Published:Updated:

சாமான்யர்களின் ஆதரவு... பெர்னி சாண்டர்ஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆவாரா?

அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்காவில் எப்போதும் முதலாளித்துவ சிந்தனை கொண்டவர்களின் கைதான் ஓங்கி இருந்துள்ளது. முதன்முறையாக சோசலிச சிந்தனை கொண்டவர் அமெரிக்க அதிபராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக மீண்டும் ட்ரம்ப் போட்டியிடுகிறார். கடந்தமுறை நடைபெற்ற தேர்தலில், அந்நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ட்ரம்ப் குழுமத்தின் தலைவரான டொனால்ட் ட்ரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த முறையும் அவரே குடியரசு கட்சியின் வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தொழிலாளர் நலன்களைக் காக்கும் குரல் ஒன்று ஒலித்து வருவது சற்று ஆறுதலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP / Alex Brandon

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வெர்மவுண்ட் மாகாணத்தைச் சேர்ந்த செனட்டர் பெர்னி சாண்டர்ஸ். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான இவர், கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்க அரசியலில் இருக்கிறார். மிக நேர்மையான அணுகுமுறை கொண்டவர். வியட்நாம் முதல் இராக் வரை அமெரிக்காவால் நடத்தப்பட்ட அத்தனை அத்துமீறல்களையும் தொடர்ந்து எதிர்த்து வந்தவர். அனைவருக்கும் இலவச மருத்துவ உதவி; குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு $15 டாலர்களாக உயர்த்துவது; கட்டணமில்லாத கல்லூரிகளை உருவாக்குவது... என அடிப்படை பிரச்னைகளை மையமாகக் கொண்ட இவரின் வாக்குறுதிகள் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது.

``அமெரிக்காவுக்கான அரசியல் புரட்சியைத் தொடங்குவோம்” மற்றும் ``நான் அல்ல, நாம்” ஆகியவை இவரின் கொள்கை முழக்கங்கள், நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், ஆப்பிரிக்க, லத்தீன், இந்திய அமெரிக்க குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த தலைவராகவும் இவர் பார்க்கப்படுகிறார். இதனால், அவரின் வாக்கு வங்கியும் கணிசமாக உயர்ந்துள்ளது. நான்கு மாகாணங்களில் நடந்து முடிந்துள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கான தேர்தல் முடிவுகள் இதை உணர்த்துகின்றன. பெர்னி சாண்டர்ஸுக்கு எதிராகக் களமிறங்கிய பீட் புடிஜீஜ், அமிக்ளோபுசார் ஆகியோர் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். இவர்கள், முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பைடனுக்கு ஆதரவளித்துள்ளனர். நியூயார்க் நகர முன்னாள் மேயரும் தொழிலதிபருமான மைக் ப்ளூம்பெர்க்கும் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளருக்கு போட்டியிடுவதால் தற்போது மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

ஜோ பைடன்
ஜோ பைடன்

ஒருபுறம் பெர்னி சாண்டர்ஸ் தன்னை சோசலிசவாதி என்று அடையாளப்படுத்திக்கொண்டிருக்க, மற்ற இருவரும் தங்களை அமெரிக்க சிந்தனைகொண்ட நடுநிலைவாதிகளாகக் காட்டிக் கொள்கின்றனர். பெர்னியின் இடதுசாரிக் கொள்கை குறித்து சிலர் அச்சம் கொண்டிருந்தாலும் அவரின் 30 ஆண்டு கால நேர்மையான அரசியல் வாழ்க்கையும் செயல்களும் அவருக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது. ஜோ பைடனின் கட்சித்தாவல் விஷயங்கள் அவருக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றன.

அதேபோல மற்றொருவரான, மைக் ப்ளூம்பெர்க்கின் மேல் பாலியல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் மூவரில் பெர்னிக்கு அடித்தட்டு மக்களிடத்தில் இருந்து அதிகளவில் நன்கொடை கிடைத்து வருகிறது. மற்ற இருவருக்கு பெருநிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் நிதி கிடைத்துள்ளது. மைக் ப்ளும்பெர்க் தனது விளம்பரத்துக்காக மட்டும் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவளித்துள்ளார்.

சீனாவில் குறைகிறது, உலக நாடுகளில் பரவுகிறது... கொரோனாவின் உண்மை நிலைதான் என்ன?! #Corona360

நடந்து முடிந்த நான்கு உட்கட்சித் தேர்தல்களின் முடிவில் பெர்னியே முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாமிடத்தில் ஜோ பைடன் உள்ளார். மார்ச் முதல் செவ்வாய் அன்று நடைபெற்ற `சூப்பர் ட்யூஸ்டே' தேர்தலின் முடிவில் குறைந்த பிரதிநிதிகள் கொண்ட அலபாமா, அர்க்கானாஸ் மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றி பெற, 425 பிரதிநிதிகளைக் கொண்ட கலிபோர்னியாவில் பெர்னி சான்டர்ஸ் வெற்றியைத் தட்டிச் சென்றார். கொலோராடாவிலும் பெர்னியே வெற்றி பெற்றுள்ளளார். இதனால், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பெர்னி தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது ஜூன் 6-ம் தேதி நடைபெறும், தெற்கு டகோட்டா தேர்தலுக்குப் பின்னரே தெரியவரும்.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

அமெரிக்காவில் எப்போதும் முதலாளித்துவ சிந்தனை கொண்டவர்களின் கைதான் ஓங்கி இருந்துள்ளது. முதன்முறையாக சோசலிச சிந்தனை கொண்டவர் அமெரிக்க அதிபராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. புதிய அமெரிக்க ஜனாதிபதியாக ஒரு வேளை பெர்னி தேர்வு செய்யப்பட்டால் , அமெரிக்காவில் சோசலிசம் வளர்ச்சியடைய வாய்ப்பு உருவாகும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு