Published:Updated:

ஒருபுறம் பஞ்ச்ஷிர், மறுபுறம் ஹக்கானி... நிலையான ஆட்சியமைப்பார்களா தாலிபன்கள்?

ஆப்கன்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கன்

தற்போது அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத் தலைமையிலான `ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி’ தாலிபன்களுக்கு எதிராகப் போராடிவருகிறது.

ஒருபுறம் பஞ்ச்ஷிர், மறுபுறம் ஹக்கானி... நிலையான ஆட்சியமைப்பார்களா தாலிபன்கள்?

தற்போது அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத் தலைமையிலான `ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி’ தாலிபன்களுக்கு எதிராகப் போராடிவருகிறது.

Published:Updated:
ஆப்கன்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கன்

தாலிபன்கள், ஆப்கனைக் கைப்பற்றி, கிட்டத்தட்ட 25 நாள்கள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் முறையான ஆட்சி அமைக்க முடியாமல் திணறிவருகிறது தாலிபன். பஞ்ச்ஷிர் படைகள் ஒருபுறம் குடைச்சல் கொடுக்க, மறுபுறம் தாலிபன்களுக்கு உள்ளேயே ஆட்சியமைப்பதில் மோதல் உண்டானது. பிரச்னைகளை எப்படியாவது சமாளித்து ஆட்சியமைத்துவிடலாம் என்று நினைத்த மூத்த தாலிபன் தலைவர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. அதை உலக நாடுகளுக்குக் காட்டிக்கொள்ளாமல் சமாளிக்க, இடைக்கால அமைச்சரவையை அறிவித்திருக்கிறார்கள் தாலிபன்கள். முழுமையான, முறையான ஆட்சியமைக்க தாலிபன்கள் திணறுவதற்கான காரணங்கள் என்னென்ன?

சவால்விடும் பஞ்ச்ஷிர் படை!

ஆப்கனில் இனி தாங்கள்தான் எல்லாம் என்று நினைத்துக்கொண்டிருந்த தாலிபன்களுக்கு, பஞ்ச்ஷிர் படையினர் பேரதிர்ச்சியைத் தந்தனர். ஆப்கனின் 33 மாகாணங்களை எளிதாகக் கைப்பற்றிய தாலிபன்களுக்கு, பஞ்ச்ஷிர் மாகாணம் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆப்கன் தலைநகர் காபூலின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கிறது பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு. தாலிபன்களின் முந்தைய ஆட்சியான 1996-2001 காலகட்டத்திலிருந்தே, அவர்களை எதிர்த்து நிற்கிறார்கள் பஞ்ச்ஷிர் மக்கள்.

1980-களில் நடைபெற்ற ரஷ்யாவுக்கு எதிரான ஆப்கன் கிளர்ச்சியில், பஞ்ச்ஷிர் மக்களை ஒன்று திரட்டி கெரில்லா படை ஒன்றை உருவாக்கினார் அகமது ஷா மசூத். ரஷ்யா வெளியேறிய பிறகு, தாலிபன்களின் பழைமைவாதத்தை விரும்பாத அகமது ஷா மசூத், அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை தாலிபன்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது பஞ்ச்ஷிர் படை.

ஒருபுறம் பஞ்ச்ஷிர், மறுபுறம் ஹக்கானி... நிலையான ஆட்சியமைப்பார்களா தாலிபன்கள்?

தற்போது அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத் தலைமையிலான `ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி’ தாலிபன்களுக்கு எதிராகப் போராடிவருகிறது. கடந்த செப்டம்பர் 4-ம் தேதியன்று இரு தரப்புக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டதாகச் செய்திகள் வந்த நிலையில், ``நாங்கள் பஞ்ச்ஷிர் பகுதியைக் கைப்பற்றிவிட்டோம்’’ என அறிவித்தது தாலிபன். ஆனால், அகமது மசூத், ``தாலிபன்கள் பொய் சொல்கிறார்கள். பஞ்ச்ஷிரின் எல்லையைக்கூட தாலிபன்கள் தாண்டவில்லை. எல்லையில் நடைபெற்ற மோதலில் 700 தாலிபன்களை நாங்கள் கொன்றுவிட்டோம்’’ என்றார்.

இரு தரப்பும் சொல்வதில், எது உண்மை என்பதை உறுதிசெய்ய முடியாமல் சர்வதேச ஊடகங்களே குழம்பிப்போயின. இதற்கிடையில், ``மத குருமார்களின் யோசனையின்படி, தாலிபன்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்’’ என்று சொல்லியிருந்தார் அகமது மசூத். ஆனால், அதற்கு எந்தவொரு பதிலையும் தாலிபன் தரப்பு தரவில்லை.

தொடர்ந்து, பஞ்ச்ஷிர் படைகளைச் சமாளிக்க தாலிபன்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்பதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து ஆப்கன் தலைநகர் காபூலின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் வெடித்தது. ``பாகிஸ்தானே... ஆப்கனைவிட்டு வெளியேறு’’ என்ற முழக்கத்தோடு வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள் மக்கள். தாலிபன்களையும், அவர்களை ஆதரிக்கும் பாகிஸ்தானையும் எதிர்த்து நடைபெற்றுவரும் இந்தப் போராட்டங்களில், பெரும்பாலும் பெண்களே முன்னிற்கிறார்கள். ``பெண்கள் பங்கெடுக்கும் போராட்டம், எங்கள் பலத்தின் அடையாளம். போராடுபவர்களில் பலரும் தேசிய எதிர்ப்பு முன்னணியைச் சேர்ந்தவர்கள்’’ என்றிருக்கிறார் அகமது மசூத். மக்கள் கூட்டத்தைக் கலைக்க, வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் தாலிபன்கள். ஒருசில இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் மக்கள் கலையவில்லை. மேலும், போராட்டத்தைச் செய்தியாக்கும் பத்திரிகையாளர்களையும், கேமராமேன்களையும் தாலிபன்கள் பிடித்துச் சென்றதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன.

ஒருபுறம் பஞ்ச்ஷிர், மறுபுறம் ஹக்கானி... நிலையான ஆட்சியமைப்பார்களா தாலிபன்கள்?

தலைவலியான ஹக்கானி குழு!

ஒருபுறம் பஞ்ச்ஷிர் படையும், போராடும் மக்களும் தாலிபன்களுக்கு தலைவலியை ஏற்படுத்த, மற்றொருபுறம் அவர்களுக்குள்ளேயே சண்டைகள் மூண்டன. 1980-களில் ரஷ்யப் படையை எதிர்க்க உருவான இஸ்லாமிய ஆயுதக்குழுக்களில் ஒன்றுதான் ஹக்கானி. ஜலாலுதீன் ஹக்கானியால் தொடங்கப்பட்ட இந்தக் குழு, நாளடைவில் தாலிபன்களோடு கைகோத்தது. ஜலாலுதீன் ஹக்கானியின் மகனான சிராஜுதின் ஹக்கானிதான் தற்போது தாலிபன்களின் துணைத் தலைவராகவும், ஹக்கானி பிரிவின் தலைவராகவும் செயல்பட்டுவருகிறார். ஹக்கானி பிரிவினருக்கும், தாலிபனின் முல்லா அப்துல் கானி பராதர் உட்பட முக்கியத் தலைவர்களுக்குமிடையே ஆட்சியமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ``உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில், ஆப்கனின் அனைத்து இனக்குழுக்களும் இணைந்து ஓர் அரசை ஏற்படுத்த வேண்டும்’’ என்றது முல்லா பராதர் தரப்பு. ஹக்கானி தரப்போ, ``பெரும்பான்மையாக இருக்கும் சன்னி பஷ்தூன்கள் மட்டுமே இடம்பெறக்கூடிய ஒரு தூய அரசுதான் அமைய வேண்டும். அதிகாரத்தை யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது’’ என்றிருக்கிறது. இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட, ஒருகட்டத்தில் அது துப்பாக்கிச்சூடு வரை சென்றிருக்கிறது. சமாதானம் ஏற்படுத்துவதற்காக, பாகிஸ்தான் அரசின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பிரிவின் தலைவர் ஃபைஸ் ஹமீது ஆப்கனுக்குச் சென்றிருப்பதாகச் செய்திகள் சொல்லப்பட்டன. செய்தி வெளியான இரண்டு நாள்களில் ஆப்கனில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருக்கிறது. ``ஆப்கன் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதால், இது இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவு’’ என்று எச்சரிக்கிறார்கள் காபூல் அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

நிலையான ஆட்சியமைப்பார்களா தாலிபன்கள்?

``சீனாவும் பாகிஸ்தானும் மட்டுமே தாலிபன்களை முழுமையாக அங்கீகரித்திருக்கின்றன. அமெரிக்கா ஆப்கனிலிருந்து வெளியேறிவிட்டதால், குறைந்தபட்சம் கொஞ்ச காலத்துக்காவது தாலிபன்களுக்கு எதிராக நிற்காது. மேற்கத்திய நாடுகளுக்கோ இதில் எந்தவொரு கவலையும் இருக்காது. இஸ்லாமிய நாடுகள் தாலிபன்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, போலவே எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தாலிபன்கள் ஆட்சியமைத்தால் அது இந்தியாவுக்கு மட்டுமே பெருந்தொல்லையாக அமையும். எனவே, தாலிபன்கள் ஆட்சியமைப்பதற்கு எதிராக இந்தியாவைத் தவிர வேறெந்த வெளிநாட்டிலிருந்தும் பெரிதாக அழுத்தம் தரப்படாது. இப்போதே தாலிபன்கள் இடைக்கால ஆட்சி அமைத்துவிட்டதால், ஹக்கானி குழுவோடு சுமுகமாகச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. மக்கள் போராட்டம், பஞ்ச்ஷிர் பிரச்னையை அடக்கிவிட்டால், முறையான தாலிபன் ஆட்சி அமைந்துவிடும் என்றே தெரிகிறது. ஆனாலும், அந்த ஆட்சி எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியே!’’ என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism