளார், 32 வயதான வில்லியம் கோடிங்டன். செவிலியர் ஆகி மக்களுக்கு சேவை செய்வதே இவரது பெரும் ஆசையாக இருந்துவந்துள்ளது. வில்லியம் தன் 20 வயதுக்கு முன்னர், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, அதிலிருந்து வெளியில் வர மிகக் கடுமையாகப் போராடியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு முற்றிலும் அதிலிருந்து வெளியேறி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் தன் கனவுப்படி செவிலியராக புது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.

கொரோனா
கொரோனா

ஒரு வருடமாக குடும்பம், நண்பர்கள் என நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இவரது வாழ்க்கை சென்றுகொண்டிருந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வெடித்த பிறகு, வில்லியம் பணி புரியும் மருத்துவமனையிலும் நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்கு, தன்னார்வமாக வந்து முன்னணியில் நின்று வேலை செய்துள்ளார். தினமும் அதிகப்படியான வேலை, முறையான பாதுகாப்பின்மை ஆகியவற்றால் சற்று பயத்திலும் மன அழுத்தத்திலும் இருந்துள்ளார் வில்லியம்.

இவர் செவிலியர் என்பதால், இவரைப் பார்க்கவும் அருகில் வரவும் அவரது நண்பர்கள் அஞ்சியுள்ளனர். சமூக விலகலுடன் பேச யாரும் தயாராக இல்லை என அவரது நண்பர்கள் வட்டாரத்திலேயே கூறப்படுகிறது. தன் தாயுடன் வாழ்ந்துவந்த வில்லியம், உயிரிழப்பதற்கு முன் ஒரு வாரமாக யாருடனும் பேசாமல் தனியாக ஓர் அறையிலேயே இருந்துள்ளார்.

தனிமை
தனிமை

தன் மருத்துவமனையின் பாதுகாப்பற்ற நிலை குறித்தும், ஒரு நாள் முழுவதும் தனக்கு ஒரே ஒரு எண் 95 மாஸ்க் மட்டுமே வழங்கப்படுகிறது, பாதுகாப்புக் கவசங்கள் எதுவும் இல்லை. அதனால் வேலையில் இருக்க பயமாக இருப்பதாகவும் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி பணி முடித்து நீண்ட நேரம் ஆகியும் வில்லியம் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். அதனால் சந்தேகமடைந்த வில்லியமின் தாய், அவரது நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனையில் தேடியுள்ளார். அங்கு வில்லியம் இல்லாததால், பலரும் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். இதையடுத்து, வில்லியம் பணி புரிந்த மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஒரு ஹோட்டலின் கார் நிறுத்துமிடத்தில் வில்லியம் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

`அதிகரிக்கும் பாதிப்பு; மாடி ஜன்னல் வழியே குதிக்கும் மருத்துவர்கள்..’ - ரஷ்யாவில் `கொரோனா' கொடூரம்

வில்லியமின் இறப்பு தொடர்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவரும் காவலர்கள் கூறுகையில், ‘ வில்லியம், தான் பணி செய்யும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மேலும், தன் பாதுகாப்புக் குறைபாடு காரணமாகத் தனக்கும் வைரஸ் தொற்றி உயிரிழப்பு ஏற்படுமோ என்ற பயத்தில் இருந்துள்ளார். இது அவரது நண்பர்கள், குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும் வில்லியம் உயிரிழப்பதற்கு முந்தைய நாள், ஒரு நோயாளிக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருக்கும்போது, தன் முகமூடி கீழே விழுந்துவிட்டதாகவும், நோயாளியின் காற்று தன்மீது பட்டதாகவும் தந்தையிடம் கூறியுள்ளார்.

வில்லியம்
வில்லியம்
Facebook

பயம், மன அழுத்தம், தனிமை, விரக்தி என அனைத்திலிருந்தும் விடுபடுவதற்காக வில்லியம் மீண்டும் போதை மருந்தை உட்கொண்டுள்ளார். அது, அளவுக்கு அதிகமானதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினர் சந்தேகித்தனர். எனவே, வில்லியம் இறந்தது தற்கொலையா இல்லையா என்பது பற்றி நாங்கள் தீவிர விசாரணை நடத்திவருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். வில்லியம் உயிரிழந்து 20 நாள்கள் ஆன நிலையில், தற்போதுதான் அவர் பயத்தின் காரணமாக அவதிப்பட்டுவந்ததும், அதுவே அவரின் உயிரிழப்புக்குக் காரணம் என்ற விஷயமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“100% வில்லியம் தற்கொலை முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை. அவன், மன அமைதி, துயரைப் போக்குவதற்காகப் போதைப் பொருள் எடுத்திருக்கலாம்’ என வில்லியமின் நெருங்கிய நண்பன் மார்க் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவர், செவிலியர்கள் உயிரிழப்பது அமெரிக்காவில் தொடர்கதையாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு