Published:Updated:

வரலாற்றின் நாற்சந்தியில் ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

ரஷ்யப் படைகளை வெளியேற்றுவதற்காக அமெரிக்கா, இரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பஸ்தூன்களின் படைகளுக்கு ஆயுதங்களைக் கணக்கின்றி கொடுத்தன.

வரலாற்றின் நாற்சந்தியில் ஆப்கானிஸ்தான்!

ரஷ்யப் படைகளை வெளியேற்றுவதற்காக அமெரிக்கா, இரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பஸ்தூன்களின் படைகளுக்கு ஆயுதங்களைக் கணக்கின்றி கொடுத்தன.

Published:Updated:
ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலைய ஓடுதளம். அமெரிக்க போர்த்தளவாட விமானம் 640 பேருடன் வானில் பறக்க ஆயத்தமாகிறது. விமானத்தின் முன்பாக ஆயிரக்கணக்கானவர்கள் நிற்கிறார்கள். விமானத்தின் இறக்கைகள், டயர்களுக்கு மேல் என எங்கும் மக்கள் தொற்றிக்கொண்டிருக்கிறார்கள். விமானம் வானில் பறக்க, 500 அடி உயரத்திலிருந்து மூன்று நான்கு பேர் விழும் காட்சிகள் நேரலையில் வெளியாகி, உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. நாம் வாழும் காலத்தின் மிக அவலமான காட்சி அது!

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து விலகிய ஒரு வாரத்துக்குள் அவர்கள் இருபது ஆண்டுகளாக உருவாக்கிய அரசும் ராணுவமும் சீட்டுக்கட்டு மாளிகையைப்போல் சரிந்து விழுந்தன. ஆப்கன் ராணுவம் படிப்படியாக தாலிபன்கள் வசம் சரணடைந்தது. தாலிபன் படைகள் வடக்கிலிருந்து ஒவ்வொரு நகரையும் கைப்பற்றி காபூல் நோக்கி வந்தன. காபூல் நகரமே, தன்னை தாலிபன்கள் வசம் ஒப்படைப்பதற்காகக் காத்திருந்தது போலவே காட்சியளித்தது. 2001-ல் அமெரிக்கா ஆப்கன் மீது தனது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவரை 167 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இருப்பினும், இந்தப் படைகளால் ஒரு சில தினங்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஏன் இவை எல்லாம் நடைபெறுகின்றன?

வரலாற்றின் நாற்சந்தியில் ஆப்கானிஸ்தான்!

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலக நாடுகள் தங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளை பலப்படுத்தி, நவீன அரசுகளின் வழியே பலன்களை மக்களுடன் பகிர தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தன. அதுபோலவே ஆப்கானிஸ்தானும் ஒரு குடியரசாக மலரத் தொடங்கியது. நகரங்களின் அடிப்படைக் கட்டமைப்புகள், விமான நிலையங்கள், நவீன தொழிற்சாலைகள், பல்கலைக்கழகங்கள், பெண்களுக்குக் கல்வி என புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் வாழும் பஸ்தூன் பழங்குடிகளின் தலைமையால் நவீன மாற்றங்களை ஏற்க முடியவில்லை. இதற்கு எதிர்வினையாக அங்கு 1970-களின் இறுதியில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. அப்போது ஆப்கன் அரசு உதவி நாடியதும், ரஷ்யப் படைகள் உள்ளே நுழைந்தன.

மறுபக்கம் ரஷ்யப் படைகளை வெளியேற்றுவதற்காக அமெரிக்கா, இரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பஸ்தூன்களின் படைகளுக்கு ஆயுதங்களைக் கணக்கின்றி கொடுத்தன. `முஜாஹிதீன்கள்’ என்று தங்களை அழைத்துக்கொண்ட இந்தப் படைகளுக்கு பணமும் ஆயுதங்களும் தங்கு தடையின்றி கிடைக்க எல்லா வகையான ஏற்பாடுகளையும் அமெரிக்கா செய்தது. 1988-ல் வெளியான சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ‘ராம்போ 3’-ல், வீரம் செறிந்த யுத்தத்தைச் செய்துகொண்டிருக்கும் முஜாஹிதீன்களிடம் சென்று ஆயுதங்களை வெற்றிகரமாகக் கொடுப்பதுதான் கதாநாயகனின் பணி.

வரலாற்றின் நாற்சந்தியில் ஆப்கானிஸ்தான்!

முஜாஹிதீன்கள், ஆப்கன் அரசு, ரஷ்யப் படைகள் எனும் இந்த முக்கோண யுத்தத்தில் 1982-ல் மூன்று கோடி மக்கள் அகதிகளாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தனர். ஒன்றரைக் கோடி மக்கள் இரானுக்குச் சென்றார்கள். தெற்கு இரானின் ஒவ்வொரு நகரத்திலும் பெரும் எண்ணிக்கையில் வாழும் ஆப்கன் அகதிகளை நான் நேரில் சென்றபோது பார்த்திருக்கிறேன். அவர்களின் நிலை அவலத்திலும் அவலம்!

1986-ல் கார்மல், 1992-ல் நஜிபுல்லா எனத் தொடர்ந்து ஆட்சி மாற்றங்கள்... பிறகு புரட்சிகள், எதிர்ப்புரட்சிகள் ஏற்பட்டு 1994-ல் ஆப்கானிஸ்தான், தாலிபன் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. தாலிபன்கள் ஷரியத் எனும் முஸ்லிம் சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்தினர். 2001-ல் தாலிபன்களின் தலைவரான முல்லா முகம்மத் ஒமர் ஆப்கானிஸ்தானிலுள்ள பாமியான் புத்தர் சிலைகளைத் தகர்க்க உத்தரவிட்டார். பெண்கள் பள்ளிக்கூடம், கல்லூரி, வேலைக்குச் செல்வதைத் தடை செய்தனர். இவற்றை எதிர்த்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

வரலாற்றின் நாற்சந்தியில் ஆப்கானிஸ்தான்!

செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா, ஆப்கனில் உள்ள ‘அல்கொய்தா’தான் இதைச் செய்ததாகக் கருதியது. அமெரிக்கப் படைகள் ஆப்கன்மீது பெரும் தாக்குதலைத் தொடங்கின. 2002-ல் அமெரிக்கா அங்கு ஒரு காபந்து அரசை உருவாக்கியது. அதன் பின்னணியில் 2002-ல் தேர்தல் மூலம் ஹமித் கர்ஸாய் வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 2009-ல் மீண்டும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றார். 2014 மற்றும் 2019-களில் அஷ்ரஃப் கானி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நான்கு தேர்தல்களுமே நியாயமாக நடத்தப்பட்டனவா என்கிற சந்தேகங்கள் ஆப்கனில் வலுவாகவே இருக்கின்றன. 2002 முதல் 2021 வரை அமெரிக்கா நிறுவிய பாவைக்கூத்து ஜனாதிபதிகளின் கீழ் பலவீனமான, ஊழல் மலிந்த அரசுகள்தான் ஆப்கனை ஆட்சி செய்தன. அப்போதும் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் பல தொடரவே செய்தன.

2015 முதலே ரஷ்யா, இரான் ஆகிய நாடுகள் தாலிபன்களுக்குத் தங்களின் உதவிக்கரத்தை நீட்டின. வேறு குழுக்கள் அங்கு வலுப்பெறுவதைத் தடுக்கவே ராஜதந்திரமாகச் செய்வதாக அவர்கள் கருதினார்கள். அதேசமயம், அமெரிக்க உளவுத்துறைக்கு தாலிபன்கள் வலுப்பெற்றுவருவது பற்றிய தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதற்காக அமெரிக்காவுக்கும் தாலிபன் தலைமைக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் தோஹாவில் 2020, பிப்ரவரியில் கையெழுத்தானது. அதன்படி, கடந்த 18 ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே நீடித்துவந்த போர் முடிவுக்கு வந்தது. அடுத்த 14 மாதங்களில் அதாவது, ‘செப்டம்பர் 2021-ல் அமெரிக்கா தனது படைகளை முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக்கொள்ளும்’ என்று இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் தாலிபன்களிடம் எவ்வகையான சலுகைகளையும் அமெரிக்காவால் பெற முடியவில்லை.

வரலாற்றின் நாற்சந்தியில் ஆப்கானிஸ்தான்!

மார்ச் 2021-ல் மாஸ்கோவில் நிகழ்ந்த சர்வதேச அமைதிக் கருத்தரங்கில் தாலிபன்களின் தலைவர்கள் பத்துப் பேர் கலந்துகொண்டனர். தாலிபன்கள் கை ஓங்கியதிலிருந்தே அண்டை நாடுகள் தாலிபன் தலைமையுடன் நெருக்கம் பாராட்டத் தொடங்கின. பல நாடுகள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடந்த சில மாதங்களாகவே தாலிபன்களின் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

இன்னொரு பக்கம் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி ராணுவத் தலைமையையும் அதிகாரிகளையும் மாற்றிக்கொண்டேயிருந்தார். நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ராணுவ வீரர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனால், ராணுவத்தின் தலைமை சுகபோக வாழ்வை அனுபவித்துவந்தது. ராணுவத்துக்கான நிதி, ஆயுதங்கள், உணவு உள்ளிட்டவை காபூலிலிருந்து கிளம்பினாலும் கள வீரர்களை வந்தடையவில்லை. ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டு கள்ளச்சந்தைக்கு வந்தன. அமெரிக்கா கொடுத்த ஆயுதங்களெல்லாம் கள்ளச்சந்தையின் மூலம் தாலிபன்களின் கைகளுக்கு வந்து சேர்ந்தன என்றால் நிலைமையை யூகித்துக்கொள்ளுங்கள். ராணுவத்தின் வலிமை என்ன என்பதை அறிந்த ராணுவ வீரர்கள், மெல்ல தாலிபன்கள் வசம் சரணடைவதையே தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் செயலாகக் கருதினார்கள்.

வரலாற்றின் நாற்சந்தியில் ஆப்கானிஸ்தான்!

2021, செப்டம்பர் மாதம்தான் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாகத் திரும்ப வேண்டும். ஆனால், ஒரு மாதம் முன்னராக, ஆகஸ்ட் முதல் வாரமே தங்களின் படைகளோடு, உளவுப்பிரிவையும் அழைத்துக்கொண்டது அமெரிக்கா. அவர்கள் வெளியேறிய ஒரே வாரத்தில், வடக்கிலிருந்து தாலிபன்கள் ஒவ்வொரு நகரமாகக் கைப்பற்றிவந்தனர். ஆகஸ்ட் முதல் வாரம் தாலிபன் படைகள் ஆப்கனின் வடக்கு எல்லைப்புற மாகாணங்களான குந்தூஸ், சர்-ஏ-புல், ஜன்ஜான்- ஐக் ஆகியவற்றைக் கைப்பற்றின. கான்சி மாகாணத்துக்குள் தாலிபன்கள் நுழைந்தபோது, அதன் ஆளுநர் அலுவலகத்தின் சாவிக்கொத்தைப் பூச்செண்டுகளுடன் தாலிபன்கள் வசம் வழங்கினார். ஆகஸ்ட் 14 அன்று ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி தனது மாளிகையிலிருந்து அமெரிக்கத் தூதரகத்துக்குச் சென்று, அங்கிருந்து தனது நெருங்கிய சகாக்களுடன் உஸ்பெகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றார்.

பாலஸ்தீன அழிப்பு, அரபு உலக எண்ணை வளக் கொள்ளை என விரிந்த அமெரிக்காவின் பார்வையில் ஆப்கானிஸ்தானும் ஒரு பலிகடாதான். ஆப்கானிஸ்தான் மக்கள் இந்த ஆட்டத்தில் ஏதும் அறியாது தங்களின் தலைமுறைகளை, வாழ்க்கையைத் தொலைத்து நிர்கதியாக நிற்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் செறிவிழந்த யுரேனியத்தால் செய்யப்பட்ட குண்டுகளை அமெரிக்கா பாவித்ததன் விளைவாகக் குழந்தைகள் இன்றும் குறைபாடுகளுடன் பிறக்கின்றன.

இருபது ஆண்டுகளாக இவ்வளவு கோடிகளைச் செலவிட்டு அமெரிக்கா எதைச் சாதித்தது? அதைவிட விலை மதிக்க முடியாதது, அங்கு ஆறுபோல் ஓடிய மனித ரத்தம். இந்த இருபது ஆண்டுகளில் அங்கு இரண்டரை லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவும் ரஷ்யாவும் வெளியுறவுக் கொள்கை எனும் பெயரில் தங்களின் அகம்பாவத்தை நிரூபிக்க ஆப்கானிஸ்தானின் வரலாற்றையே பாழ்ப்படுத்தியிருக்கிறார்கள்.

அஷ்ரஃப் கானி
அஷ்ரஃப் கானி

இப்போதும் அமெரிக்காவின் தோல்வியை விவாதிப்பதைவிடவும், தாலிபன்களைக் கிண்டல் செய்யவே உலக ஊடகங்கள் நம்மைப் பயிற்றுவித்திருக்கின்றன. நிச்சயம் தாலிபன்கள் ஒன்றும் ஆப்கானிஸ்தானை நவீனத்துக்கு அழைத்துச் செல்லப்போவதில்லைதான். அடிப்படைவாதிகள் உலகெங்கும் காலச்சக்கரத்தைப் பின்னோக்கியே அழைத்துச் செல்வார்கள் என்பதுதான் வரலாறு நமக்குக் கற்பித்திருக்கிறது.

ஆப்கன் பல்வேறு பழங்குடிகள் வாழும் நாடு. இதில் பஸ்தூன் பழங்குடிகளே 40 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கிறார்கள். இப்போது தாலிபன்கள் வெறும் பஸ்தூன்களின் அமைப்பாக இல்லாமல் டாஜிக்ஸ், ஹசாரஸ் முதலான பிற பழங்குடியினரும் கலந்த அமைப்பாக வலுப்பெற்றிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய அரசு உருவாகி, அது எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பதைக் காண இந்த உலகமே ஆவலாகக் காத்திருக்கிறது. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் இதில் என்ன மாதிரியாகப் பங்காற்றவிருக்கிறார்கள் என்பதே புவியரசியலை நிர்ணயிக்கும்.

காபூல் நகரத்தில் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் பதாகைகளை ஏந்தி தாலிபனின் ஆயுதம் ஏந்திய படைகளுக்கு முன்பாக போராடத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்துக்கு பதிலாகக் கிடைக்கவிருப்பது நல்ல முடிவுகளா அல்லது தோட்டாக்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism