Published:Updated:

பாலியல் தொழிலில் பெண்கள்... விற்கப்படும் குழந்தைகள்... துயரங்களின் தேசமாகும் ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தான்!
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை குறித்து சர்வதேச ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகள் அதிர்ச்சியையும் மனவலியையும் ஏற்படுத்துகின்றன

பாலியல் தொழிலில் பெண்கள்... விற்கப்படும் குழந்தைகள்... துயரங்களின் தேசமாகும் ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை குறித்து சர்வதேச ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகள் அதிர்ச்சியையும் மனவலியையும் ஏற்படுத்துகின்றன

Published:Updated:
ஆப்கானிஸ்தான்!
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரத்தைப் பிடித்து ஓராண்டு நெருங்கும் நிலையில், அங்கு பெண்களும் குழந்தைகளும் மிகக் கொடுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக் கிறார்கள். பட்டினிச்சாவை எதிர்நோக்கும் பெற்றோர் பலர், தங்களின் பெண் குழந்தைகளைக் காசுக்காக விற்கும் அவலம் அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தாலிபன்கள் ஆட்சி ஓராண்டு...

20 ஆண்டுகளாக அமெரிக்காவின் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் மீண்டும் தாலிபன்கள் வசம் வந்தது. அமெரிக்கப் படைகள் வெளியேறியதால், அதிகாரம் முழுவதும் தாலிபன்களின் கைக்கு வந்துவிட்டது. அடுத்த மாதம் தாலிபன்களின் ஆட்சி ஓராண்டை நிறைவு செய்கிறது.

மத அடிப்படைவாதிகளான தாலிபன்களின் ஆட்சியில், பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு பெண்கள் ஆளாக்கப்படுகிறார்கள். கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், வானொலி அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றிவந்த பெண்கள், கடந்த பல மாதங்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். வேலையிழந்த காரணத்தால் லட்சக்கணக்கானோர் பட்டினி கிடக்கிறார்கள். குறிப்பாக, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அன்றாட உணவுக்கே அல்லாடுகின்றன. பெண்கள் வேலைக்குச் செல்ல தாலிபன் அரசு விதித்த தடைதான் இதற்கு முக்கியக் காரணம்.

பாலியல் தொழிலில் பெண்கள்... விற்கப்படும் குழந்தைகள்... துயரங்களின் தேசமாகும் ஆப்கானிஸ்தான்!

ஊடகப் பணியை இழந்த பெண்களில் ஒருவர் ஃபர்கானாஸ். வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றிய இவரது சம்பாத்தியத்தில்தான் எட்டுப் பேர்கொண்ட அந்தக் குடும்பம் உயிர் வாழ்ந்தது. தற்போது அவரது குடும்பம் உணவுக்கு வழியின்றி தவிக்கிறது. ‘பெரியவர்களான நாங்கள் பசிக் கொடுமையைத் தாங்கிக் கொள்கிறோம்... ஆனால், ‘பசிக்கிறது... சாப்பாடு கொடுங்கள்...’ என்று அழும் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வது?’ என்று கண்ணீர் வடிக்கிறார் அந்தப் பெண்மணி.

ஊட்டச்சத்து குறைபாடு... நிதி நெருக்கடி!

ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை குறித்து சர்வதேச ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகள் அதிர்ச்சியையும் மனவலியையும் ஏற்படுத்துகின்றன. ‘ஆப்கனில் பெரும்பாலான குடும்பங்களில் சாப்பாடு என்றால் வெறும் ரொட்டிதான் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. எப்போதாவது, கொஞ்சம் காய்கறிகளைச் சேர்த்து சிலர் சாப்பிடுகிறார்கள். சர்க்கரை கலந்த டீ என்பதே ஆடம்பரமான ஒன்றாகிவிட்டது. போதுமான அளவுக்கு உணவு இல்லாததால், பெரும்பாலோருக்கு உடல் எடை குறைந்துவிட்டது. அதனால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமப்படுகிறார்கள்’ என்பதே அந்தச் செய்தி.

உணவுப் பற்றாக்குறை அதிகரிப்பதால், குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துவருகிறது. போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்காததாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் 2022-ல் முதல் மூன்று மாதங்களிலேயே 13,700 பச்சிளம் குழந்தைகளும், 26 தாய்மார்களும் மரணமடைந்திருக்கிறார்கள் என்று பொது சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் வளர்ச்சியடைய நிறைய ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. அவை கிடைக்காத காரணத்தால், குழந்தைகள் மரணமடைகிறார்கள். நோய்களுக்கு ஆளான குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு பெற்றோர்கள் மருத்துவமனைகளுக்கு ஓடுவதைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், `இந்தத் தகவல்களெல்லாம் அமெரிக்க ஆதரவு ஊடகங்களால் பரப்பப்படுபவை’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் தாலிபன்கள்.

அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆப்கானிஸ் தான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தி ருப்பதால் கடுமையான நிதி நெருக்கடியை அந்நாடு எதிர்கொண்டுவருகிறது. நாட்டில் நாணயம் பற்றாக்குறையும் இருக்கிறது. இத்தகைய காரணங்களால், அங்கு பட்டினிப் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை.

பாலியல் தொழிலில் பெண்கள்... விற்கப்படும் குழந்தைகள்... துயரங்களின் தேசமாகும் ஆப்கானிஸ்தான்!

“வறுமை காரணமாக பெண் குழந்தைகளை விற்பது, பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடு வது என்கிற அவலமான போக்கு ஆப்கானிஸ்தா னில் தலைதூக்கியிருக்கிறது” என்பது சர்வதேச ஊடகம் ஒன்றில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. காபூலைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனது நான்கு குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல், பட்டினியில் கிடந்த நிலையில், கடைசி மகளை விற்பனை செய்ய முடிவுசெய்தார். 1,100 அமெரிக்க டாலருக்குத் தன் நான்காவது மகளை விற்கத் தயாராக இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்தார். அந்த விளம்பரம் பலருக்கும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. பதறிப்போன பக்கத்து வீட்டுக்காரர் அந்த விளம்பரத்தை முகநூலிலிருந்து நீக்கவைத்திருக்கிறார். “மக்கள் பலரும் தங்கள் குழந்தைகளை விற்கிறார்கள் என்கிற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். நாங்கள் சாப்பிட்டு ஒரு வாரத்துக்கு மேலாகிறது. கையில் சுத்தமாக பணமே இல்லை. ஆகவேதான், என் கடைசி மகளை விற்க முடிவுசெய்தேன்” என்று அந்தப் பெண் கண்ணீருடன் கூறியிருக்கிறார்.

துயரங்கள் நிறைந்த தேசமாக மாறிவிட்ட ஆப்கானிஸ்தானில், இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று பெண்கள் பொங்கியெழ ஆரம் பித்திருக்கிறார்கள். போராட்டங்களுக்கு தாலி பன் அரசு தடை விதித்திருந்தாலும், அதை மீறி ‘கல்வி, வேலை, சுதந்திரம்’ கோரி வீதிகளில் இறங்கி சிறிய அளவிலான போராட்டங்களை பெண்கள் நடத்திவருகிறார்கள்.

இந்தச் சிறு பொறி பெரு நெருப்பாக மாறக்கூடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism