Published:Updated:

‘மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உதவிய சிறுமிகள்!’ -இந்திய வம்சாவளி பெண்ணை கௌரவித்த ட்ரம்ப்

ட்ரம்ப்  - ஸ்ரவ்யா
ட்ரம்ப் - ஸ்ரவ்யா ( AP )

அமெரிக்காவில் முன்னணியில் நின்று வேலை செய்யும் மருத்துவர்களுக்கு உதவிய சிறுமிகளை அதிபர் ட்ரம்ப் நேரில் அழைத்து கௌரவித்தார்.

உலக நாடுகளிலேயே கொரோனாவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு, இதுவரை 15,50,294 பேர் பாதிக்கப்பட்டு 91,981 பேர் உயிரிழந்துள்ளனர். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுகாதாரம், பொருளாதாரம், வாழ்வாதாரம், வேலையின்மை போன்ற பல பிரச்னைகளை சந்தித்துவருகிறது அமெரிக்கா. இவை அனைத்தையும் விரைவில் சரிசெய்ய வேண்டும் என அதிபர் ட்ரம்ப் உட்பட பலரும் தீவிரமாக வேலைசெய்துவருகின்றனர்.

ட்ரம்ப் - மெலானியா
ட்ரம்ப் - மெலானியா
AP

இந்நிலையில், அமெரிக்கா எதிர்கொண்டுள்ள இந்தக் கடுமையான கொரோனா காலத்தில், முன்னணியில் நின்று அந்நாட்டு மக்களுக்கு உதவிய பல ஹீரோக்களை நேரில் அழைத்து அதிபர் ட்ரம்ப் கௌரவப்படுத்தினார். கடந்த வெள்ளிக்கிழமை,வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சிறுமியையும் பாராட்டி விருது வழங்கினார் அதிபர்.

‘முற்றிலும் திறமையற்றவர், அவ்வளவுதான் சொல்ல முடியும்’ -  பகிரங்கமாக மோதிக்கொள்ளும் ட்ரம்ப் - ஒபாமா

ஸ்ரவ்யா அண்ணப்பரெட்டி (Sravya Annappareddy) என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது அமெரிக்கச் சிறுமி, மேரிலாண்ட் நகரில் உள்ள ஹனோவர் ஹில்ஸ் என்ற தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துவருகிறார். பெண்கள் சாரணர் படையில் இருக்கும் ஸ்ரவ்யா மற்றும் அவரது இரு நண்பர்களான லைலா கான், லாரன் மாட்னி ஆகியோர் இணைந்து, தங்களுக்கு அருகில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்ற பலருக்கு 100 பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.

சாரணர் படை சிறுமிகள்
சாரணர் படை சிறுமிகள்
AP

மேலும், இவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, 200 வாழ்த்து அட்டைகளையும் அனுப்பிவைத்துள்ளனர். சிறு வயதில் இவர்களுக்கு இருக்கும் கொடை உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சிறுமிகளைக் கௌரவப்படுத்தினர். சிறுமி ஸ்ரவ்யாவின் பெற்றோர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

`எங்களால் முழு உறவையும் துண்டிக்க முடியும்’ - சீனாவுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் ட்ரம்ப்

‘இன்று நாம் கௌரவிக்கும் ஆண்களும் பெண்களும் கஷ்டகாலங்களில் நம்மை ஒன்றிணைக்கும் பிணைப்புகளை நமக்கு நினைவூட்டியுள்ளனர். இதனால் நம் நாட்டை மீண்டும் திறந்து, நம்மை புதிய உயரத்துக்குக் கொண்டுசெல்ல முடியும்’ என அந்த நிகழ்ச்சியில் ட்ரம்ப் பேசியுள்ளார்.

அதிபர் கௌரவப்படுத்தியது தொடர்பாகப் பேசியுள்ள சிறுமி கான், ‘எங்கள் படை இன்று இங்கு அழைக்கப்பட்டதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். நாங்கள், இங்கிருக்கும் மில்லியன் கணக்கான குழந்தைகளில் ஒரு பகுதியாக இருப்பதை அறிவோம். பல குழந்தைகள், தங்கள் சமூகம், நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்குத் தேவையான பல அற்புதமான காரியங்களைச் செய்துவருகிறார்கள். அவர்களையும் இங்கு முன்னிலைப்படுத்துவதை பாக்கியமாகக் கருதுகிறோம்’ எனக் கூறியுள்ளார்.

செவிலியர் எமி - அதிபர் ட்ரம்ப்
செவிலியர் எமி - அதிபர் ட்ரம்ப்
AP

மேலும், இந்த நிகழ்ச்சியில் எமி ஃபோர்ட் என்ற செவிலியரின் செயலையும் வெகுவாகப் பாராட்டினார் அதிபர் ட்ரம்ப். அந்த செவிலியர், வெஸ்ட் வெர்ஜீனியாவிலிருந்து புரூக்ளின் சென்று மருத்துவமனையில் பணியாற்றிவந்துள்ளார். இவரைப் பற்றிப் பேசிய ட்ரம்ப், “ செவிலியர் எமி, கடந்த 42 நாள்களாக புரூக்ளினில் உள்ள கிங்ஸ் கவுண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 12 மணி நேர ஷிஃப்ட்டுகளில் பணியாற்றிவருகிறார். இவர், ஒரு முறை வயதான நோயாளியின் கையைப் பிடித்துக்கொண்டு இரவு முழுவதும் அவரது அறையிலேயே இருந்துள்ளார். கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த நோயாளி தனிமையாக உணரக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்துள்ளார் எமி. அவரது செயல் நிச்சயம் பாராட்டுக்குரியது” என்று ட்ரம்ப் புகழ்ந்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு