Published:Updated:

`மனைவியின் காதலன்மீது வழக்கு!' -கணவருக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதி

மனமுடைந்த கெவின், தனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவதற்குக் காரணமான அந்த நபர்மீது வழக்குத் தொடுத்தார்.

Kevin Howard
Kevin Howard

அமெரிக்காவைச் சேர்ந்தவர், கெவின் ஹோவர்ட். இவருக்குத் திருமணமாகி 12 வருடங்கள் ஆன நிலையில், கெவினின் மனைவி விவாகரத்து கோரி சமீபத்தில் நீதிமன்றத்தை நாடினார். இருவருக்கும் இடையே பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. இருந்தும் அவரது மனைவி விவகாரத்து கோரினார்.`கணவர், வேலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதில்லை' என்றுதான் விவாகரத்து கோரியிருந்தார். `இது, பேசித் தீர்க்கவேண்டிய பிரச்னை, நீதிமன்றத்தை நாடுவதினாலோ அல்லது விவாகரத்து பெறுவதினாலோ இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை' என கெவினுக்குத் தோன்றியது.

representational image
representational image

விவாகரத்து விஷயத்தில் ஏதோ வில்லங்கம் இருப்பதாக உணர்ந்தார். இதைக் கண்டறிய, தனியார் துப்பறிவாளரை அணுகினார். கெவினின் மனைவியும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். தன்னுடன் பணியாற்றும் சக ஆண் நண்பருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம்தான் விவாகரத்துக்குக் காரணம் என்பது துப்பறிவாளர் மூலம் தெரியவந்தது. இருவரும் காதலித்துவருவதாகவும், அதன்காரணமாகவே கெவினை விட்டு விலக முடிவெடுத்ததும் தெரியவந்துள்ளது. அந்த நபர், கெவினின் வீட்டுக்கு வந்துள்ளார். அவரது குடும்பத்தினருடன் விருந்து சாப்பிட்டுள்ளார். மனைவியின் நண்பர் என்ற முறையில் அவரிடம் சில விஷயங்களை கெவின் அப்போது பகிர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கெவின், தனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவதற்குக் காரணமான அந்த நபருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். ‘Alienation of affections’ என்ற சட்டப்படி வழக்குப்பதிவு செய்தார். இந்தச் சட்டம் அமெரிக்காவின் ஹவாய், மிசிசிப்பி, நியூ மெக்ஸிகோ, தெற்கு டகோட்டா மற்றும் உட்டா உள்ளிட்ட பகுதியில் மட்டுமே அமலில் உள்ளது. இந்த சட்டப்படி தங்களது திருமண முறிவுக்குக் காரணமான மூன்றாவது நபர்மீது வழக்குத் தொடரலாம். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமண முறிவுக்குக் காரணமான அந்த நபர் கெவினுக்கு 7 லட்சம் டாலர்களை (இந்திய ரூபாயின் மதிப்பில் 5 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இதுகுறித்துப் பேசிய கெவின், “ நான் என் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதில்லை, வேலையிலேயே அதிகக் கவனம் செலுத்துவதாகக் கூறி என்னிடம் விவாகரத்து கேட்டார். சூழ்நிலையின் காரணமாக இந்தத் தவறு நடந்திருக்கும் என அவரிடம் எடுத்துக்கூற முயன்றேன். எங்களின் 12 வருட வாழ்க்கையும் காதலும் அர்த்தமற்றதாகப் போனது. இது மிகவும் கடினமான சூழ்நிலை. திடீரென ஒருவர் உங்களை அழைத்து, உங்கள் குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டார் என்று கூறினால் எப்படி இருக்கும், அப்படித்தான் இருந்தது. திருமணத்தின் புனிதம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தக் காலக்கட்டத்தில் நான் பதிவுசெய்ய விரும்பினேன். அதன்காரணமாக வழக்குத் தொடுத்தேன்” என்றார் இயல்பாக.