Published:Updated:

`தனி ஒருவன்; 10 மணி நேரத் தூய்மைப் பணி!’ - அமெரிக்க இளைஞரின் செயலுக்குக் குவியும் பாராட்டுகள்

தனி ஒருவனாக நியூயார்க் நகரின் போராட்டக்களத்தைத் தூய்மையாக்கிய ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞருக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

அமெரிக்காவின் மின்னெபொலிஸ் நகரைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் கடந்த மாதம் போலீஸ் பிடியில் இருக்கும்போது கொல்லப்பட்டார். அவரது உயிரிழப்புக்கு நீதி வேண்டியும், அமெரிக்காவில் இருக்கும் அதிகார சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் மற்றும் அங்கு இருக்கும் இனவெறிக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற கோரிகைகளுடனும் பல லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் அனைத்து நகரங்களின் முக்கிய சாலைகளையும் ஆக்கிரமித்து மிகப் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
Darron Cummings

அமெரிக்காவில் இருக்கும் கொரோனா வைரஸ் பரவலை, இந்தப் போராட்டம் சற்றே மறக்கடித்துவிட்டது என்று கூறும் அளவுக்குப் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இப்படி நியூயார்கில் உள்ள புஃபலோ (Buffalo) நகரிலும் கடந்த 10 நாள்களாகப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அப்போது, மக்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருள்கள், பதாகைகள், தண்ணீர் பாட்டில்கள் பிற உணவுப் பொருள்கள் ஆகியவற்றைச் சாலையிலேயே வீசி விட்டுச் சென்றுள்ளனர். மேலும், கலவரத்தின்போது அங்கு சில பொருள்களும் உடைக்கப்பட்டிருந்துள்ளன.

அதே புஃபலோ பகுதியைச் சேர்ந்த அண்டோனியோ க்வின் ஜூனியர் என்ற 18 வயது இளைஞர், போராட்டத்தால் தன் பகுதியில் அதிக குப்பைகள் சேர்ந்திருப்பதைச் செய்தி மூலம் கண்டுள்ளார். இதைத் தூய்மை செய்ய நினைத்த அவர், கடந்த வாரம் திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு ஒரு துடைப்பம் மற்றும் சில குப்பை பைகளுடன் சாலையில் இறங்கி, அப்போதிலிருந்து தொடர்ச்சியாக 10 மணி நேரம் தனியாக வேலை செய்து அந்த மொத்த பகுதியையும் தூய்மையாக்கியுள்ளார். பின்னர் விடிந்ததும் அக்கம்பக்கத்தினர் வெளியில் வந்து தூய்மையான சாலையைப் பார்த்து வியந்துள்ளனர்.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
Ariana Drehsler

க்வின் மட்டும் தனி ஆளாக நின்று குப்பைகளைப் பெருக்கியது மட்டுமல்லாமல் அங்கு உடைந்திருந்த பொருள்களில் சிலவற்றையும் சரிசெய்துகொண்டிருந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினரும் அவருக்கு உதவி செய்து தங்கள் பகுதியை முழுமையாகச் சரி செய்துள்ளனர். இதையடுத்து க்வினின் செயல் புஃபலோ நகரத்தின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியுள்ளது. இதைப் பார்த்த மாட் பிளாக் என்னும் உள்ளூர் தொழிலதிபர் ஒருவர், க்வினின் செயலைப் பாராட்டும் விதமாக க்வினுக்கு மிகவும் பிடித்த ஒரு காரை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த விஷயம் சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது.

`முதலில் ஜார்ஜ்; தற்போது முதியவர்’ - அமெரிக்காவில் பதற்றத்தை அதிகரிக்கும் போலீஸாரின் அத்துமீறல்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன் செயல் தொடர்பாகவும் பிளாக்கின் பரிசு தொடர்பாகவும் சிஎன்என் ஊடகத்திடம் பேசியுள்ள க்வின், ``எங்கள் பகுதி முழுவதும் சேதமடைந்திருப்பதை தொலைகாட்சியில் பார்த்தேன், காலையில் வேலைக்குச் செல்பவர்கள் அந்தச் சாலையைத்தான் பயன்படுத்துவார்கள். எனவே, அவர்கள் வருவதற்கு முன்பாகத் தூய்மை செய்ய வேண்டும் எனத் தோன்றியது. அதனால், நானே முழுவதையும் தூய்மை செய்துவிட்டேன். பிளாக் எனக்கு அளித்த பரிசு பற்றி பேச வார்த்தை வரவில்லை. அதைப் பார்த்து முதலில் நான் அதிர்ச்சியடைந்தேன். உண்மையில் இப்படி ஒரு பரிசை எதிர்பார்க்கவில்லை. 2018-ம் ஆண்டு உயிரிழந்த என் தாயும் இதேபோல் சிவப்பு நிற மஸ்டாங் காரைத்தான் வைத்திருந்தார். எனவே, எனக்கு அளித்த காரை பார்த்தபோது ஒரு நிமிடம் புல்லரித்துவிட்டது” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்

இது மட்டுமல்லாது, க்வினுக்கு கார் பரிசு கிடைத்துள்ளதைத் தெரிந்து அதே பகுதியைச் சேர்ந்த ஒரு காப்பீட்டு நிறுவனம், க்வினுக்கு அடுத்த ஒரு வருடத்துக்கான இலவச காப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது. மேலும், க்வினின் குடும்ப நிலையை அறிந்த மெடெய்ல் கல்லூரி, அவரின் உயர்நிலை கல்விக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் கொலை செய்யப்பட்ட போராட்டத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட மற்றொரு ஆப்பிரிக்க அமெரிக்கரான க்வினுக்கு பரிசுகள் கிடைத்துள்ளது அமெரிக்கா முழுவதும் வைரலாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு