கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலம் முதல் இரண்டு ஆண்டுகளாகத் தங்களின் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க ஊக்குவித்த ஐடி நிறுவனங்கள் இந்த வருட ஏப்ரல் முதல் அலுவலகத்துக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன. இதனை வரவேற்கும் ஒரு பகுதியினர் இருப்பினும் பெரும்பாலும் ஒர்க் பிரம் ஹோம் எனச் சொல்லப்படுகிற வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதை விரும்பும் பணியாளர்கள்தான் அதிகம். அலுவலகத்துக்கு வருவதை வலியுறுத்தும் தளர்வுகளற்ற பாலிசியை நடைமுறைப்படுத்தி வருகிறது ஆப்பிள். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதன் முன்னணி பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆப்பிள் மிஷின் லெர்னிங் பிரிவின் இயக்குனர் ஐயன் குட்பெல்லோ (Ian Goodfellow), ஆப்பிளின் புதிய ஹைப்ரிட் பாலிசியால் ராஜினாமா செய்திருக்கிறார். "மீண்டும் அலுவலகத்துக்கு வரச்சொல்லும் பாலிசியின் காரணமாக நான் கம்பெனியை விட்டு விலகுகிறேன். தளர்வுகள் உடைய பாலிசிதான் என்னுடைய அணிக்கு பொருத்தமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" எனத் தெரிவித்து இருக்கிறார் ஐயன் குட்பெல்லோ.

புதிய ஹைப்ரிட் பாலிசியில் ஏப்ரல் 11 வரை வாரத்திற்கு ஒரு நாள், மே 2 வரை வாரத்திற்கு இரண்டு நாட்கள், மே 23 வரை குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 நாட்கள் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் இந்த அறிவிப்பில் விருப்பமற்று அதன் சிஇஓ டிம் குக்குக்கு கடிதம் எழுதினார்கள், "ஒன்று எங்களின் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வு, சிறந்த வேலைக்காக ஈடுபடுவது அல்லது ஆப்பிளின் பகுதியாக இருப்பது. தளர்வுகளற்ற இந்த பாலிசி எங்களை இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வைக்கிறது. இந்த முடிவை நாங்கள் யாரும் எளிதாக எடுக்கவில்லை, பெரும்பலானவர்கள் எடுக்கக் கூடாது என்றே விரும்புகிறோம்" என அதில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
