Published:Updated:

மலாலாவுக்குத் திருமணம்... கணவர் யார் தெரியுமா?

குடும்பத்தினர், நெருங்கிய உறவுகள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். திருமணம் முடிந்தபிறகு சமூக வலைதளங்கள் மூலமாக இதை அறிவித்தார் மலாலா.


'மிக இளம் வயதில் நோபல் பரிசு வென்றவர்' என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான மலாலாவுக்குத் திருமணம் நடந்திருக்கிறது.
இப்போது 24 வயதாகும் மலாலாவைத் திருமணம் செய்துகொண்டிருப்பவர், அசெர் மாலிக். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாளராக இருக்கிறார். அதற்கு முன்பு அவர் பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கு விளம்பரம் உள்ளிட்டவற்றை ஒப்பந்தம் செய்துதரும் ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்தார். இந்தியாவின் ஐ.பி.எல் போல பாகிஸ்தானில் பிரபலமாக இருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீகில் முல்தான் அணியை நிர்வகித்து வந்தவர். பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் செல்வாக்குள்ள புள்ளியாக அறியப்படுகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இவருக்கும் மலாலாவுக்கும் அறிமுகம் என்றாலும், இந்தத் திருமணம் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து நடத்தியது என்று தெரிகிறது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இஸ்லாமிய முறைப்படி எளிமையாகத் திருமணம் நடைபெற்றது. குடும்பத்தினர், நெருங்கிய உறவுகள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். திருமணம் முடிந்தபிறகு சமூக வலைதளங்கள் மூலமாக இதை அறிவித்தார் மலாலா.

Malala
Malala
Malala - Twitter

நோபல் பரிசு மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட மலாலாவைத் திருமணம் செய்தபிறகு, அசெர் மாலிக் பற்றி அறிந்துகொள்ள உலகம் முழுவதும் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்துவந்தது மலாலா குடும்பம். அந்தப் பகுதியில் மத அடிப்படைவாதிகள் செல்வாக்கு பெற்றபோது, பெண் கல்விக்கு அச்சுறுத்தல் வந்தது. பெண் கல்விக்காகக் குரல் கொடுத்த மலாலாவை 15 வயதில் பள்ளிக்குச் சென்றபோது தாலிபன்கள் தாக்கினர். அவர் சென்ற பள்ளி வேனில் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டனர்.
படுகாயமடைந்த மலாலா, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்தார். அதன்பின் அவர் குடும்பம் இங்கிலாந்தில் தஞ்சமடைந்தது. பர்மிங்காம் நகரை தனது 'இரண்டாவது தாய் வீடு' என்பார் மலாலா. 17 வயதில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் படித்த மலாலா, இப்போதும் ஒரு மனித உரிமைப் போராளியாக இயங்கிவருகிறார். இஸ்லாமியப் பெண்களின் கல்வி உரிமைக்காக பல்வேறு பிரசாரங்கள் செய்துவருகிறார். அதேபோலவே ஆப்கானிஸ்தான் அகதிகள் நலவாழ்வு குறித்தும் பேசி வருகிறார்.

திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மலாலா இதுவரை பேசிவந்தார். ''மனிதர்கள் ஏன் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை. உங்கள் வாழ்க்கையில் ஒருவருக்கு இடமளிக்க முடிவு செய்தால், எதற்காக திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வேண்டும். மனதுக்குப் பிடித்திருந்தால், இருவரும் இணைந்து வாழலாம். இதைச் சொன்னால் என் அம்மா என்னைக் கண்டிக்கிறார். "இப்படியெல்லாம் பேசாதே... திருமணம் என்பது அழகான உறவு. நீயும் திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும்" என்கிறார் அம்மா. என் அம்மா பேச்சைக் கேட்பேனா என்று தெரியவில்லை'' என்று கடந்த ஆண்டு 'வோக்' இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். கடைசியில் மலாலாவின் அம்மா ஜெயித்துவிட்டார். மலாலாவின் திருமண வாழ்க்கைக்கு ப்ரியங்கா சோப்ரா, காத்ரினா கைஃப் தொடங்கி பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு