Published:Updated:

கொஞ்சம் பொறுப்பா இருங்க சீனா!

விண்வெளி ஆராய்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
விண்வெளி ஆராய்ச்சி

தேவையில்லாமல் மேற்கத்திய நாடுகள் பெரிதுபடுத்துகின்றன. பூமியில் 70% கடல்களால் நிரம்பியது. எப்படியும் இது கடலில் விழும்.

கொஞ்சம் பொறுப்பா இருங்க சீனா!

தேவையில்லாமல் மேற்கத்திய நாடுகள் பெரிதுபடுத்துகின்றன. பூமியில் 70% கடல்களால் நிரம்பியது. எப்படியும் இது கடலில் விழும்.

Published:Updated:
விண்வெளி ஆராய்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
விண்வெளி ஆராய்ச்சி

அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் உலகின் முன்னணி வல்லரசாகும் வேட்கையுடன் பல வருடங்களாகத் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கும் நாடு சீனா. ‘விரைவில் பொருளாதாரத்தில் உலகின் நம்பர் ஒன் நாடாகச் சீனா உயரும்’ எனக் கணக்கிடுகின்றனர் வல்லுநர்கள். வல்லரசாக வேண்டுமென்றால் பொருளாதாரம், விளையாட்டையும் தாண்டி இன்னொரு முக்கிய விஷயத்திலும் சாதிக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். அது, விண்வெளி ஆராய்ச்சி. பனிப்போரின்போது அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தக் களத்தில்தான் முட்டி மோதிக்கொண்டன. அந்தச் சமயத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் பல மைல்கல்கள் எட்டப்பட்டன. மனிதன் விண்வெளிக்குப் பாய்ந்தான், நிலவில் கால்தடம் பதித்தான். இந்த விண்வெளி ரேஸில் மற்ற நாடுகளை ஓவர்டேக் செய்து முதல் இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது சீனா.

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பியது, எந்த ஒரு நாடும் இதுவரை தடம் பதிக்காத நிலவின் மற்றொரு புறத்தில் விண்கலத்தைத் தரையிறக்கியது, நிலவிலிருந்து மாதிரிகளைப் பூமிக்கு எடுத்துவந்தது எனச் சமீபகாலத்தில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறது சீனா. இன்னும் பல திட்டங்களையும் கைவசம் வைத்திருக்கிறது. அதில் முக்கியத் திட்டம் தியான்காங் விண்வெளி நிலையம் (Tiangong Space Station). சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) மாற்றாகச் சீனா முன்வைக்கும் அதிநவீன விண்வெளி நிலையம் இது. அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் ராஸ்காஸ்மாஸ் மற்றும் சில விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் சேர்ந்து நிறுவிய சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக மனிதர்களை விண்வெளியில் வைத்திருக்கிறது. ஆனால், இதில் சீன விண்வெளி வீரர்களை அனுமதிக்கவில்லை அமெரிக்கா. அதனால்தான் கிட்டத்தட்ட அதே போன்றதொரு விண்வெளி நிலையம் அமைப்பதில் தீவிரமாக இருக்கிறது சீனா.

‘தியான்காங்’ என்ற சீன வார்த்தைக்கு ‘சொர்க்க பூமி’ என்று அர்த்தம். 2022-ல் இயங்கவுள்ள இந்த விண்வெளி நிலையத்தின் ஒரு பெரும்பகுதியை (Tianhe Module) கடந்த ஏப்ரல் 29-ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது சீனா. இதை எடுத்துச் சென்ற லாங் மார்ச் 5பி ராக்கெட்டின் பாகங்கள் கட்டுப்பாடின்றி எப்போது வேண்டுமானாலும் பூமியில் மோதலாம் எனத் தகவல் வெளிவர, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 23 டன் எடையுள்ள, கிட்டத்தட்ட 10 மாடி உயரமுடைய பாகம் ஒன்று அதிவேகத்தில் பூமியில் விழப்போகிறது என்றால் யாருக்குத்தான் திக்கென இருக்காது!

கொஞ்சம் பொறுப்பா இருங்க சீனா!

பொதுவாக விண்ணில் ஒரு ராக்கெட் செலுத்தப்படுகிறது என்றால், ஒவ்வொரு கட்டத்திலும் அதன் செயல்பாடு முடிந்தபின் அதன் பாகங்கள் ராக்கெட்டிலிருந்து பிரிந்து கீழே விழும். பெரும்பாலும் கடலில் விழும் வண்ணம் திட்டமிட்டிருப்பார்கள். ஆனால், ‘‘இந்த ராக்கெட்டைப் பொறுத்தவரையில் சீனா அதைச் செய்யவில்லை. எப்படியும் கீழே விழும் என்று தெரிந்தே சீனா இதை நடக்கவிட்டிருக்கிறது’’ என்பதுதான் நாசா போன்ற அமைப்புகளின் குற்றச்சாட்டு.

சீனாவோ, ‘‘இதைத் தேவையில்லாமல் மேற்கத்திய நாடுகள் பெரிதுபடுத்துகின்றன. பூமியில் 70% கடல்களால் நிரம்பியது. எப்படியும் இது கடலில் விழும். அல்லது தரையை அடைவதற்குள் எரிந்து சாம்பலாகிவிடும்’’ என விளக்கம் கொடுத்தது. சீனா சொன்னபடியே மாலத்தீவு அருகே இந்தியப் பெருங்கடலில் விழுந்தது இந்த ராக்கெட்டின் பாகம். ஆனால், “விண்வெளிக்கு அனுப்பும் பொருள்கள் மீண்டும் பூமிக்குத் திரும்பி மக்களுக்கும் மக்கள் உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்காமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும். பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவை இதில் அவசியம். அனைத்து நாடுகளும் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என்று கண்டித்தார் நாசாவின் தலைமை நிர்வாக அதிகாரி பில் நெல்சன்.

இன்று தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்டன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் பாகங்களை பத்திரமாகத் தரையிறக்கி, அவற்றை மீண்டும் பயன்படுத்தும் முயற்சியில் இருக்கிறது. முதல்கட்ட சோதனையில் வெற்றியும் கண்டுள்ளது. அந்த அளவு முயற்சிகள் இல்லையென்றாலும் பாதுகாப்பான இடங்களில் பாகங்கள் விழுவதையாவது உறுதிசெய்யவேண்டும் சீனா. ஆனால், வெளிப்படைத்தன்மை இல்லாமல் அனைவரையும் குழப்புகிறது சீனா. சீனாவின் எல்லைகளுக்கு உட்பட்ட பிரச்னை என்றால் யாரும் கேள்விகேட்கப்போவதில்லை. ஆனால், இது யாரை வேண்டுமானாலும் பாதிக்கும் ஒரு சிக்கல். மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் ஒரு பகுதி இதே போன்று அமெரிக்க விவசாய நிலங்களில் விழுந்தது. ஆனால், அது ஒரு விபத்து. எதிர்பார்த்த வண்ணம் அந்த ராக்கெட் செயல்படவில்லை. சீனா ‘இதுதான் நடக்கும்’ என்று தெரிந்தே ராக்கெட்களை ஏவுகிறது என்பதுதான் பலரும் கேள்வியெழுப்ப முக்கிய காரணம்.

கடந்த வருடம் இதே ரக சீன ராக்கெட் ஒன்றின் பாகங்கள் ஐவரி கோஸ்ட் நாட்டின் கடலோரப் பகுதியில் விழுந்து சில குடியிருப்புகளைச் சேதப்படுத்தியது. நல்லவேளையாக யாரும் காயமடையவில்லை. 2022-க்குள் இன்னும் இதுபோன்ற பத்து ராக்கெட்கள் ஏவத் திட்டமிட்டிருக்கிறது சீனா. அதிலாவது கொஞ்சம் பொறுப்பா இருங்க சீனா!