Published:Updated:

`நிரம்பிய குளிரூட்டப்பட்ட அறைகள்; ஒரே குழியில் 5 உடல்கள்’ - புதைக்க இடமின்றித் தவிக்கும் அமேசான்

பிரேசில்
பிரேசில் ( AP )

பிரேசிலின் அமேசானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது

பிரேசிலின் அமேசான் பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அங்கு மக்கள் உயிரிழப்பும் அதிகமாகியுள்ளது. இதனால் அங்கிருக்கும் கல்லறை ஒன்றில் புதைக்க இடமில்லாமல் ஒரே குழியில் ஐந்து சவப்பெட்டிகளை வைத்து புதைத்திருக்கின்றனர். உயிரிழப்புகள் இப்படியே தொடர்ந்தால் சிலநாள்களில் சவப்பெட்டிகளும் தீர்ந்துவிடும் நிலை ஏற்படும் என்று அப்பகுதியினர் கவலை தெரிவிக்கின்றனர்.

பிரேசில்
பிரேசில்
AP

அங்கு இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ள மூன்று நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சிலநேரங்களில் அந்த அனுமதியும் வழங்கப்படுவதில்லை. ரியோ டி ஜெனிரோவில் ஏற்கெனவே உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு மேலே தற்போது உடல்களைப் புதைக்கும் வகையிலான கட்டுமானமங்களைக் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இடம் போதாமையால் சவப்பெட்டிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி புதைக்கவும் கல்லறை ஊழியர்கள் முயன்றிருக்கின்றனர். ஆனால், உறவினர்களின் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இம்முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது.

இறப்பு சதவிகிதம் அதிகம் உள்ள அமேசானின் தலைநகரான மானோஸிற்கு பிரேசிலின் மற்ற பகுதிகளிலிருந்து விமானம் அல்லது படகு மூலம் மட்டுமே செல்ல முடியும் என்பதால், இறந்தவர்களின் சடலங்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் குவித்து வைக்கப்பட்டு வருகின்றன. மொத்த பிரேசிலிலும் மானோஸில்தான் முதல்முறையாகத் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி இருந்தது. ஆனால், நேற்று 6,276 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்நிலை பிரேசிலின் பிற நகரங்களுக்கும் ஏற்படலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.

பிரேசில்
பிரேசில்
AP

பிரேசிலின் சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டீச், ``தற்போதைய இந்தப் பேரிடரைப் பொறுத்தவரையில் மானோஸிற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேவையான வென்டிலேட்டர்களுடன் ஒரு விமானம் வியாழக்கிழமை அன்று அங்கு அனுப்பப்பட உள்ளது’’ எனக் கூறியுள்ளார். ஆனால், இவையெல்லாம் மிகவும் தாமதமான நடவடிக்கைகள் என அங்கிருக்கும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் பொறுபில்லாமல் அலட்சியமாக நடந்துகொள்வதாகவும் வீட்டில் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கக்கூட மருத்துவர்கள் மறுப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

`ராமாயணத்தில் அனுமன், பைபிளில் இயேசு போல் உதவுங்கள்’ - பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

பிரேசிலின் இறப்பு விகிதம் அனைத்து வளரும் நாடுகளைவிடவும் அதிகம் என டாய்ச் வங்கியின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் ஆபத்தை உணராமல் அதை `little cold’ என்று குறிப்பிட்ட பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவிடம் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாவதைக் குறித்து கேட்டபோது, ``நான் இதற்காக வருந்துகிறேன். என்னால் வேறு என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்? என்னால் அற்புதங்களையெல்லாம் நிகழ்த்த முடியாது" என அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இது அங்கே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பிரேசிலில் 79,361 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 5,511 பேர் இறந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு