Published:Updated:

ஆப்கானிஸ்தான்... இந்தியாவின் தலைவாசலில் ஒரு புதுத் தலைவலி!

ஆப்கானிஸ்தான்
News
ஆப்கானிஸ்தான்

தாலிபன் அமைப்பை வேரறுப்பதற்காக ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் போர் நடத்திக் களைத்துப்போய் நாடு திரும்புகிறது அமெரிக்க ராணுவம்

சண்டையில் ஜெயிக்க முடியாதவர்கள், ‘நீ என்னை அடிக்காதே, நானும் உன்னை அடிக்க மாட்டேன்’ என்று சமாதான ஒப்பந்தம் போட்டுக்கொண்டு வெள்ளைக்கொடி காட்டுவார்கள். தாலிபன் தீவிரவாதிகளிடம் அப்படி ஒரு டீல் போட்டுக் கொண்டு சமாதானம் ஆகியிருக்கிறது, உலகின் ஒற்றை வல்லரசாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் அமெரிக்கா. ‘ஆப்கானிஸ் தானில் அல்-கொய்தா அமைப்புக்கோ, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கோ புகலிடம் தர மாட்டோம்’ என தாலிபன் அமைப்பு கொடுத்த உறுதியை நம்புகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

தாலிபன் அமைப்பை வேரறுப்பதற்காக ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் போர் நடத்திக் களைத்துப்போய் நாடு திரும்புகிறது அமெரிக்க ராணுவம். அமெரிக்கா இதுவரை நடத்தியதில் மிக நீண்ட போர் இது. இதற்காக அவர்கள் செலவழித்தது சுமார் 164 லட்சம் கோடி ரூபாய். கிட்டத்தட்ட இந்தியாவின் ஓராண்டு பட்ஜெட் போல நான்கு மடங்குத் தொகை. அமெரிக்கப் படையினர், ஆப்கன் ராணுவத்தினர், அப்பாவி மக்கள் என சுமார் இரண்டரை லட்சம் உயிரிழப்புகள்.

‘அமெரிக்கா வெளியேறுவது எங்கள் வெற்றி’ என்கிறது தாலிபன் அமைப்பு. வியட்நாமுக்குப் பிறகு அமெரிக்கா புறமுதுகிட்ட அடுத்த களமாக ஆப்கன் இருக்கிறது. அமெரிக்காவின் இந்தப் பின்வாங்கல், இந்தியாவைப் பேராபத்தில் தள்ளியிருக்கிறது.

ஆப்கானிஸ்தான்... இந்தியாவின் தலைவாசலில் ஒரு புதுத் தலைவலி!

2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டடக் கோபுரங்களை விமானங்கள் மூலம் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்தியது அல்-கொய்தா அமைப்பு. 20 ஆண்டுகள் கழித்து வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஆப்கனிலிருந்து கடைசி அமெரிக்க ராணுவ வீரர்களும் கிளம்பிவிடுவார்கள்.

ஒரு தேசத்தில் தீவிரவாதிகள் இருந்தாலே பெரும் அச்சுறுத்தல். ஒரு தேசத்தையே தீவிரவாதிகள் ஆட்சி செய்தால், உலகம் என்ன ஆகும் என்பதற்கான பாடம் ஆப்கானிஸ்தான். அமெரிக்கா தூவிய விஷ விதை விருட்சமாகி, அவர்களையே பதம் பார்த்ததுதான் தாலிபன் வரலாறு.

ஒரு பொம்மை அரசை ஆப்கனில் நிறுவி, சோவியத் ரஷ்ய ராணுவம் உள்ளே புகுந்து ஆட்சி செய்யப் பார்த்தது. சோவியத் படைகளை விரட்டுவதற்காக ஆப்கனில் பல முஜாகிதீன் குழுக்களை அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் பாகிஸ்தானும் உருவாக்கின. தாலிபனும் அவற்றில் ஒன்று! ஒரு கட்டத்தில் சோவியத் படைகள் வெளியேற, தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தனர். வெறும் ஐந்து ஆண்டுகள்தான் ஆப்கனை ஆட்சி செய்தது தாலிபன் அமைப்பு. ஆண்களுக்கு தாடியைக் கட்டாயமாக்கி, பெண்கல்வியை ஒழித்து, டெலிவிஷன் உள்ளிட்ட பொழுது போக்குகளைத் தடை செய்து நாட்டை இன்னும் பின்னோக்கிச் செலுத்தியது அந்த ஆட்சி.

அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆப்கன் அப்போது பாதுகாப்பான புகலிடமானது. ஒசாமா பின் லேடன் இங்கிருந்து திட்டமிட்டு அமெரிக்காவில் தாக்குதல் நடத்த, வெகுண்டெழுந்தது அமெரிக்கா. தீவிரவாதத்தை வேரறுக்க அமெரிக்கப் படைகள் ஆப்கன் வந்தன. தாலிபன் அரசு வீழ்ந்தது. ஆனால், பின் லேடனும், தாலிபன் தலைவர் முல்லா முகமது ஓமரும் பாதுகாப்பாக பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். அமெரிக்காவுக்குத் தோழனாக ஒரு பக்கம் போரில் உதவிக்கொண்டே, இன்னொரு பக்கம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நண்பனாகவும் இருந்தது பாகிஸ்தான். இது அமெரிக்காவுக்கும் தெரியும். அதனால்தான் 2011 மே மாதம் பாகிஸ்தானில் அதிரடியாக நுழைந்து பின் லேடனைக் கொன்றபோது, அந்தத் தகவலை பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்க ராணுவம் தெரிவிக்கவில்லை. பின் லேடனை அவர்கள் தப்பிக்க வைத்துவிடுவார்கள் என்று பயம்.

ஆப்கனில் ஒரு ஜனநாயக அரசை உருவாக்கு வதன் மூலம் தாலிபன்களை அழித்துவிட முடியும் என அமெரிக்கா நம்பியது. ஆனால், அது ஒருபோதும் நடக்கவில்லை. அங்கு ஓர் அரசு இருக்கிறது. அமெரிக்க ராணுவத்தின் பலத்தால் அது பிழைத்திருக்கிறது. முக்கிய நகரங்களும், நெடுஞ்சாலைகளும் தவிர வேறு எந்தப் பகுதியும் அரசின் வசம் இல்லை. அங்கெல்லாம் தாலிபன்களின் ராஜ்ஜியம்தான். பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது. ஆனால், அதை நிர்வாகம் செய்வது தாலிபன்கள். நீதிமன்றங்கள் முதல் துப்புரவுப் பணி வரை எல்லாமே இப்படித்தான் இருக்கின்றன. தாலிபன் தீவிரவாதி யார், சாதாரண பொதுஜனம் யார் என்று பிரித்தறிய முடியாத நிலப்பரப்பில் முடிவில்லாத ஒரு யுத்தம் செய்துகொண்டி ருக்கிறோம் என்பதைத் தாமதமாகவே அமெரிக்கா உணர்ந்தது. அதனால் தாலிபன்களுடன் சமாதானமாகப் போக முடிவெடுத்தது.

முதல் கட்டமாக ஆப்கன் அரசும் தாலிபன்களும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு ஏற்பாடு செய்தது. அதன்பின் கத்தார் நாட்டின் தோஹா நகரில் தாலிபன் அமைப்பு ஓர் அலுவலகம் திறந்தது. அங்கு அமெரிக்கப் பிரதிநிதியும் தாலிபன் அமைப்பினரும் பேசினர். ‘இந்த மே மாதத்துக்குள் படைகளை வாபஸ் பெறுகிறோம்’ என அமெரிக்கா ஒப்புக்கொண்டது. ஆனால், கொஞ்சம் தாமதமாக இப்போதுதான் அமெரிக்கப் படைகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. பக்ராம் விமானத்தளமே ஆப்கனில் அமெரிக்கப் படைகளின் தலைமையகம்போல இருந்தது. ஜூலை முதல் வாரத்தில் அதை மொத்தமாக காலி செய்துவிட்டது அமெரிக்கா.

அமெரிக்கப் போர்விமானங்களின் அரவணைப்பில்தான் நாட்டைக் காவல் புரிந்துவந்தன ஆப்கன் அரச படைகள். இப்போது அது இல்லாததால், பெரும் வேகத்துடன் முன்னேறி வருகிறது தாலிபன் படை. சுமார் 85,000 முழுநேரப் போர்வீரர்களுடன் மிரட்டும் தாலிபன்களைப் பார்த்து ஆப்கன் ராணுவத்தினர் பின்வாங்குகிறார்கள், சரணடைகிறார்கள், பயத்தில் பக்கத்து நாடுகளுக்குப் போய்த் தஞ்சமடைகிறார்கள். இன்னும் சில வாரங்களில் ஒட்டுமொத்த தேசமும் தாலிபன் கரங்களில் போய்விடக்கூடும். இப்போதே பத்திரிகையாளர்கள், பெண் பிரமுகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று பலரும் தாக்கப்படுகிறார்கள்.

ஆப்கானிஸ்தான்... இந்தியாவின் தலைவாசலில் ஒரு புதுத் தலைவலி!

தாலிபன்கள் இப்போது தங்களை வெறுமனே ஒரு கிளர்ச்சிக் குழுவாக நினைக்கவில்லை. அடுத்து ஆளப்போகும் அசைக்க முடியாத சக்தியாகத் தங்களைக் கருதுகிறார்கள். அப்படி அவர்கள் ஆட்சியைப் பிடித்தால், இப்போது வெளிநாட்டுப் படைகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் அரசு என்ன ஆகும், தாலிபன்கள் ஆதிக்கத்துக்கு வந்தால் அங்கு தூதரகங்கள் இருக்குமா, அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமா போன்ற எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

தாலிபன் தலைவர் முல்லா முகமது ஓமர் இறந்ததையே அந்த அமைப்பு இரண்டு ஆண்டுகள் ரகசியமாக வைத்திருந்தது. அதன்பின் தலைவரான முல்லா அக்தர் மன்சூரை அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்திக் கொன்றது. இப்போது தலைவராக இருப்பவர், மௌல்வி ஹிபதுல்லா அகுன்ஸடா. தாலிபன் களுக்கும் அல்-கொய்தா அமைப்பினருக்கும் இருப்பது ரத்த உறவு. அதனால் அவர்கள் அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கும் இதர வெளிநாட்டுத் தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து வளர்த்தால் என்ன ஆகும் என்ற கவலை உலகத்துக்கே இருக்கிறது.

தாலிபன்கள் அதிகாரத்துக்கு வருவதால் இந்தியாவுக்குப் பல தலைவலிகள் ஏற்படும். ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக ஏராளமான முதலீட்டில் திட்டங்களைச் செய்துவருகிறது இந்தியா. இதற்காக இந்தியர்கள் பலர் அங்கு உள்ளனர். தாலிபன்கள் எப்போதும் பாகிஸ்தான் பக்கமே இருப்பதால், அவர்களுக்கு இந்தியா என்றால் ஆகாது. எனவே, அந்த முதலீடுகளும் இந்தியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகும். எல்லை தாண்டிய தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக இதுவரை பாகிஸ்தான் மட்டுமே இருந்தது. இனி அது ஆப்கன் வரை நீளும்.

தனது பெல்ட் ரோடு திட்டத்தின் மூலம் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் சீனா, ஆப்கனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது. அமெரிக்கா வெளியேறியதும் தாலிபன்களுக்குத் தாலாட்டு பாடும் தாயாக சீனா மாறலாம். அப்போது இந்தியாவின் தலைவலி இன்னும் அதிகமாகும்.