Published:Updated:

மிஸ் யுனிவர்ஸ் துன்ஸியின் ஹேர் ஸ்டைலுக்குப் பின் உள்ள சரித்திரம்! #MissUniverse2019

மழிக்கப்படாத தனது சுருள் தலைமுடியின் மீது, அவரின் மூதாதையர்கள் சுரங்கங்களிலிருந்து எடுத்த வைரங்களைக் கிரீடமாகச் சூட்டியிருக்கிறார் துன்ஸி.

இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாகத் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஸோஸிபினி துன்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 26 வயதான துன்ஸி தென்னாப்பிரிக்க நடிகை, மாடல். பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரண்டாவது கறுப்பினப் பெண். இவர், தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் பகுதியைச் சேர்ந்தவர். துன்ஸிக்குச் சூட்டப்பட்ட கிரீடம் ஒற்றுமையின் சக்தி (Power of Unity)' என்றுஅழைக்கப்படுகிறது. இது,18 காரட் தங்கம் மற்றும் 1,770 வைரக் கற்களைக்கொண்டு தயார்செய்யப்பட்டது.

இந்திய மதிப்பில் சுமார் 85 லட்ச ரூபாய் மதிப்பு பெறும் அந்தக் கிரீடம் தன் தலையில் சூட்டப்பட்ட பிறகு துன்ஸி பேசியது இதுதான்.  

"என்னைப் போன்ற நிறமுடைய, தலைமுடி உடைய பெண்கள் அழகற்றவர்களாகக் கருதப்படும் உலகத்தில்தான் நான் வளர்ந்தேன். ஆனால், அப்படியான எண்ணங்களுக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இனி, என்னைப் பார்க்கும் குழந்தைகள் என்னில் அவர்களின் பிரதிபலிப்பைக் காண்பார்கள்" என்றார்.

அட்லாண்டிக் அடிமைகள் பரிவர்த்தனை
அட்லாண்டிக் அடிமைகள் பரிவர்த்தனை

துன்ஸி கூறியது வெறும் மேடைப் பேச்சு மட்டுமல்ல, 400 ஆண்டுகள் வரலாற்றுப் பின்னணியுள்ள சொற்கள் அவை. பிரபஞ்ச அழகிப் போட்டிக்காகத் துன்ஸி பயணப்பட்டு வந்த அதே பாதையில்தான் 400 ஆண்டுகளுக்கு முன்பு பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என அவரின் மூதாதையர்கள் கப்பல் வழியாக ஆங்கிலேயப் படைகளின் அமெரிக்கக் காலனிகளுக்கு கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டார்கள். கப்பலில் அழைத்துச் செல்லப்பட்ட 12.5 மில்லியன் ஆப்பிரிக்கர்களில் 10.7 மில்லியன் மக்கள் மட்டுமே பிழைத்தார்கள். அந்தப் பயணப்பாதைக்கு அட்லாண்டிக் அடிமைகள் பரிவர்த்தனை வழி (atlantic slave trade route) என்றே பெயர். ஆப்பிரிக்க ஐரோப்பிய ஆசிய நாடுகளின் (Afro-eurasia) வணிகர்கள் அமெரிக்க வணிகர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அடிமைகள் பரிவர்த்தனை பலநூறு ஆண்டுக்காலம் நிகழ்ந்தது.

கறுப்பினப் பெண்களின் தலைமுடி
கறுப்பினப் பெண்களின் தலைமுடி

ஆப்பிரிக்க கறுப்பினப் பெண்களின் தலைமுடி மற்ற பெண்களின் தலைமுடியைவிட வித்தியாசமானது. ஆப்பிரிக்க இழை வடிவிலான தலைமுடி (Afro-textured hair) என்றே அதற்குப் பெயர். சுருட்டையான அடர்த்தியான தங்களது தலைமுடியை ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாகப் பின்னலிட்டு அலங்காரம் செய்துகொள்வது ஆப்பிரிக்காவில் பாரம்பர்யமாகவும் அவர்களுடைய அடையாளமாகவும் இன்றளவும் கருதப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து அவர்களது சருமத்தைக் காக்க அவர்களுடைய தலைமுடியின் அடர்த்தி உதவுகிறது. அதைப் பராமரிப்பதை ஒரு கலையாகவே செய்வார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிஸ் யுனிவர்ஸ் துன்ஸியின் ஹேர் ஸ்டைலுக்குப் பின் உள்ள சரித்திரம்! #MissUniverse2019

அதே பெண்கள் அமெரிக்கக் காலனிகளுக்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்டபோது அவர்களது தலைமுடிகள் மழிக்கப்பட்டன. கடல் கடந்து வந்த பிறகு, பராமரிக்க முடியாமல்போன அவர்களது தலைமுடி நோய்த் தொற்று உருவாக்கும் என நம்பப்பட்டது. வல்லரசு அமெரிக்க வீதிகளில் மொட்டையடித்த கறுப்பினப் பெண்கள் உலாவத் தொடங்கினார்கள். தலைமுடி மழிக்கப்பட்ட பெண்கள் தங்கச் சுரங்கங்களிலும் வைரச் சுரங்கங்களிலும் அடிமைகளாக உழைக்கப் பணியமர்த்தப்பட்டார்கள்.

அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள்
அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள்

கறுப்பின மக்களின் தாய்வழிச் சமூகத்தைப் பற்றி அறிய, தான் பயணப்பட்டதை ‘Lose your mother’ என்கிற புத்தகமாக எழுதிய சதியா ஹார்ட்மென், அடிமைகளாக அழைத்து வரப்பட்டமனிதர்களில் ஆப்பிரிக்காவிலேயே எஞ்சியிருந்த மக்களைப் பற்றியும் தங்களது தாய்வழிச் சமூகம் அங்குதான் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருப்பார்.

அப்படி எஞ்சியிருந்துவிட்ட தாய்வழிச் சமூகத்தின் நீட்சிதான் இன்று பிரபஞ்ச அழகியாகியிருக்கிறார். மழிக்கப்படாத தனது சுருள் தலைமுடியின் மீது தனது மூதாதையர்கள் சுரங்கங்களிலிருந்து எடுத்த வைரங்களைக் கிரீடமாகச் சூட்டியிருக்கிறார்.

miss universe zozobini tunzi
miss universe zozobini tunzi

அந்த வகையில் 85 லட்ச ரூபாய் கிரீடத்தைவிட தம் பெண்களின் சுயமரியாதையை மேடையேற்றியிருக்கும் அவரது சிகை அலங்காரம் விலை உயர்ந்ததாகிறது. பிரபஞ்ச அழகி, உலக அழகி, அமெரிக்க அழகி என அத்தனை அழகிகள் நிகழ்வுப் பட்டியலிலும் கறுப்பினப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, ஆலிஸன் ஃபெலிக்ஸ், ஷெல்லி ஆன் ஃப்ரேசர் எனத் தடகளப் போட்டிகளில் கறுப்பினப் பெண்கள் தங்கம் சூட்டியிருப்பது என இந்த ஆண்டு கருப்பினப் பெண்களின் எழுச்சிக்கான 'பிளாக் மேஜிக்' ஆண்டாக அற்புதம் செய்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு