Published:Updated:

வெளிச்சத்தைக் கண்ட சிறுவன்; நன்றி சொல்லத் துடித்த நிமிடங்கள்! - கண்கலங்கவைக்கும் நெகிழ்ச்சி வீடியோ

மருத்துவருக்கு நன்றி சொல்லும் சிறுவன்
மருத்துவருக்கு நன்றி சொல்லும் சிறுவன் ( Twitter/@omastharai )

இந்த அழகான வீடியோவை இதுவரை ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர். 2,000 பேர் ரீ ட்வீட்டும் 4000 பேர் லைக்கும் செய்துள்ளனர்.

நேபாளத்தில் உள்ள ஹெடௌடா (Hetauda) சமூக கண் மருத்துவமனை சார்பாக அங்குள்ள ஒரு கிராமத்தில் கடந்த வாரம் மூன்று நாள்கள் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கண் மருத்துவர் சந்துக் ருயிட் (Sanduk Ruit) தலைமையில் நடந்த இந்த முகாமில் சுமார் 70-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். சிகிச்சை பெற்ற 70 பேரில் ஒரே ஒரு 13 வயதான சிறுவனும் இருந்துள்ளான்.

ரோஷன்
ரோஷன்
Kathmandu press

ரோஷன் என்ற அந்தச் சிறுவன், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கண்ணில் ஏற்பட்ட புரை காரணமாகப் பார்வையிழந்துள்ளான். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் எந்தப் பயனும் இல்லாமல் இருந்துள்ளது. ரோஷன் திடீரென பார்வை இழந்ததால் அவனால் இயல்பாக எந்த வேலையும் செய்ய முடியாமலும், பள்ளிக்குச் செல்லமுடியாமலும் தவித்து வந்துள்ளான்.

இந்த நிலையில், தற்செயலாக மருத்துவர் ருயிட்டிடம் அவர் சிகிச்சைக்கு வந்துள்ளான். சிறுவனைப் பரிசோதித்த பல மருத்துவர்களும் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்தாலும் பார்வை கிடைப்பது சந்தேகம்தான் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவர் ருயிட் வேறு முறையில் சிறுவனை அணுகி அவனுக்கு அறுவை சிகிச்சை அளித்துள்ளார்.

சந்துக் ருயிட்
சந்துக் ருயிட்

அந்த முகாமுக்கு வந்த பலருக்குக் கடந்த செவ்வாய்க் கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் சிறுவன் ரோஷனும் இருந்தான். தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களின் கண் கட்டு மறுநாள் புதன் கிழமை காலை திறக்கப்பட்டது. இதைப் பற்றி காத்மாண்டு செய்தியாளர் ஒருவர் கூறுகையில், ‘ அந்த முகாமில் சிகிச்சை பெற்ற பலரை நான் பார்த்தேன். ஆனால், என் முழுக் கவனமும் ரோஷன் மீதுதான் இருந்தது. அவனுக்கு எப்படியேனும் பார்வை கிடைத்துவிட வேண்டும் என நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். அறுவை சிகிச்சைக்குப் பின் ரோஷனின் கண்ணிலிருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது. கண்ணை மெதுவாக திறந்தததுமே ரோஷன் சத்தமாக அலறினான். `என்னால் எதையும் பார்க்கமுடியவில்லை. இன்னும் இருட்டாகவே உள்ளது’ எனக் கூறி கத்தினான்.

அருகிலிருந்த ஒரு மருத்துவர், ரோஷனிடம் சில அறிவுரைகளைக் கூறி அதைப் பின்பற்றச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் ரோஷன் கத்தினான். என்னால் வெளிச்சத்தைப் பார்க்க முடிகிறது என்றான். அவனுக்குப் பார்வை வந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த ரோஷனுக்கு சில சோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கு ரோஷன் சரியாகப் பதில் கூறிவிட்டான். அதைப் பார்த்ததும் என் மனது மகிழ்ச்சியில் துள்ளியது.

மருத்துவருக்கு நன்றி சொல்லும் சிறுவன்
மருத்துவருக்கு நன்றி சொல்லும் சிறுவன்
Twitter/@omastharai

பின்னர் நடந்த விஷயங்களை என் கேமராவில் பதிவு செய்ததற்கு நான் பெருமை அடைகிறேன். தனக்குப் பார்வை வந்ததும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சந்துக் ருயிட்டிடம் ஓடி சென்ற ரோஷன் அவரை உற்றுப்பார்த்துக் கட்டி அணைத்துக்கொண்டான். மருத்துவருக்கு நன்றி தெரிவிக்கத் தெரியாமல் அவன் காட்டிய அன்பு, அவனது செயல் அங்கிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீரை மட்டுமே வரவழைத்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரோஷன் மருத்துவரை கட்டியணைத்த வீடியோவை அந்தச் செய்தியாளர் தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட அடுத்த சில தினங்களில் வீடியோ செம வைரலாகியுள்ளது. சிறுவனின் செயலுக்கும், அவனுக்குப் பார்வை கிடைக்காது என அனைவரும் கூற தன் முயற்சியால் ரோஷனுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்த மருத்துவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மருத்துவர் சந்துக் ருயிட் இதுவரை பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து மீண்டும் பார்வை பெற செய்துள்ளார். மருத்துவரின் செயலுக்காக கடந்த வருடம் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ பற்றிய உங்கள் கருத்தையும் கமென்டில் பகிருங்கள்!

அடுத்த கட்டுரைக்கு