Published:Updated:

`விமானத்தில் ஒரே ஒரு சென்னை மாணவி; நடுக்கடலில் தவிக்கும் கப்பல்!'- உலக மக்களை உறையவைக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவிலிருந்து பிற நாடுகளுக்குச் செல்லும் மக்களைக் கண்டு அச்சமடையும் நிலை உருவாகியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். 9000-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 15-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
AP

இந்நிலையில், சீனாவில் சிக்கியிருக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களை மீட்க அந்தந்த நாட்டு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். வுகான் மற்றும் ஹூபே மாகாணத்தில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா விமானம் ஒன்று விரைவில் சீனாவுக்குப் பறக்கவுள்ளது. சிறப்பு மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் என உயர்தரச் சிறப்பு ஏற்பாடுகளுடன் அந்த விமானம் செல்லவுள்ளது. வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே இந்தியா அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு அங்கேயே சிகிச்சையளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வேலம் என்ற மாணவி, சீனாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள டியாஞ்சின் நகரில் இறுதி ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவர் நேற்று சீனாவிலிருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பியுள்ளார். டியாஞ்சின்னிலிருந்து சிங்கப்பூர் வழியே சென்னை வந்த விமானத்தில் மாணவி வேலம் மட்டும் தனியாகப் பயணம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினால் பிற நாடுகள் சீனாவுடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ள நிலையில், இவர்தான் சீனாவிலிருந்து இந்தியா வந்த இறுதி நபராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

சென்னை மாணவி
சென்னை மாணவி

விமானத்தில் தன் மகள் வேலம் தனியாக வந்த புகைப்படத்துடன் தன் கருத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்குப் பகிர்ந்துள்ள அவரது தந்தை முத்து, ``என் மகள் மருத்துவம் படிப்பதால் சீனாவிலேயே தங்கியிருந்து வைரஸால் பாதிக்கப்பட்ட பிறருக்கு மருத்துவம் பார்க்க விரும்பினார். ஆனால், அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளதால் நாங்கள் வற்புறுத்தி அவரைத் தாயகம் திரும்ப வைத்தோம். சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் நிறைய விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் என் மகளுக்கு அதிர்ஷ்டவசமாக ஒரு விமானம் கிடைத்தது, அதிலும் என் மகள் மட்டுமே தனியாகப் பயணம் செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

வேலம் பயணித்த விமானம் நேற்று காலை 9:30 மணிக்குச் சென்னை விமான நிலையத்தை அடைந்துள்ளது. அங்கு அவருக்கு வைரஸ் தொடர்பான அனைத்து ஆய்வுகள் நடத்தப்பட்ட பிறகு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியான பிறகே அவர் விமானநிலையத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்பெஷல் மெடிக்கல் கிட்.. வைரஸ் இருந்தால் `நோ' அனுமதி!- இந்தியர்களை மீட்க சீனா பறக்கும் ஏர் இந்தியா

இதேபோல, ஸ்பெயின் நாட்டின் மல்லோர்கா பகுதியிலிருந்து கோஸ்டா க்ரூசெஸ் என்ற கப்பல் ஒரு வாரகால நீண்ட பயணத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் இத்தாலியில் உள்ள சிவிடவேச்சியா என்ற துறைமுகத்தை அடைந்தது. அந்தக் கப்பலில் பயணித்த 54 வயதான சீனப் பெண்மணி ஒருவருக்குத் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம் எனச் சந்தேகித்த கப்பலிலிருந்த மருத்துவர்கள் அவரையும் அவரது கணவரையும் தனிமைப்படுத்தி தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

கோஸ்டா கப்பல்
கோஸ்டா கப்பல்
AP

இதனால் கோஸ்டா க்ரூசெஸ் கப்பலை தங்கள் நாட்டுக்குள் நுழையக் கூடாது என்ற அனுமதி மறுத்துவிட்டது இத்தாலி அரசு. இந்நிலையில் சுமார் 5,023 பயணிகள் மற்றும் 1,628 கப்பல் வேலையாட்களுடன், அந்தக் கப்பல் நடுக்கடலில் தத்தளித்து வருகிறது. பிற பயணிகள் சீனத் தம்பதியுடன் பயணித்ததால் அவர்களுக்கு வைரஸ் தொற்று இருக்கும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக இத்தாலியிலிருந்து ஒரு சிறப்பு மருத்துவக் குழு கப்பலுக்குள் சென்று அங்கு இருக்கும் அனைவரையும் சோதனை செய்து வைரஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கப்பல் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 7000 பேர் கடலில் தவித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு