Published:Updated:

`5 வருட ரகசிய திட்டம்; உலகிலேயே முதல்முறை’ - டிஜிட்டல் கரன்சியை வெளியிடவுள்ள சீனா

சீனா கரன்சி
சீனா கரன்சி ( Representational image )

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் திடீரென டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தவுள்ளது சீனா.

மொத்த மனித குலத்தையும் வீட்டுச் சிறையில் அடைத்து வைத்துள்ள இந்தக் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் சுமார் 29 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மொத்த உலகமும் பூட்டப்பட்டிருந்தாலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைத் தடுக்க அனைத்து நாடுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

சீனா
சீனா

சீனாவின் ஹூபே மாகாணத் தலைநகர் வுகானில் இருக்கும் ஒரு இறைச்சி சந்தையிலிருந்து டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. இதை அறியாத மக்கள் பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஒன்றிணைந்தபோது மிகவும் வேகமாக அந்நாடு முழுவதும் பரவியுள்ளது. சீனாவில் ஒரே மாதத்தில் வைரஸால் 80,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 3,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த எதிர்பாராத நிகழ்வால் ஸ்தம்பித்த சீனா, அவசர அவசரமாக அனைத்து நடவடிக்கைகளையும் கடுமையாக மேற்கொண்டு அடுத்த 3 மாதத்தில் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

தற்போது அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். கடந்த மார்ச் மாதம் பாதியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. போக்குவரத்து, வணிகம், சுற்றுலா, தொழிற்சாலைகள், பொழுதுபோக்கு அரங்கங்கள் போன்ற அனைத்துமே திறக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது சீனா.

ஆனால் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்த நாடுகளுக்குத் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள், ரேபிட் டெஸ்ட் கருவிகள் போன்ற அனைத்தும் சீனாவிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சீனாவின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்து வருகிறது.

சீனா
சீனா
AP

இந்நிலையில், முதன்முறையாக டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யவுள்ளது சீனா. அந்நாட்டின் மத்திய வங்கிகள் ஒன்றிணைந்து `டிஜிட்டல் யுவான்’ கரன்சியை அறிமுகப்படுத்தவுள்ளன. அந்நாட்டில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் பணத்தின் டிஜிட்டல் வெர்சன்தான் இது. இதை வங்கி அளிக்கும் தனி வாலட்டில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். கடந்த 5 வருடங்களாக ரகசிய திட்டம் தீட்டி தற்போது அதைச் செயல்படுத்தவுள்ளது சீனா. உலகம் முழுவதும் ஏற்கெனவே பிட் காயின் நடைமுறை பல நாடுகளில் உள்ளது, ஆனால், அதை ஒரு நாட்டு அரசு அதிகாரபூர்வமாகச் செயல்படுத்துவது இதுவே முதல்முறை.

‘அறிகுறி இல்லை; குணமடைந்த 70 நாள்களுக்குப் பின் பாசிட்டிவ்!’ -கொரோனா வைரஸால் குழம்பும் சீனா!

இந்த நடைமுறை வெற்றிபெற்றால் நாடு முழுவதும் பெரிய அளவில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளன சீனாவின் மத்திய வங்கிகள். முதல்கட்டமாக சீனாவில் உள்ள 19 பிரபல உணவு நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிறுவனங்கள், இன்னும் சில வணிக நிறுவனங்கள் டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். கொரோனா நேரத்தில் சீனா எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு உலக அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது.

சீனா கரன்சி
சீனா கரன்சி
Representational image

உலக பொருளாதாரத்திலேயே மிகவும் உயர்ந்தது அமெரிக்காவின் டாலர் தான். 2019-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 90% சர்வதேச பரிவர்த்தனைகள் அமெரிக்க டாலர்களில் நிகழ்ந்துள்ளன. இதற்கிடையில் பல தசாப்தங்களாக ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகள் மாற்று இருப்பு நாணய முறையை உருவாக்கக் கடுமையான முயற்சி செய்து வருகின்றன. ஆனால், இதுவரை எதுவும் அதிக வெற்றியைப் பெறவில்லை.

2014-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் டாலர்களிடமிருந்து விலகி செல்வதற்கான ஒரு டிஜிட்டல் நாணயங்களை உருவாக்க சீனா மிக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாகவே தற்போது டிஜிட்டல் யுவான் கரன்சியும் வெளியிடப்படவுள்ளது. டிஜிட்டல் யுவானை உலகெங்கிலும் அன்றாட பரிவத்தனைகளில் பயன்படுத்தி அமெரிக்க டாலருக்கு இணையாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு