அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு அதிகமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,000-த்தையும் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. உலகின் பெரும் பணக்கார நாடான அமெரிக்காவே கொரோனாவின் பிடியில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகிறது. இந்த நேரத்தில் மற்ற வளரும் மற்றும் ஏழை நாடுகளின் நிலை சற்று கடினமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக, அனைத்து வசதிகளும் குறைவாக உள்ள ஆப்பிரிக்காவின் நிலை சொல்ல முடியாத அளவில் இருப்பதாக ஐ.நா அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் வருங்காலத்தில் ஆப்பிரிக்காவின் நிலை எப்படி இருக்கும் எனக் கணித்துள்ளது ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா பொருளாதார ஆணையம். அதன்படி, `தற்போது வரை ஆப்பிரிக்கா முழுவதும் சுமார் 1,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 19,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஆப்பிரிக்காவின் முக்கியமான தலைநகரங்களிலும் மிகவும் வேகமாகக் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த மதிப்பு ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளைவிட மிகக் குறைவாக இருந்தாலும் எதிர்வரும் காலத்தில் இது இன்னும் அதிகளவில் அதிகரிக்கக் கூடும்.
கொரோனா தொற்று நோயால் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதிலும் சுமார் 3,00,000 மக்கள் உயிரிழப்பார்கள் என்றும் 30 லட்சம் பேர் வேலையிழந்து வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, உலகின் மற்றொரு கொரோனா மையப்பகுதியாக ஆப்பிரிக்கா உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்தக் கண்டத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மட்டும் தற்போது 100 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது.

மேலும் ஆப்பிரிக்கா முழுவதும் வென்டிலேட்டர் வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. அங்குள்ள மக்களில் 60% பேர் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் தவித்து வரும் நிலையில் கைகளைக் கழுவி தூய்மையாக வைத்திருப்பது என்பது கடினமான காரியம். அதன் காரணமாகவும் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கேமரூன் மற்றும் கானா ஆகிய பகுதிகளில் அதிகமான வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் 15 ஆப்பிரிக்கா நாடுகளுக்கு இன்னும் வைரஸ் பரவவில்லை. அந்நாடுகள் வலுவான தொலைதூர தனிமனித இடைவெளியை மேற்கொண்டால் நிச்சயம் கொரோனா ஆபத்திலிருந்து பிழைக்கலாம் என்றும் கூறியுள்ளது.