Published:Updated:

`எளிதான வீரியமிக்க போராட்டம்’- பிரதமருக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த பெல்ஜியம் மருத்துவர்கள்

பெல்ஜியம் மருத்துவர்கள்
பெல்ஜியம் மருத்துவர்கள்

பெல்ஜியத்தில் அந்நாட்டு பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவப் பணியாளர்கள் ஒன்றிணைந்து நூதனமுறையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,280 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,052 ஆகவும் உள்ளன. அங்கு பிரதமராக இருக்கும் சோபி வில்மெஸ் சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்மூலம் தகுதியில்லாத பல நர்ஸிங் பணியாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் அந்நாட்டு மருத்துவர்கள் முதல் நர்ஸ்கள் வரை பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா
கொரோனா

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ரஸ்ஸல்ஸில் உள்ள செயின்ட் பியர் மருத்துவமனையில் சோதனை செய்வதற்காக வந்துள்ளார் பிரதமர் சோபி. அதை அறிந்த மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் சாலையின் இருபுறமும் தனிமனித இடைவெளியுடன் நின்றுள்ளனர். பிரதமர் சோபி, தங்களின் அருகில் வரும் நேரத்தில் புறமுதுகுக் காட்டி அவருக்கு நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

காலாவதியான பொருளுடன் ஏன் வேலை செய்ய வேண்டும்? - நேருக்கு நேர் அதிபரை வறுத்தெடுத்த பிரான்ஸ் செவிலியர்

அங்கு இருந்த 50-க்கும் மேற்பட்டவர்களில் ஒருவர்கூட ஆர்ப்பாட்டமோ, கூச்சலோ, கோஷமோ எழுப்பவில்லை. இவை அனைத்துக்கும் மாறாக முற்றிலும் மௌனத்துடன் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. `மிகவும் எளிதான ஆனால் வீரியமிக்க போராட்டம்’ ‘அமைதியான போராட்டத்துக்குச் சக்தி அதிகம். மருத்துவப் பணியாளர்களின் செயலுக்கு வாழ்த்துகள்’ என்பன போன்ற பல கருத்துகள் மருத்துவர்களுக்கு ஆதரவாகப் பதிவிடப்பட்டு வருகின்றன.

நர்ஸிங் பணியாளர்களுக்கு வேலை வழங்கியதையும்தாண்டி, இந்த ஆண்டு மருத்துவத்துறைக்குக் குறைந்த பட்ஜெட் ஒதுக்கி மருத்துவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனாவால் மருத்துவர்கள் கடுமையான சூழலைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் குறைந்த ஊதியம், போதிய பாதுகாப்பின்மை, பணியாளர்கள் நியமனம் ஆகிய அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துதான் மருத்துவர்கள் இந்த நூதன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு