Published:Updated:

`ஜார்ஜின் மரணத்துக்காக 9 நிமிடங்கள் மண்டியிட்டு அஞ்சலி’ - விமர்சனத்தை ஏற்படுத்திய கனட பிரதமர்

கனட பிரதமர் ஜஸ்டின்
கனட பிரதமர் ஜஸ்டின் ( AP )

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சாலையில் மண்டியிட்டு ஜார்ஜுக்கு அஞ்சலி செலுத்தியது சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மின்னெபொலிஸ் நகரில் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட், போலீஸ் பிடியில் கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பா, கனடா போன்ற பல நாடுகளிலும் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜார்ஜ் இறந்து 10 நாள்களுக்கு மேல் ஆன நிலையிலும் மக்களின் போராட்டம் நாளுக்குநாள் வலுவடைந்துகொண்டே செல்கிறது.

கனடா போராட்டம்
கனடா போராட்டம்

அமெரிக்காவில் நிலவும் இனவெறிக்கு எதிராகவும், அதிகார சட்டத்திருத்தத்தை வலியுறுத்தியும் கனடாவில் நேற்று நடந்த போராட்டத்தில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீரென கலந்துகொண்டுள்ளார். மேலும், அவர் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக தன் நாட்டு மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.

`அமெரிக்க போராட்டம் பற்றிய கேள்வி... 21 விநாடிகள் அமைதி’ - ட்ரம்ப்பின் பெயரை தவிர்த்த ட்ரூடோ

கனடா தலைநகரான ஒட்டாவாவில் இருக்கும் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அருகே நேற்று பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் போராட்டக்களத்துக்கு வந்த பிரதமர் ஜஸ்டின், போராட்டக்காரர்களின் கோரிக்கை மற்றும் கோஷங்களை சில நிமிடங்கள் நின்று கேட்டுக்கொண்டிருந்தார்.

பின்னர் சாலையிலேயே 9 நிமிடங்கள் வரை மண்டியிட்டு உயிரிழந்த ஜார்ஜுக்கு அஞ்சலி செலுத்தினார். இவருடன் கனடா அரசாங்கத்தின் அதிகாரிகளும் சோமாலியாவை பூர்வீகமாகக் கொண்ட கனடாவின் அமைச்சருமான அகமது ஹுசேனும் கலந்துகொண்டுள்ளனர்.

கனட பிரதமர் ஜஸ்டின்
கனட பிரதமர் ஜஸ்டின்
AP

பிரதமரின் வருகையை விரும்பாத சில போராட்டக்காரர்கள் `இங்கிருந்து வெளியேறுங்கள்’ ‘ட்ரம்ப்பை எதிர்த்து நில்லுங்கள்’ எனக் கோஷம் எழுப்பியுள்ளனர். இரு நாள்களுக்கு முன்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அமெரிக்கப் போராட்டம் தொடர்பான பத்திரிகையாளரின் கேள்விக்கு சில விநாடிகள் மௌனம் காத்த பிறகு, ட்ரம்பின் பெயரைக் குறிப்பிடாமலேயே தன் கருத்தைப் பதிவு செய்தார் ஜஸ்டின். இவர் மௌனம் காத்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையானது. இதன் காரணமாகவே போராட்டக்களத்திலும் ஜஸ்டின் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

நேற்றும் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சில மணிநேரங்களில் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அமைச்சர் ஹுசேன், `ஒரு நாட்டின் தலைவர் `Black Lives Matter' என மக்கள் கூறும்போது அதற்காக கைதட்டி, மண்டியிட்டு ஜார்ஜுக்கு அஞ்சலி செலுத்தியதை மிகவும் சக்திவாய்ந்த தருணமாகவே நான் கருதுகிறேன்” எனப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு