Published:Updated:

அரசுக்கு ஆதரவு; சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்! - தந்தை மரணத்துக்குப் பழிவாங்கிய ஆப்கன் சிறுமி

சிறுமி கியாமர் குல்
சிறுமி கியாமர் குல்

ஆப்கானிஸ்தானில் தன் பெற்றோரைக் கொலை செய்த தீவிரவாதிகளைத் துப்பாக்கியால் சுட்டுப் பழிவாங்கியுள்ளார் ஒரு சிறுமி.

ஆப்கானிஸ்தானின் மத்தியில் உள்ள கோர் (Ghor) மாகாணத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி கியாமர் குல் (Qamar Gul). இவர் பெற்றோர் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில் அதே பகுதியில் இருக்கும் தாலிபான் தீவிரவாதிகள், அரசுக்கு ஆதரவளிக்கக் கூடாது என பலமுறை குல்லின் பெற்றோரை மிரட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் கேட்பதாகத் தெரியவில்லை. இதனால் குல்லின் தந்தையைக் கொலை செய்ய அவரது வீட்டுக்கு இரு தீவிரவாதிகள் வந்துள்ளனர்.

தீவிரவாதி
தீவிரவாதி
மாதிரி புகைப்படம்

அப்போது தாலிபான்களிடமிருந்து தன் கணவரைக் காக்க முயன்றுள்ளார் குல்லின் தாய். ஆனால், அப்போதும் விடாத அவர்கள் குல்லின் பெற்றோர் இருவரையும் வீட்டிலிருந்து தரதரவெனச் சாலைக்கு இழுத்து வந்து சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். தன் கண் முன்பே தாய், தந்தை இருவரும் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த கியாமர் குல், தன் வீட்டிலிருந்த ஏ.கே 47 துப்பாக்கியைக் கொண்டு வந்து, தன் பெற்றோரைக் கொலை செய்த இரண்டு தாலிபான்களையும் கடுமையாகச் சுட்டுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குல்லை தாக்க வந்த மேலும் பல தீவிரவாதிகள் காயமடைந்துள்ளனர்.

திருச்சி: ஜாமீனில் வந்த அண்ணன்; பைக்கில் மோதிய கார்! - பதறவைத்த பழிக்குப் பழி கொலை

இந்தச் சம்பவம் பற்றி பேசியுள்ள அந்த ஊர் தலைவரும் போலீஸ் அதிகாரியுமான ஹபிபுர் ரஹ்மான், ``கியாமர் குல் 15 வயதுச் சிறுமிதான். தீவிரவாதிகள் தன் பெற்றோரைக் கொலை செய்ததால் அவர்களைப் பதிலுக்கு இவரும் சுட்டுவிட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, மேலும் பல தீவிரவாதிகள் வந்து குல் வீட்டைக் கடுமையாகச் சேதப்படுத்தினர். அப்போது அரசுக்கு ஆதரவான ராணுவப்படை வந்து தீவிரவாதிகளிடமிருந்து குல் மற்றும் அவர் சகோதரரை மீட்டது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பில் தற்போது குல்லும் அவர் சகோதரரும் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

சிறுமி கியாமர் குல்
சிறுமி கியாமர் குல்

கடந்த வாரம் நடந்த இந்தச் சம்பவம் வைரலான பிறகுதான் சிறுமியைப் பற்றிய செய்திகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. குல்லின் தைரியத்தைப் பாராட்டி பலரும் சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

`பெற்றோரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களின் பழிவாங்கல் உங்களுக்கும் உறவினருக்கும் அமைதியைத் தரும்’ என ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இப்படி அரசுக்கு ஆதரவாக இருப்பவர்களும், தீவிரவாதிகள் பற்றி அரசுக்குத் தகவல் தெரிவிப்பவர்களும் சுட்டுக்கொல்லப்படுவது நீண்ட காலமாக நடந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு