Published:Updated:

பண்டோரா பேப்பர்ஸ்: `முறைகேடான முதலீடு, கோடிகளில் சொத்துக் குவிப்பு; 380 இந்தியர்கள் பெயர் வெளியீடு?'

பட்டியலில், 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் வெளிநாடுகளில் முறைகேடாகக் கோடிகளில் முதலீடு செய்து, சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகப் பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்டிருக்கிறது.

`பண்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியாகியிருக்கும் அந்தப் பட்டியலில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. 14 சர்வதேச கார்ப்பரேட் பெரு நிறுவனங்களிலிருந்து கசிந்த சுமார் 1.9 கோடி கோப்புகளைக் கொண்டு 600-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களால் புலனாய்வு செய்யப்பட்டு, இந்த `பண்டோரா பேப்பர்ஸ்' வெளியிடப்பட்டிருக்கிறது.

பண்டோரா பேப்பர்ஸ்
பண்டோரா பேப்பர்ஸ்
`தினசரி வருமானம் ரூ.1,000 கோடி' முகேஷ் அம்பானியை முந்துவாரா கௌதம் அதானி? - டாப் 10 பணக்காரர்கள்!

முன்னதாக, 2016-ம் ஆண்டு 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் முக்கிய ஆவணங்கள் வெளியாகி, உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த பனாமா பேப்பர்ஸ் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, டி.எல்.எஃப் நிறுவனத் தலைவர் கே.பி.சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பனாமா ஆவணங்களின் தொடர்ச்சியாகவே தற்போது வெளியாகியிருக்கும் பண்டோரா ஆவணங்களும் பார்க்கப்படுகின்றன. வரி ஏய்ப்பைப் பிரதானமாகக்கொண்டு வெளியாகியிருக்கும் இந்தப் பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், பாப் இசை பாடகி ஷகிரா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2016-ல் வெளியான பனாமா ஆவணங்களைப் புலனாய்வு செய்து வெளியிட்ட அதே பத்திரிகையாளர்கள் குழுவே இந்த பண்டோரா ஆவணங்களுக்கும் புலனாய்வுப் பணி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 117 நாடுகளிலிருந்து, 150-க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். நேற்றைய தினம் வெளியான இந்த பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்களில் 330-க்கும் மேற்பட்டோர் இந்நாள், முன்னாள் அரசியல் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஆப்பிரிக்காவின் சீஷெல் தீவு, ஹாங்காங், மத்திய அமெரிக்காவின் பெலிஸ் உள்ளிட்ட கடல்சார் தீவுகளைத் தங்கள் புகலிடமாகப் பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக முதலீடுகள் செய்து, வரிஏய்ப்பு செய்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

சச்சின் - நிரவ் மோடி- அனில் அம்பானி
சச்சின் - நிரவ் மோடி- அனில் அம்பானி

பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் சச்சின் சட்டவிரோதமாக முதலீடு செய்து நிறுவனம் ஒன்றைத் தொடங்கியதாகவும், பின்னர் பனாமா ஆவணங்கள் வெளியான பிறகு, மூன்று மாதங்கள் கழித்துத் தனது நிறுவனத்தை மூடிவிட்டதாகவும் பண்டோரா ஆவணங்களில் கூறப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு