Published:Updated:

`சோகம்.. இடுப்பு முழுவதும் பட்டாசு!'- பிறந்தநாள் பார்ட்டிக்கு அனுமதி மறுத்த அதிகாரிகளை பதறவைத்த நபர்

வாங்
வாங் ( twitter )

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று கூறி அதிகாரிகள் வாங்கிற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

இதுவரை 1,100-க்கும் மேற்பட்டவர்கள் பலி... 44,600-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு என கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் உலகை அச்சுறுத்தி வருகிறது. வியட்நாமில், மூன்று மாதமே ஆன குழந்தை ஒன்றுக்கு கொரோனா பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மட்டும், நாவல் கொரோனாவால் இறந்தவர்கள் 108 பேர். கொரோனாவின் தாக்கம் உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து, நேற்றைய தினம் சீனாவுக்கு விரைந்தது உலக சுகாதார நிறுவனம். வைரஸ் பரவலைத் தடுக்கவும் நோய்க்கான எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளையும் சீன அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகத் தவறாக எண்ணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ்

இதேபோல் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடவிடவில்லை என்பதற்காக சீனாவைச் சேர்ந்த நபர் தீக்குளித்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனா முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் இழந்து வீடுகளுக்குள்ளேயே பல நாள்களாக முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில்தான், தென்மேற்கு சீனாவைச் சேர்ந்த 59 வயதான வாங் என்ற நபர், தனது பிறந்த நாள் கொண்டாடட்டத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார்.

`COVID - 19' - கொரோனா வைரஸின் புதிய பெயருக்கு `WHO' சொல்லும் விளக்கம்

இதற்காக 10-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். பார்ட்டிக்கு வரும் விருந்தினர்களுக்கு தடபுடல் விருந்து வைபவத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்ததாக சீன அரசின் செய்தி நிறுவனமான சினுவா ஊடகம் தெரிவித்துள்ளது. பின்னர் இதற்காக அதிகாரிகளின் அனுமதியைப் பெறுவதற்காக முயன்றபோது, ``கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று கூறி அதிகாரிகள் வாங்கிற்கு அனுமதி மறுத்துள்ளனர். அனுமதி மறுக்கப்பட்டதால், வாங் சோகத்துடனே வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் கூறியதாக சினுவா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

`கொரோனா' வைரஸ்
`கொரோனா' வைரஸ்

மேலும், வீட்டுக்குச் சென்றபிறகு சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அப்போது தனது இடுப்பைச் சுற்றிலும் பட்டாசுகளைக் கட்டிக்கொண்டு ஆயுதம் ஒன்றைக் கையில் ஏந்தியபடி சாலையில் சென்றுள்ளார். பின்னர் தொலைவில் உள்ள கிராம அதிகாரியின் அலுவலகத்துக்கு எதிரே சென்ற வாங் அங்கு, தனக்கு பிறந்தநாள் பார்ட்டி கொண்டாட அனுமதி மறுத்த அதிகாரிகளை பயமுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார். திடீரென தனது மார்பில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீயைப் பற்றவைத்துள்ளார். இதனால் பதறிய அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது உயிருக்கு ஆபத்து இல்லை என்ற நிலையைத் தாண்டி பிழைத்துக்கொண்டாலும் வாங்மீது ஒழுங்கற்ற நடத்தை விதிகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளனர் உள்ளூர் அதிகாரிகள்.

எறும்புத் தின்னிகளிடமிருந்து பரவியதா கொரோனா வைரஸ்.. ஆய்வு முடிவு சொல்வது என்ன?
அடுத்த கட்டுரைக்கு