Published:Updated:

`வெவ்வேறு நிறுவனங்கள்; பல்வேறு காரணங்கள்!’- பெண்கள் கண்ணாடி அணிவதற்குத் தடை போடும் ஜப்பான்

பல்வேறு இடங்களில் வேலை பார்க்கும் பெண்கள் கண்ணாடி அணியக் கூடாது, கான்டாக்ட் லென்ஸை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள்
பெண்கள்

பெண்களின் ஆடை அணிகலன் விஷயத்தில் ஜப்பானிய நிறுவனங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளை எதிர்த்து, சமீபகாலமாக அந்நாட்டுப் பெண்கள் பொதுத்தளங்களில் பேசி, தங்கள் உரிமைகளை நிலைநாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் கண்ணாடி அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஜப்பானில் இயங்கும் செய்தி நிறுவனமான நிப்பான் டிவி செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அச்செய்தியில், பல்வேறு இடங்களில் வேலை பார்க்கும் பெண்கள் கண்ணாடி அணியக் கூடாது, கான்டாக்ட் லென்ஸைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளதாக தெரிவித்ததாகவும் அதற்குப் பல்வேறு காரணங்களை நிறுவனங்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண் கண்ணாடி
கண் கண்ணாடி

விமான சேவையில் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக அத்தகைய கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் விமான நிறுவனங்கள் கூறியுள்ளன. அழகு சாதனப் பொருள்கள் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், கண்ணாடி அணிந்தால் அவர்தம் ஒப்பனை சரியாக வெளிப்படாது என்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பெண்கள் கண்ணாடி அணிந்திருந்தால் காட்டமான பார்வை உள்ளதுபோல் தோற்றத்தை உருவாக்கும் என்பதாலும் தடைவிதிக்கப்பட்டதாக அந்தந்தத் துறையின் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், ஜப்பானின் பாரம்பர்ய உணவகங்களில் பணியாற்றும் பெண்கள் கண்ணாடி அணிந்தால் அவர்களுடைய பாரம்பர்ய உடைக்கு ஒத்துவராது என்ற காரணத்தைக் கூறி தடை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

கடந்த வருடம் தென்கொரியாவில், ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் தன்னுடைய நிகழ்ச்சியில் லென்ஸைத் தவிர்த்து கண்ணாடி அணிந்து செய்தி வாசித்தது விவாதப் பொருளாக மாறியது. இதையடுத்து அந்நாட்டு விமான சேவை ஒன்றில் கண்ணாடிக்கு எதிரான விதிகள் தளர்த்தப்பட்டன.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானிய பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் `ஹை ஹீல்ஸ்' அணிய வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதை #kutoo என்ற ஹேஷ்டேக்கில் டிரெண்ட் செய்து பெரிய அளவில் எடுத்துச் சென்று மாற்றம் கொண்டு வந்தனர்.

ஜப்பான்
ஜப்பான்

` இத்தகைய விதிகளை நிறுவனங்கள் விதிப்பதால் வேலை செய்யும் பெண்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் அவர்களின் வெளித்தோற்றத்தையே முதன்மையாக மதிப்பிடுவதாகவும் தோன்றுகிறது' என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் பெண்கள், தங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஒருபுறம் அவர்கள் போராடுவது மற்றவருக்கு ஊக்கம் அளித்தாலும், `இத்தகைய விதிகள் ஏன் உருவாக்கப்படுகின்றன என ஆராய்வதும் அவசியம்' எனக் கருத்து தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.