Published:Updated:

கொரோனா: ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்... என்ன காரணம்?

தடுப்பூசி
தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட தன்னார்வலருக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலகம் முழுவதும் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை பல மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டாலும் அனைத்தும் சோதனை நிலையிலேயே உள்ளன. முன்னதாக ரஷ்ய அரசு ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடித்து வெளியிட்டது. அது அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்து தற்போதுதான் அந்நாட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இருந்தும் அந்தத் தடுப்பு மருந்து இன்னும் உலகநாடுகளால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

இதற்கிடையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைத் தயாரித்து வருகின்றன. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பரிசோதனை நிலையில் உள்ள இந்த மருந்துதான் உலகளவில் சந்தைக்கு வரக்கூடிய முதல் தடுப்பூசியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பல நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

160 பேர், 6 மாதம் கண்காணிப்பு... தமிழகத்தில் எப்படி நடக்கவிருக்கிறது கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை?

இந்நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனையின்போது ஒரு தன்னார்வலருக்கு திடீரென கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் சர்வதேச அளவில் இந்தத் தடுப்பூசி சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. `பெரிய அளவில் பரிசோதனை நடத்தப்படும்போது தற்செயலாக இவ்வாறு விவரிக்க முடியாத உடல்நலக்குறைவு ஏற்படும். இது வழக்கமான ஒன்றுதான். மருந்தின் பாதுகாப்பு தரவுகள் குறித்து எங்களின் குழு ஆய்வு செய்யவுள்ளது. இந்தப் பிரச்னைகளைத் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய வேண்டும்’ என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
Representational image

இந்தியாவிலும் இந்தச் சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. `தன்னார்வலருக்கு உடல்ரீதியான பிரச்னைகள் வெளிப்படும்போது சோதனை இடைநிறுத்தப்பட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது மிகவும் சாதாரணமான நடைமுறைதான்’ என்று இந்திய வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை இந்தியாவிலும் நடத்த அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்தக் கோரிக்கையை எளிமைப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு