கனடாவில் அதிகரித்து வரும் கொரோன பரவல் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு கனடா அரசு சில கொரோனா கட்டுப்பாடு விதிகளை அமல்படுத்தியிருந்தது. அந்த கட்டுப்பாட்டு விதிகளில், மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டம் நடத்தத் தடை, ட்ரக் ஓட்டுநர்கள் ஒரு மாகாணத்திலிருந்து, மற்றொரு மாகாணத்திற்குச் செல்லவும், அமெரிக்க எல்லையைக் கடக்கவும் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்று கனடா அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது.

இந்த நிலையில் ட்ரக் ஓட்டுநர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவைக் கடுமையாக எதிர்த்துவரும் கனடாவின் ட்ரக் ஓட்டுநர்கள், தடுப்பூசி போடுவதும் போடாமல் இருப்பதும் எங்களது உரிமை, அதைக் கட்டாயம் செய்யவேண்டும் எனக் கூறி எங்கள் சுதந்திரத்தைப் பறிப்பது என்பது வன்முறை, இரண்டு டோஸ் தடுப்பூசி போடாவிட்டால் ட்ரக் ஓட்டக்கூடாது என்று நீங்கள் கூறுவது எங்களது வாழ்வைப் பாதிக்கிறது, எனவே கட்டுப்பாடு விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும் என்று கோஷமிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்ரக் ஓட்டுநர்கள் கனடா தலைநகரில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ட்ரக் ஓட்டுநர்களின் போராட்டம் வலுத்துக்கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால், நிச்சயம் கலவரம் ஏற்பட்டு, பிரதமரின் பாதுகாப்பில் சிக்கல் ஏற்படலாம் என கனடாவின் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பிரதமரின் நலன் கருதி, பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கனடா அரசு ரகசிய இடத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.