Published:Updated:

`அமெரிக்கா மோசமாகச் செயல்பட்டது. ஆனால் சீனா..?’ - சர்வதேச வைரஸ் பரவல் குறித்து பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மிக மோசமாக நடந்துகொண்டதாக பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அமெரிக்காவில்தான் அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனை நெருங்கிவருகிறது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பிற நாடுகளைவிட 2 மடங்கு அதிகமாக 55,415 -ஆக உள்ளது.

அதே நேரத்தில், முதன்முதலில் வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்ட சீனா, தற்போது அதிலிருந்து மீண்டுவிட்டது. இந்த இரு நாடுகள் மற்றும் கொரோனாவுக்கு எதிராக பிற நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகுறித்து பெரும் பணக்காரரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் பேசியுள்ளார்.

அமெரிக்கா ஊரடங்கு
அமெரிக்கா ஊரடங்கு
AP

சி.என்.என் ஊடகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துகொண்டு பேசியுள்ளார் கேட்ஸ். அப்போது, “அமெரிக்கா தற்போது இருக்கும் நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால், மீண்டும் அதிவேக வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும். அனைத்து மாகாணங்களும் நியூயார்க்குடன் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்படும். இதிலிருந்து மீண்டு வருவதும் பெரும் சிரமமாக இருக்கும். உலக சுகாதார அமைப்பு உட்பட, பல சுகாதார வல்லுநர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் பரிந்துரைப்படி செயல்படுவது நல்லது’ எனத் தெரிவித்துள்ளார்.

‘6-10 வாரம் கடுமையான ஊரடங்கு தேவை!’ -அமெரிக்காவுக்கு பில்கேட்ஸ் அட்வைஸ் #Coronavirus

சீனா, கொரோனா வைரஸ் தொடர்பாக சில விஷயங்களை மறைக்க முயன்றதாகவும், தவறான தகவல்களைப் பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த பில்கேட்ஸ், “வைரஸ் முதலில் தோன்றியதும், பிற நாடுகளைப் போல சீனாவும் நிறைய நல்ல விஷயங்களைச் செய்தது. தங்கள் நாடு கடுமையான பொருளாதார சரிவை சந்திக்காமல் பார்த்துக்கொண்டது. அவர்களே தங்களை மீண்டும் சோதித்துக்கொண்டால், வைரஸ் பரவலில் எங்கு தவறு நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்

பல நாடுகளும் வைரஸ் பரவலுக்கு எதிராக மிக வேகமாகச் செயல்பட்டன. மேலும், அந்த நாடுகள் நம்பமுடியாத பொருளாதார வலியைத் தவிர்த்துள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் அமெரிக்கா மோசமாகச் செயல்பட்டதுதான் வருத்தமளிக்கிறது. ஆனால், அதைப் பற்றி பேசும் நேரம் இது இல்லை. நம்மிடம் உள்ள சிறந்த விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதற்கான நேரம் இது. சோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆகியவற்றை முறையாகச் செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு