ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கான கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்கிவருகிறார்கள். முகம் முதல் கால் வரை மறையும்படி பர்தா அணிய வேண்டும், ஆண்கள் துணையில்லாமல் பயணிக்கக் கூடாது, செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் நிகழ்ச்சி நேரலையில்கூட பர்தா அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தாலிபன் அரசு விதித்திருக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக, பெண்கள் கல்வி தொடரவும் ஆப்கனில் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில், கல்வி நிலையங்களில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் தொடர்பாக ஆலோசனை செய்து, பின்பு பெண்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறி பெண்களுக்கான கல்வி தடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஆப்கானிஸ்தான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீனிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், ``உங்கள் மகள்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுகிறார்களா?" எனக் கேட்டார். அதற்கு அவர், ``நிச்சயமாக அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஹிஜாபைச் சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள். எனவே, ஹிஜாபை சரியாகக் கடைப்பிடிக்கும் எங்கள் மக்களுக்கு நாங்கள் கல்வியை மறுக்கவில்லை என்று அர்த்தம்" என பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், ``அப்படியானால் உங்கள் மகள்கள் நீங்கள் சொல்வதைச் செய்வதால் அவர்கள் கல்வி பெறுகிறார்கள்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஆப்கானிஸ்தான் முழுவதும் பெண் கல்வி தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவரின் மகள்களுக்கு மட்டும் தனியாகப் பள்ளி நடத்தப்படுகிறதா?' எனவும், `ஆப்கானிஸ்தான் பெண்கள் ஹிஜாபைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் 6-ம் வகுப்பைக் கடந்து அவர்களால் படிக்க முடிவதில்லை' எனவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.