Published:Updated:

`என் மகன் இறக்கும் முன்பே முடிவு செய்துவிட்டேன்!’ -தானத்தால் கவனம் ஈர்த்த அமெரிக்கத் தாய்

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தாய், தன் மகன் இறந்த பிறகும் அவனுக்காகச் சுரந்த தாய்ப்பாலை பிற குழந்தைகளைக் காப்பாற்ற தானம் செய்து வருகிறார்.

சியரா ஸ்ட்ராங்ஃபீல்ட்
சியரா ஸ்ட்ராங்ஃபீல்ட் ( FaceBook/@SierraStrangfeld )

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள விஸ்கோன்சின் (Wisconsin) மாகாணத்தைச் சேர்ந்தவர் சியரா ஸ்ட்ராங்ஃபீல்ட் (Sierra Strangfield) என்ற பெண்மணி. சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சியரா ஸ்ட்ராங்ஃபீல்ட்
சியரா ஸ்ட்ராங்ஃபீல்ட்
FaceBook/@SierraStrangfeld

இரண்டாவது முறையாகக் கர்ப்பம் தரித்த சியராவின் ஆண் குழந்தை ட்ரைசோம் 18 என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டது. பொதுவாக, ஒருவருக்கு இரண்டு ஜோடி என மொத்தம் 23 குரோமோசோம்கள் இருக்கும். ஆனால், ட்ரைசோம் 18 வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும், 18வது ஜோடி குரோமோசோம் மூன்றாக இருக்கும். இதனால் உடல் உறுப்புகள் சிதையும் அபாயம் ஏற்படலாம்.

சியராவின் குழந்தை, சாமுவேலுக்கு இந்த நோய் இருப்பது கருவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினர். இருந்தும் சாமுவேலின் உடலிலிருந்த ட்ரைசோம் 18 நோயை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. குழந்தை பிறந்தால் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என்பதைத் தெரிந்தே குழந்தையைப் பெற்றுக்கொண்டார் சியரா.

தாய் சியரா ஸ்ட்ராங்ஃபீல்ட்
தாய் சியரா ஸ்ட்ராங்ஃபீல்ட்
FaceBook/@SierraStrangfeld

கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி எட்டு மாதத்திலேயே அறுவைசிகிச்சை மூலம் சியராவுக்குக் குழந்தை பிறந்தது. மருத்துவர்கள் எதிர்பார்த்தது போலவே உடல் உறுப்புகள் வளர்ச்சியில்லாமல் பிறந்த குழந்தை, அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தது. தன் குழந்தையின் இறப்பால் கலங்கிய சியரா, தன் மகனுக்காகச் சுரந்த தாய்ப்பாலை பிற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றத் தானமாக வழங்கியுள்ளார்.

குழந்தைக்கு வசதியாக தாய்ப்பால் கொடுக்க உதவும் 5 நிலைகள்!  #WorldBreastFeedingWeek

அதை இரண்டு மாதங்களாகச் சேகரித்து அதாவது, 10 மாதங்கள் கழித்து தன் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறிய நவம்பர் 7-ம் தேதி, தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் தீவிர குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.

“தாய் தன் குழந்தைக்குப் பால் ஊட்டுவதைவிடச் சிறந்த உணர்வு வேறு எதுவும் இருக்க முடியாது. நான் இரண்டாவது முறையாகக் கர்ப்பமானபோது இதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் என் மகன் சாமுவேல் இறக்கப்போகிறான், அவனுக்கு என்னால் பாலூட்டமுடியாது என்ற செய்தி என்னை மிகவும் பாதித்தது.

தாய்ப்பால்
தாய்ப்பால்
FaceBook/@SierraStrangfeld

சாமுவேலுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது எனக்கு முன்னரே தெரியும், இருந்தும் அவனை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்ற சிறு எண்ணம் என் மனதின் ஓரத்திலிருந்தது. ஆனால், அது கனவாகவே மறைந்துவிட்டது. ஒருவேளை சாமுவேல் இல்லாமல் போனாலும், அவனுக்காகச் சுரந்த தாய்ப்பாலை தானம் செய்யவேண்டும் என சாமுவேல் பிறக்கும் முன்பே நான் முடிவு செய்துவிட்டேன்.

என் மகன் சாமுவேலைத்தான் என்னால் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், தற்போது நான் செய்யும் செயலால் பல குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறேன் என்ற திருப்தி உள்ளது. குழந்தைக்குப் பால் கொடுப்பது மனம் மற்றும் உடல் சார்ந்த விஷயம். தானம் கொடுப்பதற்காக நள்ளிரவில் கூட எழுந்து பாலை சேமித்துவைப்பேன். இது எனக்கும் சாமுவேலுக்கும் இந்த உலகில் ஓர் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. எனக்குத் தெரியும் என் மகன் எப்போதும் என்னுடன் இருப்பான்” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் சியரா ஸ்ட்ராங்ஃபீல்ட்.

சியரா ஸ்ட்ராங்ஃபீல்ட்
சியரா ஸ்ட்ராங்ஃபீல்ட்
FaceBook/@SierraStrangfeld

சியராவின் செயல் இணையத்தில் கசிய, அவரை உலக அளவில் பலரும் பாராட்டி வருகின்றனர். சியரா தாய்ப்பால் தானம் மட்டுமில்லாது, தன் குழந்தைக்கு ஏற்பட்ட அரியவகை நோயான ட்ரைசோம் 18 பற்றியும் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.