Published:Updated:

மூன்று டார்கெட்.. இரண்டு முறை மிஸ்ஸிங்... - இஸ்ரேல் கொன்ற அபு அல் அடா யார்?

நேற்று முன்தினம் நடந்த கலவரங்களுக்கு முழுமுதற்காரணாமாக பார்க்கப்படுபவர் பஹா அபு அல்-அடா. இவரை கொல்லவே இஸ்ரேல் இரவோடு இரவாக தனக்கு சேதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்திமுடித்துள்ளது.

நூற்றாண்டு பகையை நெருப்பாக சுமந்துகொண்டு காஸா அருகே உள்ள ஷெஜயாவுக்கு பறந்தன இஸ்ரேல் போர் விமானங்கள். மொத்தம் மூன்று டார்கெட்டுகள் கொடுக்கப்படுகின்றன. சில நிமிட இடைவெளியில் வான்வழியாக குண்டுமழை பொழிந்து கொடுக்கப்பட்ட டார்கெட்டுகளை காலிசெய்கின்றன இஸ்ரேல் ராணுவம். இவை அனைத்தும் நடந்தது ஆரவாரமற்ற இரவில். விடிந்ததும் ஒட்டுமொத்த போராளி குழுக்களும் காஸாவின் பிரதான மருத்துவமனையை நோக்கி படையெடுக்கின்றன. அப்போதுதான் தெரிகிறது இஸ்ரேல் ராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட டார்கெட் என்னவென்று.

gaza attack
gaza attack
AP

ஆம்... காஸாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் எனப்படும் பி.ஐ.ஜெ-வின் ராணுவப் பிரிவான அல்-குட்ஸ் படைப்பிரிவின் தலைவர் பஹா அபு அல் அடாதான் இஸ்ரேலின் முதல் டார்கெட். இரவில் வான்வழியாக குண்டுமழை பொழிந்து கொன்றதும் அவரைத்தான். இந்தச் செய்தி பரவ மொத்த காஸா நகரமும் கொந்தளிக்கிறது. காஸா மட்டுமல்ல இஸ்ரேலுக்கும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. காஸா போராளிக் குழுக்கள் மொத்தமாக ஒன்றுசேர்ந்து இஸ்ரேல் மீது பழிக்குப் பழி தாக்குதல் நடத்துகிறது. கண்மூடி திறப்பதற்குள் கணக்கு வழக்கு இல்லாமல் ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

` இஸ்ரேல் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்!' -மோடி அரசை முன்வைத்து நடக்கும் ட்விட்டர் அரசியல்

ஒற்றைத் தினத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் என இரண்டு நாடுகளும் போர்க்களமாக மாறின. இரு தேசங்களிலும் அவ்வளவு உயிர்ச் சேதங்கள். இதற்கு முன் பல போர்களை இரு நாடுகளும் கண்டிருந்தாலும் நேற்று முன்தினம் நடந்தது மீண்டும் ஒரு கறுப்பு பக்கமாக மாறத் தவறவில்லை. `பால்ஃபர் தீர்மானம்', நூற்றாண்டு பகை, எல்லைப் பிரச்னை, அடிக்கடி மூர்க்கமாக நடைபெறும் போர் என அனைத்தையும் தாண்டி நேற்று முன்தினம் நடந்த கலவரங்களுக்கு முழுமுதற்காரணமாக பார்க்கப்படுபவர் பஹா அபு அல்-அடா. இவரைக் கொல்லவே இரவோடு இரவாக தனக்கு சேதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தி முடித்துள்ளது இஸ்ரேல்.

பஹா அபு அல்-அடா
பஹா அபு அல்-அடா
Twitter

யார் இந்த பஹா அபு அல்-அடா?

காஸாவில் செயல்படும் போராளிக் குழுக்களில் இரண்டாவது பெரிய குழு என்றால் அது பி.ஐ.ஜே. காஸாவை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் குழுவின் இணை இயக்கமாக அதேநேரம் தன்னிச்சையாக செயல்படக் கூடிய அமைப்பு பி.ஐ.ஜே. அரசியல் பிரிவு, ராணுவப் பிரிவு என செயல்பட்டுவந்த பி.ஐ.ஜே அமைப்பும் மற்ற போராளிக் குழுக்களைப்போல இஸ்ரேலால் பறிக்கப்பட்ட தங்கள் முன்னோர்களின் உரிமைகளை மீட்க, அதாவது, இஸ்ரேலின் எல்லையில் உள்ள நிலங்களை மீட்கவே போராடி வருகிறது. இந்த அமைப்பின் ராணுவப் பிரிவில் உரிமை மீட்பு வேட்கையுடன் 1990-ல் தன்னை இணைத்துக்கொண்டவர்தான் இந்த பஹா அபு அல்-அடா.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இணைந்த சில ஆண்டுகளிலேயே அல்-குட்ஸ் படைப்பிரிவுக்கு தலைமைப் பொறுப்பேற்றார் அல்-அடா. பி.ஐ.ஜே ஒரு சன்னி ஜிஹாதிஸ்ட் இயக்கம் என்றாலும், எண்ணெய் வளம்கொண்ட இரானின் ஆதரவோடு செயல்பட்டுவந்தது. அதேநேரம் ஹமாஸ் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காரணத்தினால் தங்களுக்கென ஆயுதங்கள் தயாரிப்பது, நீண்ட தூர ஏவுகணைகளை மேற்கொள்ளவதிலும் பயிற்சிபெற்று வெற்றிகரமாக அதைச் செய்தும் வந்தது இந்த அமைப்பு. அதுவும் அல்-அடா தலைவராக பொறுப்பேற்ற பிறகே இந்த வேலைகள் ஜோராக நடந்ததாக குறிப்பிடுகின்றன இஸ்ரேல் ஊடகங்கள்.

அபு அல் அடா கொல்லப்பட்ட வீடு
அபு அல் அடா கொல்லப்பட்ட வீடு
Twitter

அவரின் தலைமையின்கீழ்தான் அல்-குட்ஸ் படைப்பிரிவு இஸ்ரேலுக்கு எதிராக அதிகளவு தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன. அதுவும் குறிப்பாக ஏவுகணைத் தாக்குதல் இவரின் உத்தரவின் பேரிலேயே நடந்துவந்துள்ளன எனக் குற்றம் சாட்டுகின்றன. அதுவும் கடந்த ஒரு வருடத்தில் காஸா போராளிக் குழுக்கள் இஸ்ரேல்மீது நடத்திய தாக்குதல்களில் அதிகளவு அல்-குட்ஸ் பிரிவே நடத்தியுள்ளது எனக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அல்-அடா இறப்புக்குப் பின் பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவோ, ``அல்-அடா ஒரு டிக்கிங் குண்டு. அவர் ஒரு பரம-பயங்கரவாதி.

Vikatan

காஸா பகுதியிலிருந்து பயங்கரவாதத்தைத் தூண்டியவர். எங்களை நோக்கி நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியுள்ளார். அதன் துன்பங்களை நாங்கள் கண்டிருக்கிறோம். ஹமாஸுடன் அமைதியாக இருப்பதற்கான முயற்சிகளை நாசமாக்குவதற்கு எல்லா வகையிலும் செயல்பட்டவர். அவர் பல பயங்கரவாத தாக்குதல்களைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். கடந்த ஆண்டில் இஸ்ரேலில் நடந்த பெரும்பான்மையான தாக்குதல்களுக்கு அல்-அடா மட்டுமே பொறுப்பு" என்று வார்த்தைகளை கனலாக கக்கியுள்ளார்.

நேதன்யாகு
நேதன்யாகு
Twitter

இதே கருத்தை முன்வைத்து பேசிய இஸ்ரேல் ராணுவப் பிரிவுத் தலைவரும், ``கடந்த சில மாதங்களாக ஐடிஎஃப் (இஸ்ரேல் ராணுவப் பிரிவு) பல முறை எச்சரித்தது. பல்வேறு வழிகளில், அவர் தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனக் கூறியும் கேட்கவில்லை. வேறு வழியில்லை என்பதால் இந்த நடவடிக்கையை தலைமை எடுக்க வேண்டியதாயிற்று" எனக் கூறியுள்ளார். காஸாவின் மற்ற போராளிக் குழுத் தலைவர்களைப்போல அல்-அடா வெளிப்படையாக சுற்றித் திரிபவர் அல்ல. எப்போதும் போராளிகளுக்கு நிழலாகவே இருந்து பணிகளைச் செய்துமுடிப்பார்.

"இஸ்ரேல், பாலஸ்தீனம், சோவியத் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட சோதனை இப்போது இந்தியாவுக்கு!"- வில்லியம் தால்ரிம்பில்

இதுவரை அவர் பொதுவெளியில் தோன்றியது அரிது என்கின்றனர். இதனால் போராளிக் குழுக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு உயர்ந்துகொண்டே இருந்தது என்றும், பி.ஐ.ஜே-வின் அசைக்க முடியாத தலைவராக உருமாறிக்கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. எப்போதும் படைகள் சூழ இருப்பார் என்பதால் இஸ்ரேல் அவரைப் பிடிப்பதில் பல சிக்கல்களை சந்தித்துள்ளது. இதற்குமுன்பு 2012 மற்றும் 2014 என இரு முறை இவரைக் கொலைசெய்ய இஸ்ரேல் வெளிப்படையாக முயன்றும் தப்பித்துள்ளார். இதன்பின் சுதாரித்துக்கொண்டவர் இஸ்ரேல் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்துக்கொண்டே இருந்துள்ளார். ஆனால், நேற்றுமுன்தினம் இஸ்ரேல் நடத்திய அதிரடி சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் சிக்கி உயிரை இழந்துள்ளார்.

அபு அல் அடா சடலம்
அபு அல் அடா சடலம்
AP

இந்தமுறை அவர் சிக்கியதற்கு இஸ்ரேல் உளவுத்துறையான Shin Bet அளித்த தகவல்தான் காரணம் என்கிறார்கள். இந்த வருடம் முழுவதும் இஸ்ரேலில் பேசுபொருளாக இருந்ததை அடுத்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அல்-அடா வீட்டுக்கு வருவதைத் தவிர்த்துள்ளார். தாக்குதல் நடந்த இரவான நேற்றுமுன்தினம்தான் வீட்டுக்கு வந்துள்ளார். இதைச் சரியாக மோப்பம்பிடித்து ராணுவத்துக்கு Shin Bet தகவல் அளிக்க இரவோடு இரவாக அனைத்து அனுமதியையும் பெற்று அவரைக் கொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம். அல் ஜஸீராவுக்கு பேசியுள்ள அடாவின் தந்தையும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். ``என் மகன்மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதால் சில வாரங்களாக இங்கு வருவதில்லை. தாக்குதல் நடந்த இரவுதான் வீட்டுக்கு வந்தான்" எனக் கூறியுள்ளார்.

Vikatan

அல்-அடாவை கொன்றதோடு மட்டும் இஸ்ரேல் ராணுவம் திருப்திபட்டுக்கொள்ளவில்லை. அவரை முதல் டார்கெட்டாக நினைத்துக் கொன்ற பிறகு அவர்சார்ந்த பி.ஐ.ஜே மிகப்பெரிய தன்னிச்சை அமைப்பாக செயல்படுவதற்கு காரணமாக இருந்த ஆயுதக் கிடங்கு, ஆயுத தொழிற்சாலைகளை அழிப்பதையும் தங்களது டார்கெட்களாக கொண்டு அதை வெற்றிகரமாக இரவோடு இரவாக முடிக்கவும் செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம் என வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அல்-அடா கொல்லப்பட்டுவிட்டால் பிரச்னை முடிந்துவிட்டது என இஸ்ரேல் ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளது.

அபு அல் அடா
அபு அல் அடா
Twitter

ஆனால், அவரின் இறப்புக்குப் பிறகே பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. அல்-அடாவுடன், அவரின் மனைவி உட்பட போராளிக் குழுக்களைச் சேர்ந்த மேலும் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்களை சுமந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிராக ``இந்தக் குற்றத்துக்குப் பதிலடி வரம்புகள் அற்றதாக இருக்கும்" என பழிவாங்கும் வசனங்களை கத்திக்கொண்டே ஊர்வலம் நடத்தியுள்ளனர் ஒட்டுமொத்த போராளிக் குழுக்களும். பின்னர் 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல்மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இஸ்ரேலைச் சேர்ந்த 7-க்கும் மேற்பட்டோர் உயிர்களை இழந்துள்ளனர். தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை உலகநாடுகளில் பேசுபொருளாக மாறியிருக்கிறது இஸ்ரேல் - பாலஸ்தீனம்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு