Published:Updated:

துபாய் மன்னரின் மகள் தப்பி ஓட்டம்... மன்னருக்கு உதவிய இந்திய அரசு! பின்னணி என்ன?

ஷேக் முகமது - ஹேயா
ஷேக் முகமது - ஹேயா

துபாய் மன்னர், தன் மனைவி மற்றும் பெண் குழந்தைகளைத் துன்புறுத்தியதைக் கண்டித்திருக்கிறது லண்டன் நீதிமன்றம். இந்தப் பிரச்னையில் திடீர் திருப்பமாக, இந்தியாவின் பி.ஜே.பி அரசு, காங்கிரஸ் கட்சியைப் பழிவாங்க துபாய் மன்னருக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பது எதிர்பாராத திருப்பமாகும்.

வெளியுலகத்திற்கு தங்களைப் 'பெரிய மனிதராக' வெளிப்படுத்திக்கொள்ளும் அதிகார பலம் கொண்ட மனிதர் ஒருவர், தன் வீட்டுப் பெண்களை நடத்திய விதமும், அது சர்வதேச அளவில் பல நாடுகளின் அரசுகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் அதிர்ச்சியைத் தருகிறது. உலகில் அதிக பணம் புழங்கும் மத்தியக் கிழக்கு நாடான துபாயின் மன்னர், தன் மனைவி மற்றும் பெண் குழந்தைகளைத் துன்புறுத்தியதைக் கண்டித்திருக்கிறது லண்டன் நீதிமன்றம். இந்தப் பிரச்னையில் திடீர் திருப்பமாக பி.ஜே.பி அரசு, காங்கிரஸ் கட்சியைப் பழிவாங்க துபாய் மன்னருக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறது என்பது யாரும் எதிர்பாராததாக அமைந்திருக்கிறது.

துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபராகவும், பிரதமராகவும் பதவி வகிக்கிறார். சர்வதேச அரசியலில் செல்வாக்கு பெற்ற முகம் அவருடையது. உலக அளவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட டாப் 10 அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுள் ஷேக் முகமதுவுக்கு தனி இடம் உண்டு. காலனிய ஆட்சிக்குப் பிறகு, துபாயின் பொருளாதார முன்னேற்றத்தின் பின்னணியில் உழைத்தவராகக் கருதப்படுபவர், ஷேக் முகமது. உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா, இவரது முயற்சியால் கட்டப்பட்டது. சர்வதேச குதிரைப் பந்தயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவரான இவர், உலகம் முழுவதும் பந்தயங்களுக்காக உயர் ரக குதிரைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இவர், பழைமையான அரேபிய மொழி இலக்கியத்தின் தீவிர வாசிப்பாளர், கவிஞர்.

துபாய் மன்னர் ஷேக் முகமது
துபாய் மன்னர் ஷேக் முகமது
`17 ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மாயம்.. `ஸ்விட்ச்-ஆஃப்' சிந்தியா!'- சிக்கலில் கமல்நாத் அரசு

ஷேக் முகமது, ஆறு முறை திருமணம் செய்தவர். அவருக்கு 9 மகன்களும் 14 மகள்களும் உள்ளனர். ஷேக் முகமதுவின் ஆறாவது மனைவி, ஹேயா பின் அல் ஜூசைன். ஹேயா, ஜோர்டான் நாட்டின் இளவரசி. கடந்த 2004-ம் ஆண்டு, ஷேக் முகமதுவும் ஹேயாவும் திருமணம் செய்துகொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு, இருவரும் விவாகரத்துசெய்துகொண்டனர். ஷேக் முகமதுவின் வீட்டில் வசிக்கும் பெண்கள், வீட்டை விட்டு தப்பித்துச் செல்வது, கடந்த ஆண்டுகளில் வழக்கமாக நடைபெற்றுவருகிறது. முதலில், அவரது மகள்கள் ஷம்சா அல் மக்தூம், லதீஃபா அல் மக்தூம் ஆகியோர் தப்பித்துச் சென்றனர். தற்போது, அவரது மனைவி ஹேயா லண்டனுக்கு தப்பிச் சென்றிருக்கிறார். இதுதொடர்பான நிகழ்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறது லண்டன் உயர் நீதிமன்றம்.

2000-ம் ஆண்டில், ஷேக் முகமதுவின் பிடியிலிருந்து தப்பித்தார் அவரது மகள் ஷம்சா அல் மக்தூம். அப்போது, அவருக்கு வயது 19. குடும்பத்தோடு லண்டனுக்கு பயணித்தபோது, தன் குடும்பத்தினரிடமிருந்து விலகிய ஷம்சா, தனது நண்பர்களோடு இணைந்து தப்பித்தார். குடும்பத்தினரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, சில வாரங்கள் அவர் தனது நண்பர்களின் அப்பார்ட்மென்ட்டில் தங்கியதாகக் கூறப்படுகிறது.

ஷம்சா அல் மக்தூம்
ஷம்சா அல் மக்தூம்

எனினும், சில வாரங்களிலேயே லண்டன் நகரத்தின் காம்பிரிட்ஜ் தெருவில் ஷம்சா கடத்தப்பட்டதோடு, துபாய்க்கு தனி விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க முன்வந்த பிரிட்டிஷ் காவல்துறையினருக்கு துபாய் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், துபாய் மன்னர் ஷேக் முகமதுவும், பிரிட்டன் அரசியும் நண்பர்கள் என்பதால், இந்த வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது. 2000-ம் ஆண்டு, துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷம்சா, ஏறத்தாழ 20 ஆண்டுகளாக வெளியுலகிற்குக் காட்டப்படாமல் இருக்கிறார்.

ஷம்சாவின் விவகாரம் இப்படியிருக்க, அவரது தங்கை லதீஃபா, இரண்டு முறை தப்பிப்பதற்காக முயன்று தோற்றுள்ளார். 2002-ம் ஆண்டு, ஓமன் நாட்டுக்கு தப்பித்த லதீஃபா, தனது தந்தையின் ஆட்களிடம் பிடிபட்டு, மீண்டும் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார். அடுத்த மூன்று ஆண்டுகள் லதீஃபா தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதோடு, கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். தப்பிக்க முயன்று, தந்தையிடம் சிக்கி, கடும் சித்திரவதைகளை அனுபவித்த பிறகும், லதீஃபாவின் முயற்சி நின்றுவிடவில்லை.

லதீஃபா அல் மக்தூம்
லதீஃபா அல் மக்தூம்

இரண்டாவது முறையாக, கடந்த 2018-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் துபாயிலிருந்து தப்பித்தார் லதீஃபா. துபாயில் அரண்மனையில் வசித்த போதும், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வாழ நேர்ந்ததாகவும், எங்கு சென்றாலும் பின்னால் பாதுகாவலர்கள் தொடர்வதாகவும் கூறியுள்ளார். மேலும், தன் தந்தையும் துபாய் மன்னருமான ஷேக் முகமது, தன்னை வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்குட்பட்ட நாடுகளில் பயணம் செய்வதற்கும் தடைவிதிப்பதாகக் கூறியுள்ளார். எனினும், ஸ்கை டைவிங் கற்றுக்கொள்வதாக லதீஃபா தனது குடும்பத்திடம் கூறிவிட்டு, தப்பிப்பதற்கான திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, பின்லாந்தைச் சேர்ந்த தனது தோழியோடு இணைந்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னாள் உளவாளி ஒருவருக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் தந்து வந்துள்ளனர். அரபிக்கடல் வழியாக இந்தியாவை அடைந்து, இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று, அங்கு தஞ்சம் அடைவதுதான் லதீஃபாவின் திட்டம். அவரது திட்டத்தைச் சரியாக செயல்படுத்தியும் இருக்கிறார்.

2018-ம் ஆண்டு மார்ச் 4ல், இந்தியாவுக்கு உட்பட்ட அரபிக்கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, லதீஃபா இருந்த கப்பல் இந்திய கடற்படையிடம் சிக்கியது. இந்திய கடற்படை கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசியதாகவும், தான் இருந்த கப்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் லண்டன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார், லதீஃபாவின் தோழி. லதீஃபாவும் அவரது தோழியும், இந்திய வீரர்களால் பிடிக்கப்பட்டனர். இந்திய வீரர்கள், இவர்கள் இருவரிடமும் "உங்களில் லதீஃபா யார்?" என்று தொடர்ந்து உரத்த குரலில் கத்திக்கொண்டே மிரட்டியதாகத் தெரிகிறது. தான் இந்தியக் கடற்படையால் பிடிக்கப்பட்டு, மீண்டும் தன் தந்தையின் ஆட்களிடம் ஒப்படைக்கப்பட்டதை வாக்குமூலமாகப் பதிவுசெய்து, யூடியூப் தளத்தில் பதிவேற்றியுள்ளார் லதீஃபா.

லதீஃபா சென்ற கப்பலில், அவரோடு இருந்த 6 பேரைப் பிடித்த இந்திய அரசு, அவர்களின் கப்பலைத் தாக்கியதோடு, உடைமைகளையும் திருடியதாக, லதீஃபாவின் வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும், இந்தியாவிடம் தஞ்சம் கேட்டுக் கதறிய லதீஃபாவை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது இந்திய அரசு. லதீஃபாவை ஒப்படைப்பதற்காக மற்றொரு டீலிங்கை முடித்துள்ளது மத்திய அரசு. எனினும் இந்த விவகாரத்தை, இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மறுத்துள்ளன.

இந்திய அரசியல்வாதிகளுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதற்கான வியாபாரத்தில், 2006 முதல் 2007 வரை, மத்திய அரசில் காங்கிரஸ் கட்சி ஆட்சிசெய்தபோது, ஏறத்தாழ 3700 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக, 2013-ம் ஆண்டு அம்பலமானது. இந்த ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், இந்தியாவுக்கும் ஹெலிகாப்டர் தயாரிக்கும் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திற்கும் தரகராக இருந்தவர் கிறிஸ்டியன் மிஷேல். இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த கிறிஸ்டியன் மிஷேல், துபாயில் தங்கியிருந்தார்.

க்றிஸ்டியன் மிஷேல்
க்றிஸ்டியன் மிஷேல்

2018-ம் ஆண்டு மார்ச் மாதம், துபாய் மன்னரின் மகள் லதீஃபாவை சட்டவிரோதமாகத் திருப்பி ஒப்படைத்த இந்தியா, அதற்குக் கைம்மாறாக துபாயில் இருக்கும் கிறிஸ்டியன் மிஷேலை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரியது. துபாயும் சம்மதிக்க, 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் கிறிஸ்டியன் மிஷேல். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்வதற்காக மிஷேல் அழைத்துவரப்பட்டதாகவும் கூறப்பட்டது. துபாய் அரசு வழக்கறிஞர்களிடம் பேசிய மிஷேல், "மன்மோகன் சிங் அரசு ஆட்சியில் இருந்தபோது, நான் இந்திய அரசோடு பணியாற்றினேன். என்னை தற்போது இந்த வழக்கில் சிக்கவைத்து, முன்னாள் அரசுக்கு எதிராக சாட்சி கூற வற்புறுத்துகிறார்கள். நான் லஞ்சமாக எந்தப் பணத்தையும் பெறவில்லை. என்னை நாடு கடத்தியதே சட்டவிரோதமானது" என்று கூறியுள்ளார்.

'ஹெலிகாப்டர் ஊழல்' என்று அழைக்கப்படும் இந்த ஊழலில், சோனியா காந்தியின் ஆலோசகர் அகமது படேல் ஆதாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, ப.சிதம்பரத்தை ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கைதுசெய்த பி.ஜே.பி அரசு, அடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் அகமது படேலைக் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்டியன் மிஷேல் கைதுசெய்யப்பட்டபோது, பி.ஜே.பி-யின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல் நரசிம்ம ராவ், "மிஷேல், காந்தி குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்பவர். அவரைக் கைதுசெய்திருப்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த குடும்பத்திற்குத் தலைவலியாக இருக்கப்போகிறது" என்று பேட்டியளித்திருந்தார்.
சோனியா காந்தி - ராகுல் காந்தி - அகமது படேல்
சோனியா காந்தி - ராகுல் காந்தி - அகமது படேல்

ஷம்சா, லதீஃபா ஆகியோரின் தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பிறகு, ஷேக் முகமதுவிடமிருந்து தப்பியிருக்கிறார், அவரது மனைவி ஹேயா. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம், தன் இரண்டு குழந்தைகளுடன் லண்டனுக்கு தப்பிச்சென்ற ஹேயா, ஷேக் முகமதுவை எதிர்த்து விவாகரத்து வழக்கு ஒன்றை லண்டன் நீதிமன்றத்தில் தொடுத்தார். தனது குழந்தைகளைத் தன்னிடம் அனுப்புமாறு, ஷேக் முகமது நீதிமன்றத்தில் பதில் மனு அளித்தார். அப்போது ஹேயா, ஷம்சா, லதீஃபா முதலானோருக்கு ஏற்பட்ட நிலையே தனக்கும், தன் குழந்தைகளுக்கும் ஏற்படும் எனவும், தான் துபாய் திரும்பப்போவதில்லை எனவும் கூறினார்.

ஷேக் முகமது தரப்பில், ஹேயா தனது பாதுகாவலருடன் உறவு வைத்திருந்ததாகவும், அதனால் விவாகரத்து செய்ததாகவும் கூறப்பட்டது. ஹேயா தரப்பில், தனது பாதுகாவலருடனான உறவை ஒப்புக்கொண்டதோடு, அது 2017 -ம் ஆண்டில் நடந்தது எனவும், 2018-ம் ஆண்டுக்குப் பிறகு லதீஃபா மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது, அவர்மீது ஹேயா தனிக்கவனம் செலுத்தியதால் ஹேயா குறிவைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், வழக்கு விசாரணையின்போது, ஷேக் முகமது தனது 11 வயது மகளை சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு திருமணம் செய்துவைக்க முயன்றதை அம்பலப்படுத்தினார் ஹேயா.

லண்டன் நீதிமன்றத்தின் நீதிபதி, சர் ஆன்ட்ரூ மெக்ஃபார்லேன் இறுதியாக அளித்துள்ள தீர்ப்பில், துபாய் மன்னர் ஷேக் முகமது தன் மகள்கள் ஷம்சா, லதீஃபா ஆகியோரைப் பிணைக் கைதிகளாக வைத்துள்ளதையும், தனது முன்னாள் மனைவி ஹேயாவைத் துன்புறுத்தியதையும் விசாரணைகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ஹேயாவின் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும், மற்றொரு கடத்தல் சம்பவத்தை பிரிட்டிஷ் மண்ணில் அனுமதிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும், லதீஃபாவைக் கடத்துவதற்கு இந்தியா உதவியதாகவும் இந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் வழக்கி விசாரணையில் ஹேயா
லண்டன் வழக்கி விசாரணையில் ஹேயா
ஜி.கே.வாசனை எம்.பி.யாக்கும் பி.ஜே.பி...  பின்னணி என்ன?

ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கும், பிரிட்டனுக்கும் இடையில் சீரான உறவு தொடரும் சூழலில், இப்படியான தீர்ப்பு, இருநாட்டு உறவையும் பாதிக்கும் என சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனினும், ஐக்கிய அரபு நாடுகளில் அதிக செல்வச் செழிப்போடு வாழும் 'பெரிய' மனிதர்களின் ஆணாதிக்க வெளிப்பாட்டையும், அந்த நாடுகளில் தொடர்ந்து நீடிக்கும் மனித உரிமை மீறல்களையும் சர்வதேச அரங்கில் ஒலித்திருக்கிறது, இளவரசி ஹேயாவின் வழக்கு.

அடுத்த கட்டுரைக்கு