2019 ஜூன், ஜூலை மாதங்களில் மரங்கள் வெட்டப்படுவது தொடர்பில், அமேசான் காட்டு மரங்களே உலகின் பேசுபொருளாகியிருந்தன. இப்போது கடும் தீயில் சிக்கித் தவிக்கிறது அமேசான் காடு. இரண்டும் நல்லதல்ல. கடந்த ஜூலை மாதம் மட்டும் அமேசானில் சுமார் 1,345 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்பட்டன. இது டோக்கியோ நகரத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு இரண்டு முதல் மூன்று கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டன.

அமெரிக்க நாட்டின் நிலப்பரப்பில் பாதியளவு இருக்கும், அமேசான் காடுகளின் பரப்பளவு. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரேசில் அரசும் சட்டத்துக்குப் புறம்பாக வெட்டப்படும் மரங்களைப் பறிமுதல் செய்வது கிடையாது. சென்ற ஆண்டு சுமார் 8,83,000 கன அடி மரங்கள் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை வெறும் 1,410 கன அடிதான். காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

அமேசான் காடுகள், கடந்த இரு வாரங்களாகப் பற்றியெரிகின்றன. 2018-ம் ஆண்டு இதே மாதத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயைவிட சுமார் 86 சதவிகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த ஆண்டு மட்டும் இதுவரை 72,843 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அதுவும் கடந்த வாரம் மட்டும் 9,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதைக் கணிக்க முடியவில்லை. ஆனால், நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களின் மூலம் புகையை விண்வெளியிலிருந்து காண முடிகிறது. அமேசான் காடுகளிலிருந்து சுமார் 2,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாவ்பாலோ நகரத்தை, கரும்புகை சூழ்ந்துள்ளது. கோப்பர்நிக்கஸ் செயற்கைகோள் புகைப்படம், கரும்புகை வடக்கு முதல் தெற்கு வரை கத்தி கிழித்துக்கொண்டுச் செல்வதுபோல் காட்டுகிறது.

``அமேசானில் இதுவரை இந்தளவுக்கு காட்டுத்தீ ஏற்பட்டதற்கான தரவுகள் கிடையாது. கடந்த சில மாதங்களாக நிகழ்ந்துவரும் காடு அழிப்பும் இதற்கு முக்கியமான காரணம்’’ என்கிறார் சூழலியலாளர் தாமஸ் லவ்ஜாய். இவர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள சூழலியல் செயற்பாட்டாளர்கள் பலரும் அமேசான் சீரழிவுகள் குறித்து எச்சரிக்கை செய்துவருகின்றனர். அதுவும் கடந்த ஆண்டு பிரேசில் அதிபராக போல்சோனரோ பதவியேற்ற பிறகு, இந்தச் சீரழிவு அதிகமாகியுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். வலதுசாரி சிந்தனைகொண்ட அதிபர், ‘அமேசான் காடுகளில் உள்ள கனிமங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படும். முதலீட்டுக்கு அமேசான் காடுகள் திறந்துவிடப்படும்’ என்று பிரசாரத்தில் அறிவித்தே தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். பிறகென்ன, கேட்கவா வேண்டும்?

இந்த மாதத் தொடக்கத்தில் பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற காடு அழிப்பைவிட, இந்தக் கோடையில் நடைபெற்ற காடு அழிப்புதான் மிக அதிகம் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ``கோடைக்காலங்களில் காட்டுத்தீ மூள்வதற்கு முக்கியமான காரணம், ஈரப்பதம் இல்லாததுதான். ஆனால், இந்த ஆண்டு ஈரப்பதம் இருந்தும் காட்டுத்தீ பற்றியிருக்கிறது. இதற்குக் காரணம் காடு அழிப்பாகத்தான் இருக்க முடியும்’’ என்கிறார் அமேசான் காடுகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுவரும் சூழலியலாளர் அட்ரியானே முயல்பெர்ட். ``மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது, மாடுகளை வளர்க்கும் பெரிய பண்ணைகள் அமைப்பதற்கு உதவிபுரிவது மட்டுமல்ல... பல்வேறு கனிமங்களை எடுப்பதற்கும் வசதியாகிறது. காடு அழிப்பின் மூலம் இந்த நிலம் மேலும் வறண்டுபோகும். அது, காட்டுத்தீயை அதிகரித்து மோசமான சுழற்சியில் நிறுத்திவிடும்’’ என்கிறார் லவ்ஜாய்.

அமேசான் காடுகளில் ஏற்படும் மழைப்பொழிவுக்குக் காரணம், அந்தக் காடுகளே. காடுகளின் அளவு குறைய குறைய, மழைப்பொழிவு குறைந்து, காடுகள் அழிந்து, மீட்டெடுக்க முடியாத சவன்னா காடுகள்போல் ஆகிவிடும் என்று கவலைகொள்கின்றனர் சூழலியல் செயற்பாட்டாளர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், மீட்டெடுக்க முடியாத கடைசிப் புள்ளியை நோக்கி அமேசான் காடுகள் சென்றுகொண்டிருக்கின்றன.

காடு அழிப்பும் மோசமான மேலாண்மையும் தொடர்ந்தால், இதைப்போன்ற காட்டுத்தீ மேலும் அதிகமாகும். அதன் தாக்கம் உலகம் முழுவதையும் பாதிக்கும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, அமேசான் காடுகளைக் காப்பது முக்கியத்துவம் பெறுகிறது. காடுகள் அழிக்கப்படுவதால் அல்லது தீக்கிரையாவதால், அவை தேக்கிவைத்துள்ள கார்பனை வெளியேற்றுவது மட்டுமல்ல... உலகம் வெளியிடும் கார்பனை உள்வாங்கும் சக்தியும் குறைந்து, காலநிலை மாற்றத்தைத் துரிதப்படுத்தும்.

அமோசானில் இந்த ஆகஸ்ட் மாதம் வெளியேறியுள்ள கார்பனின் அளவு எவ்வளவு என்பது, சில நாள்களில் தெரிந்துவிடும். ஆனால், ஐ.பி.சி.சி இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், `நாம் வெளியிடும் கார்பனை உள்வாங்க, இந்தப் பூமியில் போதிய காடுகள் இல்லை’ எனத் தெரிவித்துள்ளது.

தீ பற்றிப் பரவுவதற்கு எரிபொருள், ஆக்சிஜன், வெப்பம் ஆகிய மூன்று விஷயங்கள் தேவை. இவை இயற்கையாகவே அமேசான் காடுகளில் கிடைத்துவிடுவதால், தீ வேகமாகப் பரவுகிறது. அதுவும் இப்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது, பிரேசில் நாட்டில் பாரா மாகாணத்தில் விவசாயிகள் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில், ‘டே ஆஃப் ஃபையர்’ என அறிவித்து காடுகளை தீவைத்து அழிக்க ஆரம்பித்ததுதான். இப்படி அழிக்கப்படும் காடுகளில், பெரும்பண்ணைகளை அமைத்து கால்நடைகளை வளர்த்து, விவசாயம் செய்ய தொடங்குகிறார்கள். இதுபோதாதென பெரிய அணைகளை அமைத்து நீர்மின்சாரம் தயாரிக்கப் போவதாக பிரேசில் அரசாங்கமும் அறிவித்துள்ளது.

அமேசான் காடுகளில் சுமார் 10 லட்சம் பூர்வகுடி மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு இந்தக் காடுகள்தான் எல்லாமும். சுமார் 30 லட்சம் உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளன இந்தக் காடுகள். சென்ற ஆண்டு மக்கள் மற்றும் இயற்கைக்கான அறிவியல்கொள்கை அமைப்பு (IPBES) வெளியிட்ட அறிக்கையில், `இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் உயிரினங்கள் அழிந்துபோய்விடும்’ எனத் தெரிவித்தது. இதை அமேசான் காட்டுத்தீ உறுதிப்படுத்துகிறது.

அமேசான் காடுகளில் பற்றியெரியும் தீயைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்தவேண்டிய பிரேசில் நாட்டின் அதிபர், ‘தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமேசான் காடுகளில் தீயைப் பற்றவைக்கின்றன’ என்ற ஆதாரமற்ற மோசமான குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இது உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிரச்னை இருப்பதை ஒப்புக்்கொண்டால், அதற்கான தீர்வுகளை நோக்கிப் பயணிக்க முடியும். அப்படி பிரச்னை இருப்பதுபோல அதிபர் காட்டிக்கொள்ளவில்லை. சர்வதேச அளவில் பல்வேறு அரசுகள் குரல்கொடுத்ததோடு, டிகாப்ரியோ உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களும் கண்டனம் தெரிவித்தனர். அதன்பிறகே பிரேசில் அதிபர் இப்போது உலக நாடுகளிடம் அமேசானைக் காப்பாற்றுவதற்கு உதவிகோரி இருக்கிறார்.

பூமிக்குத் தேவையான ஆக்சிஜன் அளவில் 20 சதவிகிதம் தயாரிக்கும் அமேசான் காடுகளே, இந்த உலகின் நுரையீரல். அதற்கு இழைக்கப்படும் தீங்கு, இந்தப் பூமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல... ஒட்டுமொத்த மானுடத்துக்கும்கூட!