Published:Updated:

`கொரோனா நேரத்தில் எங்கள் கவனம் சிதறும்!’ - சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சீனா

சீனா
சீனா

'கொரோனா வைரஸின் உருவாக்கம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு, இப்போது ஒத்துழைப்பு வழங்க முடியாது' என சீனா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 28,31,513 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி 1,97,297 பேரை பலி கொண்டுவிட்டது கொடூர கொரோனா வைரஸ். இவை அனைத்தும், கடந்த 4 மாதங்களில் மட்டுமே நடந்துள்ளது. இந்த வைரஸை அழிக்கும் அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா எங்கிருந்து உருவானது என்பதை அறிந்தால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் மருந்து கண்டுபிடிக்கவும் எளிதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்நிலையில், வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதில் பெரும் சர்ச்சை நிலவி, சர்வதேச விசாரணை வரை சென்றுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வுஹானில் உள்ள ஓர் இறைச்சி சந்தையிலிருந்துதான் முதன்முதலில் கொரோனா வைரஸ் உருவானதாகக் கூறப்படுகிறது. இருந்தும் அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியிடப்படவில்லை. பின்னர், வுஹானில் உள்ள ஒரு வைரஸ் ஆய்வகத்திலிருந்து கொரோனா உருவானதாகப் பல நாடுகளும் குற்றம் சுமத்திவருகின்றன.

`ஐரோப்பிய நாடுகள் மற்றும் தங்கள் அருகில் உள்ள நாடுகளைக் குறிவைத்து சீனா நடத்திய சதி இது' என்று ஐரோப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். ஆனால், இந்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சீனா முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் கருத்தை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் ஆதரித்துள்ளனர்.

சீனா
சீனா
AP

இதற்கிடையில், வைரஸ் உருவான இடம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனப் பேச்சு எழுந்துள்ளது. ஆனால், இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிபிசி ஊடகத்திடம் பேசியுள்ள பிரிட்டனுக்கான சீனாவின் துணைத் தூதர் சென் வென், “கொரோனா தொடர்பான சர்வதேச விசாரணைக்கு ஒப்புக்கொள்ள முடியாது. தற்போது, சீன அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழுக்கவனம் செலுத்திவருகிறது. இந்த நேரத்தில் இதுபற்றிப் பேச வேண்டுமா?

`வைரஸ் எங்களிடமிருந்து பரவ வாய்ப்பே இல்லை..!' -வீடியோ மூலம் விளக்கம் கொடுத்த வுஹான் ஆய்வகம்

இந்த விசாரணையால் எங்கள் கவனம் திசைதிருப்பப்படும். தனிப்பட்ட விசாரணையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது, இதனால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வைரஸின் தோற்றம் குறித்த பல வதந்திகள் பரப்பப்பட்டுவருகிறது, இது மிகவும் மோசமானது. அரசியலும் வைரஸைப் போன்றது, கொரோனாவைப் போல அதுவும் ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு