Published:Updated:

`கொரோனாவைவிடக் காலநிலை மாற்றம் பேராபத்தாக இருக்கும்!’ - எச்சரிக்கும் பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்

கொரோனாவைவிடக் காலநிலை மாற்றம் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகக் கொரோனா தொற்று நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறது. மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கின்றனர். வேலை பாதுகாப்பின்மை, மன அழுத்தம் மற்றும் பிற பல்வேறு சவால்களை உலக மக்கள் எதிர்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் இந்த எல்லா போராட்டங்களும் இடையில் உருவாக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்து நம்மை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையில் அனைவரும் தங்கள் நாள்களைக் கழித்து வருகின்றனர்.

காற்று மாசு
காற்று மாசு

இந்நிலையில் கொரோனாவைவிடக் காலநிலை மாற்றத்தால் உருவாகும் ஆபத்து பெரிய அளவில் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ். இவர் பல ஆண்டுகளாகவே உலகின் காலநிலை தொடர்பான விஷயத்தைப் பற்றிப் பேசி வருகிறார். இதற்கிடையில் கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு குறித்துப் பேசியுள்ள அவர், ``இந்த ஆண்டு உலகம் முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கால் எவ்வளவு கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு குறைந்துள்ளது என்பதை ஆய்வாளர்கள் தெரிவிக்க மறுத்துள்ளனர். ஆனால், சர்வதேச எரிசக்தி நிறுவனம் 8% குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது ஒரு அர்த்தமுள்ள குறைப்பாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் இந்தக் குறைவு விகிதத்தைத் தொடர முடிந்தால் நாம் சிறந்த நிலையில் இருப்போம், துரதிர்ஷ்டவசமாக நம்மால் அதைச் செய்ய முடியாது. இந்த 8% குறைப்பு காரணம் என்ன என்பதைக் கவனியுங்கள். உலகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் கார், விமானம், வாகனங்கள் போக்குவரத்து கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டது. கண்டிப்பாக, இந்த சூழலை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், கார்பன் டை ஆக்ஸைடு வெளியீட்டைக் கட்டுப்படுத்த தவறினால் கொரோனாவுக்கு இணையான மற்றொரு பேரழிவை மக்கள் சந்திக்க நேரிடும்.

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்

காலநிலை மாற்றத்தால் புவியின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. இப்படியே சென்றால் இன்னும் 40 ஆண்டுகளில் அதாவது, 2060-ம் ஆண்டில் கொரோனாவைப் போலவே அதிகளவில் மக்கள் இறக்க நேரிடலாம். மேலும், 2100-வது ஆண்டில் இந்த மதிப்பு ஐந்து மடங்கு அதிகரித்திருக்கும். தற்போது கொரோனாவால் ஒரு லட்சத்துக்கு 14 பேர் என்ற கணத்தில் உயிரிழப்பு பாதிப்பு ஏற்படுகிறது. அதுவே காலநிலை மாற்றத்தால் அதிகபட்சம் எனில் ஒரு லட்சத்துக்கு 73 உயிரிழப்புகளும் குறைந்தபட்சமாக ஒரு லட்சத்துக்கு 10 பேர் வரை உயிரிழக்க நேரிடும். கொரோனாவைவிடக் காலநிலை மாற்றம் மிக மோசமான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது இருக்கும் ஆபத்து பெரியதுதான், அதே நேரம் நாளைய ஆபத்து குறித்தும் அந்தந்த நாடுகள் முறையாகத் திட்டமிடுவது அவசியமான ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு