Published:Updated:

செஞ்சீனத்துக்கு வயது 100! (1921-2021)

சீனா
பிரீமியம் ஸ்டோரி
சீனா

இன்று உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி, சீனா. உலகின் முதன்மையான ராணுவ பலமிக்க நாடும் சீனாதான்.

செஞ்சீனத்துக்கு வயது 100! (1921-2021)

இன்று உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி, சீனா. உலகின் முதன்மையான ராணுவ பலமிக்க நாடும் சீனாதான்.

Published:Updated:
சீனா
பிரீமியம் ஸ்டோரி
சீனா

ஒரு நெருக்கடியை எப்படிச் சவாலாக மாற்றிக்கொள்வது, தீவிர முனைப்போடு அந்தச் சவாலை எதிர்கொண்டு எப்படி வெல்வது, கிடைத்த வெற்றியை சாதகமாக்கிக்கொண்டு முன்பிருந்ததைக் காட்டிலும் மேலதிக பலத்தோடு எழுந்து நிற்பது எப்படி என்பதையெல்லாம் சீனாவிடமிருந்துதான் உலகம் கற்றுக்கொள்ளவேண்டும்.

முழு இருளில், பற்றிக்கொள்ள எதுவுமில்லாமல் ஒட்டுமொத்த தேசமும் தத்தளித்துக்கொண்டிருந்த 1921-ம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. ஒரு பக்கம் உள்நாட்டுப் போர். இன்னொரு பக்கம் வறுமை, பிணி, நம்பிக்கை வறட்சி. சீனாவின் 40 கோடி மக்களில் பெரும்பகுதியினர் கிராமப்புறங்களில் அடைபட்டுக் கிடந்தனர். துருக்கி ஐரோப்பாவின் நோயாளி என்றால், சீனா கிழக்கின் நோயாளி. ‘எக்காலத்திலும் இவர்களுக்குக் கடைத்தேற்றம் கிடைக்கப்போவதில்லை’ என்று உலகம் தீர்ப்பே எழுதி முடித்துவிட்டது.

செஞ்சீனத்துக்கு வயது 100! (1921-2021)

சோவியத் யூனியன் எனும் மலையுச்சியில் நடுக்கத்தோடு எரிந்துகொண்டிருந்த சின்னஞ்சிறிய கம்யூனிச அகல்விளக்கு சில சீனர்களைச் சுண்டி இழுத்தது. இந்த ஒளியை நாமும் ஏன் இங்கே கொண்டுவரக்கூடாது? ரஷ்யர்கள் வழியில் போராடினால் அவர்களுக்குக் கிடைத்த மீட்சி நமக்கும் கிடைக்கக்கூடும் அல்லவா? சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதில் ஐம்பது பேர் இருந்தனர். முதல் அடியை அங்கிருந்து எடுத்து வைத்தார்கள். அது நீண்டதொரு பயணத்தைத் தொடங்கிவைத்தது.

இன்று உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி, சீனா. உலகின் முதன்மையான ராணுவ பலமிக்க நாடும் சீனாதான். இது சாத்தியமானதற்குக் காரணம் முதல் அடியை எடுத்து வைத்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. இன்று 92 மில்லியன் சீனர்கள் அக்கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். உலகில் வேறு எங்கும் எப்போதும் இவ்வளவு பேர் எந்தவொரு கட்சியிலும் இருந்ததில்லை.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக 1935-ம் ஆண்டு மாவோ பொறுப்பேற்றுக்கொண்ட கணத்திலிருந்தே சீனா மாற ஆரம்பித்துவிட்டது. ஜப்பானின் ஆக்கிரமிப்புப் போரை வென்ற கையோடு பல ஆண்டுகளாக சீனாவை அரித்துக்கொண்டிருந்த உள்நாட்டுப் போரையும் முடிவுக்குக் கொண்டுவந்தார் மாவோ. பழைய தளைகள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, புதிய மக்கள் சீனக் குடியரசு மலர்ந்தது. செஞ்சீனத்தின் புதிய கொடியை மாவோ ஏற்றியபோது, சுமார் இரண்டு லட்சம் பேர் ஒன்றுதிரண்டு வரவேற்றனர்.

அடையாளமின்றிக் கலங்கிப்போயிருந்த சீன தேசத்துக்கு நம்பிக்கையை, தன்மானத்தை, எதிர்காலம் குறித்த கனவுகளை ஊட்டவேண்டும். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துவண்டு போயிருந்த மக்களுக்குப் புது ரத்தம் பாய்ச்சவேண்டும். பல துண்டுகளாகப் பிளவுண்டிருக்கும் மக்களை ‘நாம் அனைவரும் சீனர்கள்’ என்று உணரச் செய்யவேண்டும். அவர்களை ஒரு குடையின்கீழ் ஒன்று திரட்டவேண்டும். கல்வி, வளர்ச்சி, பகுத்தறிவு, சமத்துவம், பொதுவுடைமை, தேசியவாதம் அனைத்தையும் அறிமுகப்படுத்தவேண்டும். ஒவ்வொரு புது அடியை எடுத்து வைக்கும்போதும் தோன்றும் ஓராயிரம் முரண்களை, ஓராயிரம் சவால்களை, ஓராயிரம் எதிர்ப்புகளை உடனுக்குடன் தீர்க்கவேண்டும்.

இந்நூற்றாண்டின் மாபெரும் தேசக் கட்டுமானப் பணியை மாவோவின் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி வைத்தது. சீன மண்ணுக்கு ஏற்றவாறு, சீனப் பண்பாட்டு வேர்களுக்கு ஏற்றவாறு, சீனப் பொருளாதாரக் கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தை மாற்றியமைத்தார் மாவோ. தனியார்மயத்தை, தாராளமயமாக்கலை உலகம் வேகவேகமாகத் தழுவிக்கொண்டிருந்த வேளையில் சீனாவை உலகிடமிருந்து துண்டித்ததோடு, சீனாவையே ஒரு தனியுலகாக மாற்றிக் காட்டினார் மாவோ. அரை காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாடாக இருந்த சீனா சுயசார்புள்ள, தன்னிறைவான ஒரு தேசமாகத் திரள ஆரம்பித்தது.

செஞ்சீனத்துக்கு வயது 100! (1921-2021)

1949 முதல் 1978 வரை சீனாவில் படிப்படியாக நிகழ்த்தப்பட்ட சோஷலிசப் புரட்சி சீன வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் பதிந்துபோனது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்களும் கரம் கோத்துக்கொண்டதால் மட்டுமே நிகழ்ந்த பெருமாற்றம் இது. ஆம், தவறுகள் நிகழ்ந்தன. சேதங்கள் விளைந்தன. தத்துவத்துக்கும் நடை முறைக்கும்; காகிதத்துக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளி தேசத்தை பாதித்தது. இவை அனைத்தையும் மீறி ஒரு புதிய அரசியல், சமூக, கோட்பாட்டு அடித்தளமொன்று உருவானது. அந்த அடித்தளத்தின்மீது பலமிக்க புதிய தேசமாக சீனா எழுந்து நின்றது.

மாவோவின் மறைவுக்குப் பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சரி தவறுகள் விரிவாக அலசி ஆராயப்பட்டன. 1978-ம் ஆண்டு டெங் ஜியோபிங் தலைமையில் சீனா மற்றொரு அடிப்படையான மாற்றத்துக்குத் தயாரானது. சீர்திருத்தம் என்னும் பெயரில் சீனாவின் சந்தை உலகுக்குத் திறந்துவிடப்பட்டது. அதே சமயம் அமெரிக்கா போல் மேற்குலகம் போல் சீனா முற்றிலுமாக நிறம் மாறுவது சாத்தியமில்லை என்பதை டெங் ஜியோபிங்கும் சரி, அவருக்குப் பிறகு வந்தவர்களும் சரி, நன்றாகவே உணர்ந்திருந்தனர். எனவே எதிரெதிர் துருவங்களான சோஷலிசத்தையும் முதலாளித்துவத்தையும் வலுக்கட்டாயமாக ஒன்றிணைத்து, சீன பாணி சோஷலிசம் என்னும் புதிய கோட்பாட்டை உருவாக்கினார்கள்.

செஞ்சீனத்துக்கு வயது 100! (1921-2021)


இந்த முரண்பாடு இன்றுவரை நீங்கவில்லை. தேசம் முழுக்க முதலாளித்துவம் விரிந்து படர்ந்திருந்தாலும், கட்சியின் பெயரில் இன்னமும் கம்யூனிசம் அழுத்தமாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. உலகின் ஒரு பகுதியாக, எல்லோரையும் போல் மற்றொரு முதலாளித்துவ நாடாக இருக்கும் அதே சமயம், இரும்புத் திரையொன்றைப் போட்டுத் தன் தேசத்தை மூடியும் வைத்திருக்க முடிகிறது சீனாவால். மாவோ ஏற்றிய கொடி இன்னமும் தேசம் முழுக்கப் பறந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும், மாவோவால் ஒருபோதும் ஏற்கமுடியாத கோட்பாடுகளை அக்கொடி தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது.

நவீன சீனாவின் வரலாறும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறும் வெவ்வேறானதல்ல. வேகமாக வளர்ந்த கட்சி மட்டுமல்ல, உலகிலேயே இணைவதற்குக் கடினமான கட்சியும் இது ஒன்றுதான். ஒவ்வொரு நாளும் மலையளவு விண்ணப்பங்கள் பறந்து வருகின்றன. ஏதோ ஏழை பாழைகள் அனுப்பியவை என்று நினைத்துவிடவேண்டாம். மிகப்பெரும் செல்வந்தர்களும்கூட வரிசையில்தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் கவனமாகக் கையில் எடுத்து, நிதானமாகப் பார்த்துவிட்டுத்தான் சேர்த்துக்கொள்கிறார்கள்.

இது ஷி ஜின்பிங் எடுத்த முடிவு. 2012-ம் ஆண்டு அவர் பதவியில் அமர்ந்தார். அடுத்த ஆண்டு புதிதாகக் கட்சியில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியன். ஓராண்டில் இணைந்தவர்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் இதுதான் இருப்பதிலேயே குறைவானது என்கிறது தி எகனாமிஸ்ட். ஆம், ‘‘வேண்டுமென்றேதான் கதவுகளை மூடி வைத்திருக்கிறோம்’’ என்கிறார் ஷி ஜின்பிங்.

செஞ்சீனத்துக்கு வயது 100! (1921-2021)

சரி, எதற்காகப் போட்டியிட்டு இவ்வளவு பேர் கட்சியில் சேரத் துடிக்கிறார்கள்? கட்சி உறுப்பினர் என்பது சீனாவைப் பொறுத்தவரை வெறும் கட்சி அடையாளம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தையும் தீர்மானிக்கும், மாற்றியமைக்கும் துருப்புச்சீட்டு. அரசுப்பணியில் சேரவேண்டுமானாலும் சரி, அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணற்ற நிறுவனங்களில் இணையவேண்டுமானாலும் சரி, உறுப்பினர் அடையாள அட்டை இருந்தாக வேண்டும்.

பொதுநலமல்ல, சுயநலமே பலருக்கும் உந்து சக்தியாக இருக்கிறது என்பதைக் கட்சியும் உணர்ந்திருப்பதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதுபோக அடிப் படையான இன்னொரு அச்சமும் இருக்கிறது. அதை ஷி ஜின்பிங்கே பல ஆண்டுகளுக்கு முன்பு தனது உரையொன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் 2 மில்லியன் பேர் இருந்தபோது இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரைத் தோற்கடிக்கமுடிந்தது. சோவியத் சிதறியபோது கட்சியில் எவ்வளவு பேர் இருந்தார்கள் தெரியுமா? 20 மில்லியன் பேர். இவ்வளவு பேர் இருந்தும் ஏன் சோவியத் சிதறியது என்பதற்கான விடை, ‘இவ்வளவு பேர் இருந்ததால்தான் அந்த விபத்து நிகழ்ந்தது’ என்பதுதான். கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் அவரவர் விரும்பியதைச் செய்தார்கள், அவரவருக்குத் தோன்றியபடி முடிவெடுத்தார்கள். இது தேசத்தை உடைத்தது. சோவியத்தின் தவற்றை ஒருபோதும் நாம் இழைக்கக்கூடாது. கட்சி உறுப்பினர்களை அதிகரிப்பது அல்ல, கட்சியின் மையத்தைப் பலப்படுத்துவதுதான் நம் நோக்கமாக இருக்கவேண்டும்.’

தவிர்க்கவியலாதபடி, கட்சியின் குறைகளே அத்தேசத்தின் குறைகளாகவும் நீண்டிருக்கின்றன. எது சீனாவின் பெரும்பலமோ, அதுவே அதன் பலவீனமாகவும் இருக்கிறது.

உலகின் நவீன, பெரிய ராணுவம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமானது, சீனாவுக்கு அல்ல. நீதிமன்றத்தின் பணியைப் பெருமளவு கட்சியே அங்கே நிறைவேற்றுகிறது. ஊடகத்தின் பணியையும்தான். அச்சு முதல் இணையம்வரை அனைத்தும் கட்சியால் முறைப்படுத்தப்படுகின்றன, அனைத்தும் கட்சியால் தணிக்கை செய்யப்படுகின்றன. ஜனநாயகம் என்பது அனுமதிக்கப்பட்ட எல்லை வரைதான் தழைக்கிறது. அவ்வளவு மட்டும்தான் தழைக்கவும் முடியும். மேலதிக ஜனநாயகம் வேண்டியும் மேலதிக உரிமைகள் கோரியும் முன்னெடுக்கப்படும் அத்தனை போராட்டங்களையும் தேச விரோதப் போராட்டங்களாகவே சீனா கருதுகிறது. கரப்பான்பூச்சியை நாம் கையாள்வது போல மனிதர்களை நசுக்குகிறது.

ஜின்ஜியாங்கில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உய்குர் முஸ்லிம்களையும் பிற சிறுபான்மையினரையும் சீனா தடுப்புக்காவலில் அடைத்து வைத்திருக்கிறது. ஹாங்காங் வீதிகளில் எழுந்த அத்தனை போராட்ட அலைகளையும் இரும்புக்கரம் கொண்டே சீனா அடக்கியிருக்கிறது. எதிர்க்குரல்கள் அனைத்தும் சீனாவைப் பொறுத்தவரை பிரிவினைவாதத்தின் குரல்களே. உலகின் பெரிய ராணுவம், பெரிய கட்சி, பெரிய பொருளாதாரம் அனைத்தும் இருந்தும் சீனா இன்னமும் அச்சத்தில்தான் மூழ்கிக்கிடக்கிறது. மாவோ காலத்துச் சீனா கொண்டிருந்த அதே அச்சம்; அமெரிக்கா குறித்த, மேற்குலகம் குறித்த, ஏகாதிபத்தியம் குறித்த அதே அச்சம். உலகின் பல நாடுகளைக் கடன் கொடுத்து தன் வலையில் வீழ்த்தி நவீன காலனியாதிக்கத்தை சீனா தொடங்கியிருந்தாலும், அந்த அச்சம் விலகவில்லை.

இந்த அச்சம்தான் சீனாவின் தனித்துவமான அடையாளம். இந்த அச்சம்தான் சீனாவை இன்றுவரை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. இந்த அச்சம்தான் சீனாவை மேலும் மேலும் பலமிக்க ஒரு ஆற்றலாக ஒவ்வொரு நாளும் வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆற்றலைக் கொண்டு தனது குறைபாடுகளை, தனது குற்றங்களை, தனது பிழைகளை, தனது அச்சங்களை அது வெல்லும்போது சீனாவோடு சேர்ந்து ஒட்டுமொத்த உலகமும் பெரும்பாய்ச்சலொன்றை நிகழ்த்தும்.