Published:Updated:

இறுதிவரை இளவரசர்!

இறுதிவரை இளவரசர்!
பிரீமியம் ஸ்டோரி
இறுதிவரை இளவரசர்!

- ரமேஷ் பாலசுப்ரமணியன்

இறுதிவரை இளவரசர்!

- ரமேஷ் பாலசுப்ரமணியன்

Published:Updated:
இறுதிவரை இளவரசர்!
பிரீமியம் ஸ்டோரி
இறுதிவரை இளவரசர்!

பிரிட்டிஷ் மகாராணிக்குக் கணவராக இருந்தும் அவரை ‘மன்னர்’ என்று அழைக்க சட்டம் இடம் தரவில்லை. ‘எடின்பரோ கோமகன்’ என்பது அவருடைய இன்னொரு பட்டம். இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப், சென்ற வாரம் லண்டன் அருகேயுள்ள வின்ட்சர் கோட்டையில் காலமானார். அவருக்கு வயது 99. அவர்களது திருமண வாழ்க்கைக்கு வயது 73. மிக நீண்ட காலம் காதல் உணர்வு மங்காமல் இணைந்து வாழ்ந்த பிரிட்டிஷ் அரச குடும்பத் தம்பதி அவர்கள்தான்!

கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 30 பேர் மட்டுமே இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளமுடியும் என்ற நிலை. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்கூடக் கலந்து கொள்ளாத ஒரு சாதாரண குடும்ப நிகழ்வாக இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.

இறுதிவரை இளவரசர்!

பல நிகழ்ச்சிகளை (சில நெடுந்தொடர்கள் உட்பட) ரத்து செய்து அரச குடும்பம் பற்றியும் இறந்த இளவரசர் பிலிப் பற்றியும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியதால் முக்கியத் தொலைக்காட்சி நிறுவனமான பி.பி.சி-க்குப் புகார்கள் குவிந்துள்ளன. அரச குடும்ப ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என இருபிரிவாய் பெரியதொரு ட்விட்டர் யுத்தமும் நடந்தது.

எலிசபெத் பிரிட்டிஷ் மகாராணி ஆனதே தனிக்கதை. இங்கிலாந்து மன்னரான எட்வர்ட், விவாகரத்தான அமெரிக்கப் பெண் வாலிஸ் சிம்ப்சனைக் காதலித்தார். அவரைத் திருமணம் செய்வதற்காகத் தன் அரசர் பதவியைத் துறந்தார். மன்னர் எட்வர்ட் பதவியைத் துறந்ததால், அவரின் தம்பி ஜார்ஜ் பிரிட்டிஷ் அரசரானார். ஜார்ஜ் காலமானவுடன் எலிசபெத் 1953-ல் மகாராணியானார். அப்போது அவரது வயது 27.

மன்னர் ஜார்ஜின் இறுதிச்சடங்கிற்கு வாலிஸ் சிம்ப்சன் வரவில்லை. முன்னாள் மன்னரான எட்வர்ட் மட்டுமே வந்தார். இன்றைக்கு சில முரண்பாடுகள் காரணமாக அமெரிக்காவில் வசிக்கும் இளவரசர் பிலிப்பின் பேரனும் டயானாவின் மகனுமான ஹாரி மட்டுமே வரவிருக்கிறார். அவரின் மனைவியும் அரச குடும்பத்தின் இன்னொரு அமெரிக்க மருமகளுமான மேகன் வரப்போவதில்லை. ‘மேகன் கர்ப்பமாக இருக்கிறார். தவிர, மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் நீண்ட பயணம் மேற்கொள்ளமுடியாது’ என்று காரணம் சொல்லப்பட்டாலும், சரித்திரம் திரும்புகிறது என்றே சொல்லவேண்டும்.

இறுதிவரை இளவரசர்!

கிரேக்க நாட்டின் அரச குடும்பத்தில் பிறந்தவர் இளவரசர் பிலிப் என்றாலும், கிரீஸ் நாட்டிலிருந்து அவரது குடும்பம் வெளியேற்றப்பட்டதால், நாடும் அதிகாரமும் இல்லாத இளவரசராக தன் பாட்டி வீடான இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு வர நேரிட்டது. விடுதியில் தங்கிப் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் இங்கிலாந்துக் கடற்படை அகாடமியில் சேர்ந்தார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த மௌன்ட்பேட்டன், இளவரசர் பிலிப்பின் மாமா. அவர் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வின்போது அன்றைய இளவரசி எலிசபெத்தை பிலிப் சந்திக்க நேர்ந்தது. 13 வயதுச் சிறுமியாக இருந்த எலிசபெத், பிலிப்மீது காதல் வயப்பட்டார். பிலிப்பின் புகைப்படம் ஒன்றைத் தன் கட்டிலுக்கு அருகே வைத்துக்கொண்டு எப்போதும் அதைப் பார்த்தபடி இருந்தார். 18 வயதில் தன் காதலை அவர் சொன்னபோது, அரச குடும்பத்துக்கு அதிர்ச்சி. முரட்டுத்தனம் நிரம்பிய இளைஞராகக் கருதப்பட்ட பிலிப்பை மருமகனாக ஏற்பதற்கு மன்னர் ஜார்ஜுக்குத் தயக்கம். எலிசபெத் உறுதியாக இருந்ததால், 1947-ல் திருமணம் நடந்தது. அப்போது எலிசபெத்துக்கு வயது 21.

திருமணம் முடிந்ததும், மால்டா நாட்டில் பிரிட்டிஷ் கடற்படைப் பணியைச் செய்வதற்குக் கிளம்பினார் பிலிப். ஒரு சாதாரண குடும்பத் தலைவியாக அவருடன் சென்றார் எலிசபெத். ஆறே ஆண்டுகளில் மன்னர் ஜார்ஜ் மரணமடைய, எலிசபெத் மகாராணி ஆனார்.

பல எதிர்ப்புகளுக்கு இடையில் அவரின் முடிசூட்டு விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதில் இளவரசர் பிலிப்புக்கு பெரும்பங்கு உண்டு. பிரதமர் சர்ச்சிலுக்கும் அதில் விருப்பமில்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் கனடா உட்பட பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்களால் அந்த விழா பார்த்து ரசிக்கப்பட்டது. பின்னர், 1960களில் இளவரசர் பிலிப் எடுத்த முயற்சியின் காரணமாக ஒரு தொலைக்காட்சிக் குறும்படம் தயாரிக்கப்பட்டது. அரண்மனைவாசிகளான அரச குடும்பத்தினரும் சாதாரண மக்கள் போல் வாழ்கின்றனர் என்பதைச் சொல்ல வந்தது இந்தப் படம். ஆனால், அது உருவாக்கிய சர்ச்சைகளினால் மறு ஒளிபரப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது.

பிரிட்டன் அரச குடும்பத்தில் சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் குறைவே இல்லை. சார்லஸ் - டயானா விவாகரத்து, கமீலாவுடனான சார்லஸின் காதல் மற்றும் மறுமணம், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இளவரசர் ஆண்ட்ரு, விவாகரத்தான அமெரிக்க நடிகையான மேகனும் இளவரசர் ஹாரியும் திருமணம் செய்துகொண்டது, அரச குடும்பத்தின் கட்டுப்பாடுகளும் நெருக்கடிகளும் தாங்க முடியாமல் ஹாரி இளவரசர் பட்டத்தைத் துறந்து அமெரிக்கா சென்று குடியேறியது என இன்றுவரை சர்ச்சைகள் ஓயவில்லை.

‘ஜனநாயகம் கொடிகட்டிப் பறக்கும் இந்த 21-ம் நூற்றாண்டில் எதற்கு அரச குடும்பம், எதற்கு மக்களின் வரிப்பணம் அவர்களுக்குச் செலவு செய்யப்பட வேண்டும்’ எனக் கேள்வி கேட்கும் ஒரு பகுதியினர்; கடவுளுக்கு சற்று அருகே அவர்களை வைத்துப் பார்க்கும் மற்றொரு பகுதியினர் என பிரிட்டன் மக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

இறுதிவரை இளவரசர்!

சில வருடங்களாக நெட்ஃபிளிக்ஸில் பிரபலமான தொடர் ‘கிரௌன்.’ பிரிட்டன் அரச குடும்பக் கதை. மன்னர் எட்வர்ட் முடிதுறத்தல், மன்னர் ஜார்ஜ் பதவியேற்பு, அவரது மரணம், எலிசபெத் மகாராணியாகப் பதவியேற்றது, இளவரசி டயானா மரணம், அரச குடும்பம் மற்றும் அரசியலில் ஏற்படும் சிக்கல்கள், சர்ச்சைகள் என விறுவிறுப்பான பல நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை. அரச குடும்ப ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே தத்தம் ஆதரவு மற்றும் எதிர்ப்பை இன்னும் உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாய் இந்தத் தொலைக்காட்சித் தொடர் அமைந்தது.

‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம்’ எனப் பேசப்பட்ட பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் அதிகாரம் கண்ணெதிரே காணாமல்போனது உட்பட பல சரித்திரச் சம்பவங்களுக்கு சாட்சியாய் இருந்த பிலிப், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு (99 வருடங்கள்) வாழ்ந்து கடைசிவரை இளவரசராகவே இருந்து விடைபெற்றிருக்கிறார்.

ஒருபுறம் அவருடைய மரணத்திற்கு அனுதாபச் செய்திகள் குவிய, மறுபுறம் அவருடைய நக்கல் மற்றும் இனவெறித்தனமான பல பேச்சுகள் நினைவுகூரப்பட்டு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.

அவர்மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். இருப்பினும் வெற்றிகரமான எலிசபெத் மகாராணி என்ற பெண்ணுக்குப் பின்னால் ‘உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் சாண்ட்விச் எல்லாம் எலிசபெத்’ எனத் தன்னையே ஒப்புக்கொடுத்தார் என்ற பெயரே நிற்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism