Published:Updated:

அதிக வெப்பம்; மூளையில் ஏறிய அமீபா! - ஆற்றில் குளித்தவருக்கு நேர்ந்த சோகம்

சத்யா கோபாலன்

அதிக வெப்பத்தின் காரணமாகத் தண்ணீரில் அதிக பாக்டீரியாக்கள் உருவாகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்லேரியா ஃபோலேரி அமீபா
நக்லேரியா ஃபோலேரி அமீபா ( BioSpace )

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஜூலை 12-ம் தேதி அங்குள்ள ஃபேன்டசி நதிக்குச் சென்று குளித்துள்ளார். அங்குக் குளித்து வந்த பிறகு அந்த நபருக்குத் தொடர்ந்து உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு நடந்த மருத்துவ சோதனையில் அவரின் தலையில் மூளையைச் சிதைக்கும் அமீபா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குளியல் - மாதிரி புகைப்படம்
குளியல் - மாதிரி புகைப்படம்

தொடர் சோதனைகளில் அவரின் மூளையில் அமீபா இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கும் முன்னரே பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். நக்லேரியா ஃபோலேரி (Naegleria fowleri) என்பது ஒற்றைச் செல் உயிரினம். பொதுவாக இந்த வகை அமீபாக்கள் ஆறு, குளம் போன்ற நன்னீரில் அதிகம் வாழக்கூடியவை. தெற்கு அமெரிக்க மாகாணங்களில்தான் இந்த வகை அமீபா பாதிப்புகள் அதிகம் இருப்பதாக கரோலினாவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கோடைக்காலங்களில்தான் இந்த அமீபாக்களால் இதுபோன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. நீரில் உள்ள நக்லேரியா ஃபோலேரி அமீபாக்கள் மூக்கு வழியாக மனிதனின் உடலுக்குள் நுழைந்து நேராக மூளைக்குச் செல்கிறது. இந்த அமீபாக்கள் மூளை திசுக்களைச் சிதைக்கும் தன்மையுடையவை. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மூளை வீக்கம் ஏற்படும், அடுத்தபடியாக இறப்புதான்.

மூளை
மூளை

அமீபா பாதிப்புகள் மிகவும் அரிதானவை. கடந்த 1962-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டு 145 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வெறும் 4 பேர் மட்டுமே அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்துள்ளனர். ”நன்னீரில் குளிக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கோடைக்காலத்தில் இன்னும் அதிக கவனமாக இருக்க வேண்டும்” என மருத்துவர் ஸாக் மோர் அறிவுறுத்தியுள்ளார்.