கொரோனா: `100 ஆண்டுகளில் முதல்முறை; 6 வார லாக்டௌன்’ - 2-ம் அலையின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அங்கு 100 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாகாணங்களுக்கு இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது.
சீனாவில் உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் பரவியதைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் மிகவும் வேகமாகப் பரவியது. அங்கு பிறப்பிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மே மாத இறுதியில் கொரோனா பரவல் 75% கட்டுக்குள் வந்தது. இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதன் விளைவாகக் கடந்த சில நாள்களாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. மார்ச் மாதம் முதல் எப்போதும் இல்லாதவகையில் கடந்த திங்கள் கிழமை ஒரே நாளில் 191 பாசிடிவ் கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என அச்சம் கொண்ட அந்நாட்டு அரசு, அடுத்த 6 வாரங்களுக்கு மெல்போர்னில் கடுமையான ஊரடங்கு பிறபித்துள்ளது.
இன்று நள்ளிரவு தொடங்கும் இந்த ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக மக்கள் வீட்டை வெளியேறவும் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் அதிகம் மக்கள்தொகை கொண்ட நகரம். எனவே, இங்கு வைரஸ் பரவல் விரைந்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும், கடந்த 100 ஆண்டுகளில் முதன்முறையாக விக்டோரியா மற்றும் நியூ சௌத்வேல்ஸ் ஆகிய இரு மாகாணங்களின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. முன்னதாக 1919-ம் ஆண்டும் ஆஸ்திரேலியாவில் ஸ்பானிஸ் ஃபுளூ பரவியபோது இந்த மாகாண எல்லைகள் மூடப்பட்டுள்ளன அதற்குப் பிறகு தற்போது மூடப்பட்டுள்ளன. இதுவரை ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,755 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆகவும் உள்ளது.