Published:Updated:

பில்கேட்ஸ் விவாகரத்தால் உலகத்துக்கு பாதிப்பா?

 பில் கேட்ஸ், மெலிண்டா ஃபிரெஞ்சு
பிரீமியம் ஸ்டோரி
பில் கேட்ஸ், மெலிண்டா ஃபிரெஞ்சு

‘அறக்கட்டளைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்த விவாகரத்தால் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்கிறார்கள்.

பில்கேட்ஸ் விவாகரத்தால் உலகத்துக்கு பாதிப்பா?

‘அறக்கட்டளைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்த விவாகரத்தால் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்கிறார்கள்.

Published:Updated:
 பில் கேட்ஸ், மெலிண்டா ஃபிரெஞ்சு
பிரீமியம் ஸ்டோரி
பில் கேட்ஸ், மெலிண்டா ஃபிரெஞ்சு

27 ஆண்டு இணை வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்திருக்கிறார்கள் பில் கேட்ஸும், மெலிண்டா ஃபிரெஞ்சு கேட்ஸும். ஆம், மெலிண்டா கேட்ஸ் சமூக வலைதளங்களில் தன் பெயரை இவ்வாறாக மாற்றியிருக்கிறார். “சில ஆண்டுகளாகவே பிரிந்துதான் இருக்கிறோம், இனி சேர முடியாத அளவுக்குப் பிரிந்துவிட்டோம். எனவே விவாகரத்து கோருகிறேன்” என வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் மெலிண்டா. பில்லின் காதலி, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு என மீடியாக்களில் எல்லா விரல்களும் பில் நோக்கித்தான் நீள்கின்றன. ஆனால், அதைத் தாண்டி பில்-மெலிண்டா பிரிவு உலகையே இன்னொரு விதத்தில் பாதிக்க இருக்கிறது என்பதுதான் கவலைச் செய்தி.

பில்கேட்ஸ் விவாகரத்தால் உலகத்துக்கு பாதிப்பா?

2019-ம் ஆண்டு அமேசானின் நிறுவனரும், உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான ஜெஃப் பெசோஸ் - மெக்கன்ஸி ஸ்காட் தம்பதி விவாகரத்து செய்துகொண்டபோது, அதுவும் உலகின் பேசுபொருளானது. ஜெஃபின் சொத்து மதிப்பு அப்போது 137 பில்லியன் அமெரிக்க டாலர். ஜெஃபின் சொத்தில் 25% ஸ்காட்டுக்கு வழங்கப்பட்டது. அன்று பெசோஸுக்கு ஆதரவாக வாதாடிய ஷெரி ஆண்டர்சன் இப்போது மெலிண்டாவுக்கும், ஸ்காட்டுக்கு ஆதரவாக வாதாடிய டெட் பில்பீ பில்லுக்கும் தற்போது வாதாட இருக்கிறார்கள். பில் கேட்ஸின் சொத்து மதிப்பு பெசோஸ் அளவுக்கு இல்லை என்றாலும், வாஷிங்டன் சட்டங்களின் படி, பில் கேட்ஸின் சொத்தை இரண்டாகப் பிரிக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். அதன்படி, லாரியல் நிறுவனர் ஃபிரான்கோய்ஸ் மேயர்ஸுக்கு அடுத்தபடியாக பெரும் பணக்காரப் பெண்ணாக, பட்டியலில் இரண்டாம் இடம் பெறவிருக்கிறார் மெலிண்டா. சொத்துகள் பிரிக்கப்பட்ட பின், இப்போது பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ், இனி டாப் டென் பட்டியலுக்குள்கூட இருக்க மாட்டார் என்கிறார்கள்.

ஆடம்பர சீசன்ஸ் உணவகங்கள், இரண்டு லட்ச ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள், ஆட்டோநேஷன் நிறுவன முதலீடுகள், தனியார் ஜெட்களுக்கான சிக்னேச்சர் ஏவியேஷன் பங்குகள், எல்லாவற்றையும் மீறி இந்தக் கொரோனாச் சூழலில் முக்கியப் பங்கு வகிப்பது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைதான். அதுதான் ஆரம்பத்தில் சொன்ன உலக மக்களுக்கான கவலைச் செய்தி. 1,600 பணியாளர்கள் மூலம் 135 நாடுகளுக்கு ஆண்டுதோறும் 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு உதவிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 2019 வரையில், இந்த அறக்கட்டளை 55 பில்லியன் அமெரிக்க டாலர்அளவுக்கு உதவி செய்திருக்கிறது. கோவிட்டுக்கு மட்டும் இதுவரையில் 2 பில்லியன் அமெரிக்க டாலரைச் செலவு செய்திருக்கிறது இந்த அறக்கட்டளை. 2006-ம் ஆண்டு பில்லின் நண்பரும், பெரும் பணக்காரருமான வாரன் பஃபெட் இந்த அறக்கட்டளைக்குத்தான் 31 பில்லியன் டாலர் வழங்கினார். அறக்கட்டளையின் மூன்றாவது டிரஸ்ட்டியும் 90 வயதான வாரன் தான்.

பில்கேட்ஸ் விவாகரத்தால் உலகத்துக்கு பாதிப்பா?

வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற சாதாரண நோய்களினால் உலகெங்கும் இறக்கிற குழந்தைகள் அதிகம். 1,000 குழந்தைகளுக்கு 83 குழந்தைகள் உலக அளவில் இறந்துகொண்டிருந்த சூழல், கடந்த 30 ஆண்டுகளில் 37 குழந்தைகள் என்று குறைந்துள்ளது. இதில் இந்த அறக்கட்டளையின் பங்கு அதிகம். அதேபோல், ஆப்பிரிக்கக் கண்டத்தில் போலியோவை ஒழித்ததிலும் பெரும்பங்கு வகிக்கிறார்கள் இந்தத் தம்பதி. பல்வேறு அறிவுசார் காப்புரிமைகள், தடுப்பூசி உரிமைகள் என அறக்கட்டளையின் மீது சர்ச்சைகள் இல்லாமலில்லை. ஆனால், வறிய தேசங்களுக்கு இந்த அறக்கட்டளை ஏராளமான உதவிகளைச் செய்துவருகிறது. சமீப காலங்களில், மெலிண்டாவின் கவனம் பெண்கள் முன்னேற்றம் பக்கம் நகர்ந்திருக்கிறது. பொருளாதார ரீதியில் பெண்கள் தன்னெழுச்சியாக அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக மெலிண்டா ஆரம்பித்ததுதான் பைவோடல் வென்சர்ஸ். அதேபோல், பில்லும், கேட்ஸ் வென்சர்ஸ் என்கிற நிறுவனத்தில் தனியாக முதலீடு செய்துவருகிறார். இவர்கள் இருவரும் தத்தமது நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறார்கள்.

‘அறக்கட்டளைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்த விவாகரத்தால் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்கிறார்கள். ‘பில்லும் மெலிண்டாவும் தொடர்ந்து இந்த அறக்கட்டளையில் டிரஸ்டிகளாக இருப்பார்கள்’ என அதிகாரபூர்வமாகச் செய்திகள் வெளியாகியிருந்தாலும், ‘நாளை என்ன நடக்கும்’ என்கிற பீதியில்தான் எல்லோருமே இருக்கிறார்கள்.