கிருஷ்ணா மண்டல் என்ற 22 வயது வங்கதேசப் பெண், முகநூல் மூலம் அபிக் மண்டல் எனும் இந்திய இளைஞனைக் காதலித்துவந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அபிக் மண்டலை சந்திக்க எண்ணிய கிருஷ்ணா மண்டல், வங்கதேசத்திலிருந்து, இந்தியாவுக்கு வர முடிவெடுத்திருக்கிறார். ஆனால், தன்னிடம் பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால், சுந்தரவனக் காட்டிலுள்ள ஆற்றில் சுமார் ஒரு மணிநேரம் நீந்தியே சட்டவிரோதமாக இந்தியா வந்தடைந்தார்.

அதைத் தொடர்ந்து, அபிக் மண்டலை நேரில் சந்தித்த, கிருஷ்ணா மண்டல் மூன்று நாள்களுக்கு முன் கொல்கத்தாவிலுள்ள காளிகாட் கோயிலில் அபிக்கைத் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், சட்டவிரோதமாக இந்தியவுக்குள் நுழைந்த காரணத்தால் கிருஷ்ணா, போலீஸாரால் திங்கள்கிழமையன்று கைதுசெய்யப்பட்டார். மேலும் கிருஷ்ணா மண்டல், வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக இந்த மாதத் தொடக்கத்தில், எமன் ஹொசைன் என்பவர் தனக்குப் பிடித்த சாக்லேட்டை வாங்க, ஆற்றின் வழி நீந்தியே இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
