Published:Updated:

கொரோனா நெருக்கடியிலும் தொடரும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள்... எப்போது மாறும் இந்த அவலம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் பாலாசாஹேப் நவிகேர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``ஒரு நாட்டில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படும்போது, அதன் வாயிலாகவே அந்நாட்டில், அனைவருக்குமான பாதுகாப்பு என்பது தீர்மானிக்கப்படுகிறது” என்பது அமெரிக்காவின் மூன்றாவது அதிபர் தாமஸ் ஜெபர்சனின் கூற்றாகும். ஆனால், பெரும்பாலான நாடுகளில் பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் சுதந்திரமாக செயல்படுவது இயலாத ஒரு விஷயமாக இருந்து வருகிறது என்பதே யதார்த்த நிலை.

உள்நாட்டுப் போர், தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச சுகாதார நெருக்கடியான கொரோனா வைரஸ் தொற்று எனப் பல இக்கட்டான சூழலில் பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் உயிரையும் பொருட்படுத்தாது தங்களது பணியினை சிரத்தையுடன் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலிலும் பத்திரிகையாளர்கள் மீதான விரோதப் போக்குகள் என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. தற்போதைய நெருக்கடியான நிலையில், பத்திரிகை சுதந்திரம் உலக அளவில் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றியதே இந்தக் கட்டுரை.

Committee to protect Journalists
Committee to protect Journalists

சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரம், பத்திரிகையாளர் பாதுகாப்புக்கென பிரத்யேக சட்டம் எதுவும் இல்லை. அடிப்படை கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தியே பத்திரிகையாளர்கள் பணி செய்கின்றனர். இந்தச் சூழலில், அரசுத் தரப்புக்கும், அதிகாரிகளுக்கும் திருப்தி அளிக்காத வண்ணம் செய்தி வெளியிடப்படுமேயானால், அந்த செய்தி நிறுவனமும், பத்திரிகையாளரும் பல்வேறு வகையில் குறிவைக்கப்படும் சூழலே நிலவுகிறது. அரசும், அதிகாரிகளும் ஒருபுறமிருக்க, தனிமனிதர்களும் செல்வந்தர்களும் செய்யும் முறைகேடுகளை சமூகப் பார்வைக்குக் கொண்டு வர எண்ணி செயல்பட்டால், அவர்களாலும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் சூழல் உலகெங்கும் நிலவி வருவது வழக்கமாகிவிட்டது.

பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்புக் குழு (Committee to protect Journalists) வெளியிட்டுள்ள தரவுகளின் படி, உலகம் முழுவதும் கடந்த 1992-ம் முதல் தற்போது வரை, 1,369 பத்திரிகையாளர்கள் பலி வாங்கும் நோக்கங்களோடு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த, 2018-ம் ஆண்டு மட்டும் அதிகப்படியாக 56 பத்திரிகையாளர்கள் உலகம் முழுவதும் கொல்லப்பட்டுள்ளனர்.

பத்திரிகை சுதந்திரத்துக்கான உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியல்:

உலக நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை, 'Reporters Without Borders' என்ற அமைப்பு, 180 நாடுகளில் பத்திரிகை சுதந்திரம், பன்மைத்துவம், ஊடகங்களின் சுய தணிக்கை, செய்திகளின் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டு தோறும் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், நெதர்லாந்து முறையே முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன. தரவரிசைப் பட்டியலில் முதல் ஆறு இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளே என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மாபெரும் கம்யூனிச தலைவரான மா சேதுங்கின் சீனா, இந்த தரவரிசைப் பட்டியலில் கடைசி நான்கு இடங்களில் முதல் நாடாகவும், 180 நாடுகளில் 177-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலக நெருக்கடியான கொரோனா வைரஸ் காலகட்டத்திலும் கூட சீனாவில் பத்திரிகையாளர்கள் மீதான அரசின் வன்முறை தொடர்ந்துகொண்டே வருகிறது.

எல்லை கடந்த பத்திரிகையாளர்கள் (Reporters without borders)
எல்லை கடந்த பத்திரிகையாளர்கள் (Reporters without borders)

கடந்த இரு தினங்களுக்கு முன், சீன அரசு ஊடகத்தின் முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழல் செய்தியை தனது சொந்த வலைதளப் பக்கத்தில் வெளியிட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அரசாங்கத்தையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் அவமதித்துவிட்டார் என்பதற்காகவும், அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சீன நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள Reporters without Borders என்ற அமைப்பினர், ``பத்திரிகைகளை மிகப் பெரிய அளவில் தணிக்கை செய்யும் நாடாக சீனா இருந்து வருகிறது. தற்போது, ஊழல் குற்றத்தை வெளிக் கொண்டுவந்தார் என்பதற்காக பத்திரிகையாளருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது, உலகில் இதுவரை பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளில் மிகப் பெரிய தண்டனையாகும்” எனத் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் கோவிட்-19  ஏற்படுத்தியிருக்கும் அரசியல் பாதிப்புகள் - ஓர் அலசல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்வாதிகாரியை அதிபராகக் கொண்ட வடகொரியா, இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு தசாப்தத்தைக் கடந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியா, சீனாவை விட மூன்று இடங்கள் முன்னேறி 174-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு உலகப் பத்திரிகைத் துறையை கதிகலங்கச் செய்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் மரணத்துக்கு, குற்றம் சாட்டப்பட்டுள்ள சவுதி அரேபியா 170-வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலக வல்லரசு நாடுகளாக அறியப்படும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அரசின் கெடுபிடிகளால் பத்திரிகைச் சுதந்திரம் என்பது ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. பத்திரிகைச் சுதந்திர தரவரிசைப் பட்டியலில் பிரிட்டன் 35-வது இடத்தையும், அமெரிக்கா 45-வது இடத்தையும் பிடித்துள்ளது. ஏமன், பஹ்ரைன் உள்ளிட்ட பெரும்பாலான வளைகுடா நாடுகள் தரவரிசைப் பட்டியலில் பின்தங்கிய இடத்தையே பிடித்துள்ளன.

கருத்து சுதந்திரம்
கருத்து சுதந்திரம்

இந்தியாவும் பத்திரிகை சுதந்திரமும்:

இந்தியாவைப் பொறுத்தவரையில் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாதகமான பல்வேறு நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. பத்திரிகைச் சுதந்திரத் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தியா தொடர்ந்து பின்தங்கியே வந்துள்ளது. 2019-ல் பட்டியலின் 140-வது இடத்தைப் பிடித்த இந்தியா, இந்த ஆண்டு 142-வது இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் பிரசாரங்கள்; அரசின் கொள்கைகளை விளக்கும் செய்திகளை வெளியிட பத்திரிகையாளர்களும் செய்தி நிறுவனங்களும் நிர்பந்திக்கப்படுவது; ஊடகங்கள் கூற விரும்புவதைக் கூற விடாமல் பத்திரிகைகள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள்; ஊடகவியலாளர்களுக்கு எதிரான காவல்துறையின் வன்முறைகளும் கைது செய்யப்படுதலும் போன்ற செயல்கள் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தில் இருக்கும் தடைகளாக பார்க்கப்படுகின்றன.

கடந்த 1992-ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் மட்டும் 50 பத்திரிகையாளர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் உலகப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் (Committee for Protect Journalists) தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கடந்த மார்ச் 6-ம் தேதியன்று, மீடியா ஒன் செய்தி தொலைக்காட்சி நேரலையில் செய்தி ஒளிபரப்பி கொண்டிருக்கும்போது திடீரென ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது. இந்தத் தடங்கல், முதலில் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டிருக்கலாம் என எண்ணப்பட்டது. ஆனால், மீடியா ஒன் தொலைக்காட்சி கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது காவல்துறையால் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய செய்தியை வெளியிட்டது. அதனால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், 48 மணிநேரம் வரை அந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்குத் தடை விதித்த தகவல் பின்னர்தான் தெரியவந்தது.

பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்

தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் தொலைக்காட்சியின் ஒளிபரப்புத் தடை செய்யப்பட்டதை அறிந்த அந்த நிறுவனத்தின் ஆசிரியர் சுபாஷ், ``இது பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். உண்மைத் தகவல்களை மக்களிடம் சேர்த்துக்கொண்டிருக்கும் ஊடகங்களை ஒருசார்பாகக் கையாள்வது, அரசின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை கேள்வி கேட்க வழிவகுக்கும்” என்றார். கடும் எதிர்ப்புகள் எழவே மத்திய அரசு அந்த முடிவிலிருந்து பின்வாங்குவதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அதற்கு முன்னரே காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு, தற்போது வரை அதை முழுவதுமாக தளர்த்தாமலே இருந்து வருகிறது. ஊடகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் இன்று வரையில் காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்வுகள் முழுவதுமாக நாட்டு மக்களின் பார்வைக்கு வராமலே மறைக்கப்பட்டுவிட்டன.

தற்போது நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பத்திரிகையாளர்களை பல சவால்களுக்கு மத்தியில் பணிபுரிய வைத்திருக்கிறது. இருப்பினும், ஒரு சில இடங்களில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற வண்ணமே உள்ளன. கடந்த மாதம் 11 -ம் தேதி ஊரடங்கு குறித்த தகவலைப் பெற ஜம்மு - காஷ்மீரில் களத்துக்குச் சென்ற பத்திரிகையாளர் முஸ்தக் கனாயை, கொரோனா தொற்றைப் பரப்புவதாகக் கூறி போலீஸார் கைது செய்துள்ளனர்.

`அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் கொலை' - பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கு தனிச் சட்டம் அவசியமா?

அதே நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் பாலாசாஹேப் நவிகேர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர்கள் உட்பட 12 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியிருக்கிறார்கள். ஆனால், தாக்கியவர்களின் மீது காவல் துறையினரால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மஸ்ரத் ஜாரா மீது சர்ச்சைக்குரிய உ.பா சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் சில பத்திரிகையாளர்கள் மீதும் ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் வழக்கு பதிவு செய்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு - WHO
உலக சுகாதார அமைப்பு - WHO

கொரோனா காலத்தில் பத்திரிகைகள் குறித்து உலக சுகாதார மையம்:

இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், பத்திரிகையாளர்கள் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு உதவுவதில் பெரும் பங்கு வகிப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் அந்தோனியோ கத்தூரஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், ``கொரோனா தொற்று பரவியுள்ள சூழலில், தொற்றுக்கு இணையாக அது குறித்த போலிச் செய்திகளும் உலகெங்கும் பரவி வருகின்றன. இந்தச் சூழலில் உலவி வரும் போலிச் செய்திகளுக்கு மத்தியில் ஊடகங்கள் சரியான தகவலை அறிவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்து செய்திகளாக வழங்கி போலிச் செய்திகளுக்கு எதிராகப் போராடி வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஒரு நாட்டில்தான் ஜனநாயகம் தழைக்க முடியும். ஜனநாயகம் கேள்விக்குள்ளாகக்கூடிய சூழல்களில் அதைக் காக்கும் களப்பணியாளர்களும் பத்திரிகையாளர்களே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு