அலசல்
சமூகம்
Published:Updated:

உக்ரைனுக்கு எதிரான போரில் ஆப்கன் கமாண்டோக்கள்? - ரஷ்யாவின் புதிய திட்டம்!

ஆப்கன் கமாண்டோக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆப்கன் கமாண்டோக்கள்

தாலிபன்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஆப்கன் கமாண்டோக்கள் பலரும் ரஷ்யாவின் ஆஃபரை ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போர் எட்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உக்ரைனின் கை ஓங்கியதை அடுத்து, ரஷ்யா தனது தாக்குதலைப் பல மடங்கு தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்க ராணுவத்திடம் பயிற்சிபெற்ற ஆப்கானிஸ்தான் கமாண்டோக்களை ரஷ்யா, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்போவதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

20 ஆண்டுகளாக அமெரிக்கா, நேட்டோ படைகளுடன் இணைந்து, ஆப்கானிஸ்தான் படையணியினரும் தாலிபன்களுக்கு எதிராகப் போராடினர். இந்தப் படையில், அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட சுமார் 30,000 கமாண்டோ வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். 2021 ஆகஸ்ட்டில், அமெரிக்கப் படைகள் வெளியேற, தாலிபன்கள் வசம் வந்தது ஆப்கானிஸ்தான். அதன் பிறகு, தாலிபன்களின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து, ஆப்கன் கமாண்டோக்கள் உள்நாட்டிலும், இரான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் தலைமறைவாகினர். சிலர் தாலிபன்களிடம் சிக்கி, அவர்களது துன்புறுத்தல்களை அனுபவித்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ஆப்கன் கமாண்டோக்கள்? - ரஷ்யாவின் புதிய திட்டம்!

இந்த நிலையில், `இரானிலுள்ள ஆப்கன் கமாண்டோக்களை, ரஷ்யாவின் துணை ராணுவப் படையான வாக்னர் (Wagner) அமைப்பு மூலம் ரஷ்ய அதிபர் புதின் அணி திரட்டிவருகிறார். அவர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுவருகிறார்’ என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அதில், ``ஆப்கன் கமாண்டோக்களுக்கு மாதம் 1,500 அமெரிக்க டாலர் சம்பளமும், அவர்களின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பான வாழ்விடம் ஏற்படுத்தித் தருவதாகவும் ரஷ்யா வாக்குறுதி அளித்திருக்கிறது’’ என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை `முட்டாள்தனம்’ என்று மறுத்திருக்கிறார் வாக்னர் அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸின்.

ஆப்கனின் முன்னாள் ராணுவத் தளபதியான அகமதி, ``20 ஆண்டுகளாக தாலிபன்களுக்கு எதிராகத் தோளோடு தோள் நின்றவர்களை அமெரிக்கா கைவிட்டது சரியல்ல. அமெரிக்கா, ஆப்கன் கமாண்டோக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அவர்களைக் கூலிப்படையாகப் பணியமர்த்தவிடக் கூடாது’’ என்று கூறியிருக்கிறார்.

இது குறித்துப் பேசும் சர்வதேச அரசியல் வல்லுநர்கள், ``தாலிபன்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஆப்கன் கமாண்டோக்கள் பலரும் ரஷ்யாவின் ஆஃபரை ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. நாடற்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவரும் ஆப்கன் கமாண்டோ வீரர்களுக்கு ரஷ்யக் குடியுரிமையும், அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்விடமும் தர ரஷ்யா முன்வந்திருப்பதாகத் தெரிகிறது. உலகிலேயே நவீன பயிற்சிகளைப் பெற்ற, அனுபவமிக்க வீரர்கள் ஆப்கன் கமாண்டோக்கள்தான். பல ஆண்டுகளாக தாலிபன் படையை முன்னின்று களத்தில் எதிர்கொண்டவர்கள் அவர்கள். எனவே, அவர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்தினால், அது பேராபத்தில் முடியும். போரை இன்னும் மோசமான கட்டத்துக்கு எடுத்துச்செல்லும்’’ என்று எச்சரிக்கின்றனர்.