Published:Updated:

`மேரி கிறிஸ்துமஸ்..!’- கொள்ளையடித்த பணத்தை வீதிகளில் எறிந்து கொண்டாடிய முதியவர்

காபி ஷாப் சென்று அமர்ந்த அந்த நபர், எதையும் ஆர்டர் செய்யாமல் அமைதியாக இருந்தார். காவல்துறையினர் வந்து கைது செய்வதற்காக அவர் காத்திருந்ததைப் போல இருந்தது.

டேவிட் ஆலிவர்
டேவிட் ஆலிவர் ( twitter )

அமெரிக்காவின் கொலராடோவில் அகாடமி வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கள்கிழமை மதியம் 12:30 மணிக்கு வெள்ளைத் தாடியுடன் வயதான மனிதர் ஒருவர் இந்த வங்கிக்குள் நுழைந்தார். தன்னுடைய சட்டைப் பையிலிருந்த ஆயுதத்தை எடுத்து வங்கியின் அதிகாரிகளை மிரட்டி இன்னும் புழக்கத்துக்கு வராத பணக் கட்டுகளைக் கொள்ளையடித்தார்.

வங்கி
வங்கி

கொலராடோவின் ஸ்பிரிங்ஸில் உள்ள தெரு ஒன்றில் பை நிறைய பணக் கட்டுகளுடன் சென்ற அந்தக் கொள்ளைக்காரர் `மேரி கிறிஸ்துமஸ்’ என்று அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கத்திக்கொண்டு கொள்ளையடித்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை தூக்கி எறிந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

``அருகிலுள்ள காபி ஷாப் ஒன்றில் சென்று உட்கார்ந்தார். எதையும் ஆர்டர் செய்யாமல் அமைதியாக இருந்தார். காவல்துறையினர் வந்து கைது செய்வதற்காக அவர் காத்திருந்ததைப் போல இருந்தது” என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கொலராடோ போலீஸார் தங்களின் ட்விட்டர் பக்கத்தில், `டிசம்பர் 23-ம் தேதி தேஜோன் தெருவில் நடந்த வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து டேவிட் ஆலிவர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 65” என்று பதிவிட்டுள்ளனர்.

ஆலிவர் வீதிகளில் தூக்கியெறிந்த பணத்தை, அங்கிருந்தவர்கள் சேகரித்து வங்கியில் ஒப்படைத்துள்ளனர். அவர் ஆயுதம் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டேவிட் ஆலிவரின் இந்த வித்தியாசமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நெட்டிசன்களிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.