Published:Updated:

‘ஜனவரி 21ல் போன்கால்; ஒப்பந்தம் போட்ட ஜின்பிங்..?’- WHO-வை பதறவைத்த ஜெர்மன் பத்திரிகைச் செய்தி

WHO
WHO

சீன அதிபரும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து, கொரோனா பரவல் தொடர்பான தகவலை மறைத்துவிட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

கொரோனாவால் தற்போது உலகம் கடுமையான இன்னல்களைச் சந்தித்துவருகிறது. இதற்கு மொத்த காரணமும் சீனா தான் எனப் பல நாடுகள் குற்றம் சுமத்திவருகின்றன. வைரஸ் பரவத்தொடங்கிய உடனேயே அது பற்றி எச்சரித்திருந்தால், இவ்வளவு பெரிய பாதிப்பு நிகழ்ந்திருக்காது. ஆனால் சீனா, வைரஸ் பரவலை வேண்டுமென்றே மறைத்து, உண்மையை வெளியில் கூறவில்லை என ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற பல நாடுகள் தெரிவித்துள்ளன.

டெட்ரோஸ் - ஜின்பிங்
டெட்ரோஸ் - ஜின்பிங்

அதேநேரம், உலக சுகாதார அமைப்பு சீனாவுடன் இணைந்துகொண்டு, வைரஸ் பரவல் பற்றி எச்சரிக்கவில்லை என்றும், சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சீன அதிபர் ஆகிய இருவரும் இணைந்து, வேண்டுமென்றே கொரோனா பரவலை மறைத்ததாக ஜெர்மனி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

‘தவறு செய்யாதீர்கள்; நாம் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது!’ - உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை

ஜெர்மனியைச் சேர்ந்த டெர் ஸ்பீகல் (Der Spiegel) என்ற ஊடகம், அந்நாட்டின் தேசியப் புலனாய்வு அமைப்பு கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில், “சீனாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட பிறகு, ஜனவரி 21-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸை போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, கொரோனா மனிதருக்கு மனிதர் பரவும் என்பதை தற்போதைக்கு வெளியில் சொல்ல வேண்டாம் என ஜின்பிங் கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி டெட்ரோஸும் கொரோனாவைப் பற்றி முன்னரே எச்சரிக்கவில்லை’ என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

WHO - டெட்ரோஸ்
WHO - டெட்ரோஸ்

இந்தச் செய்தியை முற்றிலும் மறுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “டெர் ஸ்பீகல் பத்திரிகை குறிப்பிட்டுள்ளதைப் போல ஜனவரி 21-ம் தேதி டெட்ரோஸ் எந்த போனும் பேசவில்லை. அந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது. இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை. உலக சுகாதார மையம் சீனாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை.

`மோசமான விளைவுகளை நாம் இன்னும் சந்திக்கவில்லை..!’ -WHO எச்சரிப்பதன் காரணம் என்ன? #Corona

கொரோனா பரவலை முடிவுக்குக் கொண்டுவர உலக சுகாதார அமைப்பு செய்துவரும் முயற்சிகளைத் திசைதிருப்பவே இத்தகைய தவறான அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. மேலும், ஜனவரி 20-ம் தேதி கொரோனா மனிதருக்குப் பரவும் என்பதை சீனா உறுதிசெய்துவிட்டது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 22-ம் தேதி உலக சுகாதார அமைப்பு இந்தத் தகவலை உலக நாடுகளுக்கு அறிவித்துவிட்டது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விவகாரத்தில் சீனாவையும் உலக சுகாதார அமைப்பையும் உலக நாடுகள் குற்றம் சுமத்திவரும் இந்த நேரத்தில், இப்படி ஒரு செய்தி பரபரப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு