Published:Updated:

நகைச்சுவைக் கலைஞர் கொலை: ஒப்புக்கொண்ட தாலிபன்கள்; கலங்கும் ஆப்கானிஸ்தான்! - என்ன நடந்தது?

நாசர்  முகம்மது
நாசர் முகம்மது

ஆப்கானிஸ்தான் நகைச்சுவைக் கலைஞர் நாசர் முகம்மது காஸா என்பவர் தாலிபன்களால் கொல்லப்பட்டிருக்கிறார். அது குறித்த வீடியோக்கள் வைரலானதை அடுத்து ஆப்கான் மக்கள் நாசருக்காகக் கலங்குகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அமெரிக்கப் படைகள் பின்வாங்கத் தொடங்கிய காரணத்தால் ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியைக் கைப்பற்றியிருக்கின்றனர் தாலிபன்கள். இதனால் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் ராணுவமும் தாலிபன்களும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் சூழல் நிலவிவருகிறது. இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானிலுள்ள நகைச்சுவைக் கலைஞர் நாசர் முகம்மது காஸா என்பவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

முதலில் இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளாத தாலிபன்கள், சில வீடியோக்கள் வெளியான பின்பு, `நாங்கள்தான் நாசர் முகம்மதைக் கொலை செய்தோம்' என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோவில், கார் ஒன்றில் இரண்டு தாலிபன்களுக்கு நடுவில் அமர்ந்திருக்கிறார் நாசர். அவரை அவதூறாகப் பேசும் தாலிபன்கள், கன்னத்தில் அறைந்து துன்புறுத்தவும் செய்கின்றனர். இன்னொரு வீடியோவில் அவர் கொலை செய்யப்பட்டு இறந்துகிடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்துத்தான், தாலிபன்கள் நாசரைக் கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

இது குறித்துப் பேசிய தாலிபன்களின் செய்தித் தொடர்பாளர் ஸபிபுல்லா முஜாகித், ``நாசர் நகைச்சுவை நடிகர் அல்ல. அவர் எங்களோடு பல முறை போர் செய்திருக்கிறார். அவர் ஒரு காவல்துறை அதிகாரி. பலர் இறப்புக்குக் காரணமானவர் நாசர். நாங்கள் அவரைக் கைதுசெய்து வைத்திருந்தோம். தப்பிக்க முயன்றதால்தான் சுட்டுக் கொன்றோம்'' என்று கூறியிருக்கிறார்.

நாசர், ஆப்கானிஸ்தானின் கந்தகார் பகுதி காவல்துறையில் பணியாற்றியவர் என்று சொல்லப்படுகிறது. டிக்டாக், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு ஆப்கான் மக்களின் ஆதரவைப் பெற்றவர் நாசர். அவர் கொல்லப்பட்டதை அடுத்து அவருக்கான அஞ்சலிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர் ஆப்கான் மக்கள். அதோடு, தாலிபன்களுக்கு எதிரான கருத்துகளையும் பதிவிட்டுவருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் சுபுஹி கான், ``தாலிபன்களுக்கு, இஸ்லாமியர்கள் பாடுவதோ, சிரிப்பதோ, நடனமாடுவதோ, மகிழ்ச்சியாக இருப்பதோ பிடிக்காது. மூளைச்சாவு அடைந்த இஸ்லாமியர்கள்தான் அவர்களுக்கு வேண்டும்'' என்று கடுமையாக தாலிபன்களை விமர்சித்திருக்கிறார்.

தாலிபன்கள் கொலை செய்த நாசர்  முகம்மது
தாலிபன்கள் கொலை செய்த நாசர் முகம்மது
`உலகின் முக்கிய தருணங்களை நம் கண்முன் நிறுத்திய டேனிஷ் சித்திக்... கொண்டாடப்பட வேண்டியவர்' - ஏன்?!
மேலும் சில ஆப்கானிகள், ``தாலிபன்களால் ஆப்கான் மக்கள் இழந்த மகிழ்ச்சியை, சிரிப்பை தன் நகைச்சுவையின் மூலம் மக்களுக்குத் தந்தவர் நாசர். அப்பாவி முகம்கொண்ட அவரை கொலை செய்துவிட்டது தாலிபன் படை. தாலிபன்கள் மிகக் கொடூரமானவர்கள்'' என்றும் பதிவிட்டுவருகின்றனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு